240 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் காலத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துவங்கங்கப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடந்த 5 ஆண்டுகள் முன்னர் வரை பன்மடங்கு வளர்ந்து, பல்கிப் பெருகியது. ஆனால், பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து ஐந்தே ஆண்டுகளில், 140 தோல் பதனிடும் நிலையங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. (இஸ்லாமியர்களின், சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை, மாடு வெட்டுவதைத் தடை செய்தது மூலம் இந்தத் தொழில் நேரடியாக பாதிப்புக்குள்ளானது)

வரலாற்றுப் பின்னணி:

1778-ல் கிழக்கிந்தியக் கம்பெனி கான்பூரில் அடியெடுத்து வைத்தபோது, தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலைகள் பில்க்ராம் எனும் நகரில் முகாமிட்டிருந்த அவர்கள், அவத் நவாப் அனுமதியுடன் தங்களது இராணுவ முகாமை கான்பூருக்கு மாற்றினர். அந்த ஊரின் தலித் சமூகத்தைச் சேர்ந்த கைவினைஞர்களைக் கொண்டு தங்கள் குதிரைகளுக்குச் சேணம், பிற தோல் பொருட்கள் தயாரிப்பும் செய்தனர்.

முகாமிட்ட 20 ஆண்டுகளில், அதாவது, 1798-க்குள், கான்பூர் மொத்தமும் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தோல் தொழிலும் செழித்து வளர்ந்தது. அதில் குறிப்பாக மஷ்க் எனப்படும் பொருள் (தண்ணீர் எடுத்துச் செல்லும் தோல் பை) தோல் பதனிடும் தொழிலை வளர்த்தது. பபூல் மரப்பட்டைகளை வைத்துத் தோலை பதனிட்டு வந்தனர். 1840ல், கான்பூரில் தயார் செய்யப்பட்ட சேணம், இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1857 கலகத்துக்குப் பின், ராணி விக்டோரியாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொழில் கொழித்து வந்த சமயம், 1859-ல் கர்னல் ஜான் ஸ்டீவார்ட் என்பவரால் முதல், அரசு சேண மற்றும் கவச தொழிற்சாலை நிறுவப்பட்டது. விரைவிலேயே, கூப்பர் ஆலன், போன்ற நிறுவனங்களும் முளைத்தன.

1902-ல் முதல் தோல் தொழிற்சாலை, ஜஜ்மாவில் தொடங்கப்பட்டு வளர்ந்தது. தொடக்கத்தில் அவை அனைத்துமே இஸ்லாமியர்கள் வசம் இருந்தது. பிறர், துணி / மாவு மில் / சணல் போன்ற தொழிலைச் செய்துவந்தனர். இந்த அதிவேக வளர்ச்சி, கான்பூரை கிழக்கின் மான்செஸ்டராக மாற்றியது.

நையேர் ஜமால் என்பவர் தனது பரம்பரைத் தொழிலான தோல் பதனிடும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்தார். ஆனால் இன்றோ அவர் வேலையின்றி, தனது சக தொழில் செய்வோருடன் கூடி தம் தொழில் நசிந்து போனது பற்றி புலம்பி வருகிறார். 1947, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 13 பதனிடும் தொழிற்சாலைகளே இருந்தன. 1995ல் 175 ஆகவும், பின்னர் 402 ஆகவும் உயர்ந்தது. கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட நசிவு காரணமாக, 260 தொழில் நிலையங்களே உள்ளதாக ஜமால் கூறுகிறார்.

விவாதப் பொருளும் அதன் விளைவுகளும் :

ப்ரயாக்ராஜில் 2019 கும்பமேளாவில், பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவர். தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கங்கையில் கலப்பது, விழாவை பாதிக்கும் என்று கூறி, மார்ச் 2019க்குள் 250 தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவிட்டது. (கங்கை சுத்திகரிப்புக்கு ஒதுக்கிய நிதி பற்றிப் பேசினால் நாம் தேச விரோதி) வழக்கமாக, கும்பமேளா முடிந்த பிறகு மீண்டும் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். இம்முறை அவ்வாறு நடக்கவில்லை. இதற்கு மேல் கான்பூரில் தொழில் நடத்துவது சாத்தியமில்லையென, தோல் தொழில் முதலாளிகள் மேற்கு வங்கத்துக்குக் குடிபெயர்வது பற்றி யோசித்து வருகின்றனர். மேற்கு வங்க அரசு தோல் தொழில் நடத்த உகந்த கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும், இழந்த வாழ்வை மீட்க அது உதவும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

தொழில் முடக்கத்தால் 3000 கோடி நட்டமடைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கான்பூர், ஏற்றுமதி மூலம், 6000 கோடி வருவாய் ஈட்டி வந்தது. தொழிலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை, பழைய ஆர்டர்களையும் முடிக்க இயலவில்லை. ஹாங்காங்கில் நடைபெறும் தோல் கண்காட்சிக்கு மாதிரிகளை அனுப்பக்கூட முடியாத துயரமான சூழல் நிலவுகிறது. வருடத்துக்குப் 12000 கோடி வருவாய் ஈட்டித் தந்தது கான்பூர்! (இன்று அதில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் பிழைப்பதே பெரிய காரியமாகிவிட்டது)

தொடர்ந்து இயங்குவதில் மிகக் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வரும், கான்பூரின் ஜஜ்மாவு நகர, தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தங்களிடம் இருக்கும் பதனிடப்படாத தோலை, உன்னாவோ நகரில், இயங்கும் நிலையில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கின்றன. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 முதல் 20 லட்சம் மதிப்புள்ள ட்ரம்கள், இயங்காமல் இருந்தால் கெட்டுப்போகும். அவை வங்கிக்கடன் மூலம் வாங்கப்பட்டவை. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இவை ஏலம் போகும் நிலை ஏற்படும். (இப்படி பாடுபட்டுக் கட்டும் வங்கிக் கடன்கள் பெரு முதலாளிகளின் கைக்கிப் போய் சேர்ந்து இறுதியில் வராக்கடன்களாகி வங்கிகளையே திவாலாக்குகின்றன).

எஞ்சியுள்ள தோலை ஏலம் போட்டு வங்கிகள் தமக்குச் சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொள்கின்றன. ஜஜ்மாவு தொழிற்சாலைகள் மட்டும் ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. தொழில் நட்டமடைந்த நிலையில், அதில் வேலை செய்து வந்த பல தொழிலாளிகளும் பிழைப்புத் தேடிப் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். 1000 கோடி அளவிலான வெளி நாட்டு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டன.

(ஆக, மோடியின் வெளி நாட்டுப் பயணங்களால் விளைந்த ‘நன்மை’ இவைதான் போலும்!)

தற்போதைய நிலை:

தோல் தொழில் முதலாளிகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு மே 23, 2019 அன்று நீதிமன்றத்துக்கு வருவதாகத் தகவல் வந்தது. தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய அம்மாநில அரசு, 225 தொழிற்சாலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தது. இதை எதிர்த்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையைப் பல மணி நேரம் மறித்துப் போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்கள் கல்லெறிவதைத் தடுக்கவும், கூட்டத்தைக் கலைக்கவும் போலீஸ் தடியடி நடத்தியது.

தொழிற்சாலை வளாகத்தில் பல குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ரமலான் மாதத்தில் இப்படியான நடவடிக்கை மிகுந்த சிரமத்தை தருமெனவும் கூறினர். திசம்பர் மாதம் முதல் 225 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 28 ஆலைகள் பாதித் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. ஆலைக் கழிவுகள் கான்பூரிலிருந்து அலகாபாத் சென்று கங்கையில் கலக்க 3 நாட்கள் ஆகும். எனவே, ஷாஹி ஸ்னான் எனப்படும் கும்பமேளா புனித நீராடலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தாங்களே ஆலையை மூடிவிடுவதாகக் கூறுகின்றனர், ஆலை முதலாளிகள்.

தொழிற்சாலை நடத்துவோர், உ.பி ஜல் நிகாம், பசுமைத் தீர்ப்பாயம் ஆகியன இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன. இதில் பிரதான புகார் கங்கை அசுத்தமாவது தான். (2014 – 2019 கங்கையைத் தூய்மை செய்யும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் ஊழல் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்). அனைத்து ஆலைகளும் ஒரு நாளைக்கு 6 மில்லியன் லிட்டர் கழிவை வெளியேற்றுகிறது. முதலில் இந்தக் கழிவுகள் ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு, வஜித்பூரில் இருக்கும் பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கு (CTEP) அனுப்பப்படுகிறது. அதன் பின்னரே அது கங்கையில் கலக்கிறது.

தொழிற்சாலை நடத்துவோரும், ஜல் நிகாமும் இணைந்து நடத்துவது தான் CTEP. ஆலைகள் கழிவு சுத்திகரிப்புக்கு மாதாந்திர தொகை கொடுக்கின்றனர். அதன் மொத்தத் திறன் 36 மில்லியன் லிட்டர் ஆகும். இது உ.பி ஜல் நிகாம் எனப்படும் மாநில அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தோல் தொழிற்சாலைகள் அதன் முழு திறன் அளவுக்குக் கழிவு நீரை வெளியேற்றாமல் அது எப்படி நிறைகிறது? என்று ஒரு கேள்வி வருகிறது. மற்ற ஆலைகள், குடியிருப்புப் பகுதியிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் இதில் கலந்தாலும், தோல் தொழிலே குறி வைத்து தாக்கப்படுகிறது.

அரசியல் விளையாட்டு :

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, “பெக் பாக் விரைவில் காணாமல் போகும்”. அது உண்மையாகி வருகிறது. ஏற்கெனவே பல கடைகள் துணிக்கடைகளாக மாறிவிட்டன. அந்தக் கழகத்தில் இருந்த 500 உறுப்பினர்களில் பாதிப் பேர் தொழிலை விட்டு நீங்கிவிட்டனர். மற்றவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். வாரம் ஒருமுறைதான் தோல் வந்து இறங்குகிறது. விலையும், ஒரு லோடு 15 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. பாதிக்குப் பாதி விலை வீழ்ந்த நிலையில், குறைந்தபட்சம் போட்ட முதல் கூட திரும்பப் பெற முடியாததால், தொழிலைத் தொடர்வது சாத்தியமில்லை என்கின்றனர்.

கான்பூர் வாசியான, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, டாக்டர். இம்ரான் ஐட்ரிஸ் கூறும்போது, இத்தொழிலில் பிரதானமாக இஸ்லாமியரே ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பெரும்பாலானோர் தலித்துகள். தொடக்கம் முதலே, கால்நடைகளின் தோலைத் தொட்டு வேலை செய்ய இந்த இரு பிரிவினரே முன் வந்தனர். ஏனையோருக்கு மத ரீதியான ஒரு ‘புனிதத்துவம்’ இத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் தமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்த பா.ஜ.க., இத்தொழிலை நலிவடைய வைத்தது. அதற்கு கங்கையின் புனிதமும், பசு புனிதமும் முன்னிறுத்தப்பட்டது.

இதன் விளைவுகள் தொலைதூர கிராமங்களிலும் பிரதிபலிக்கின்றன. செத்த மாட்டுத் தோலை உறிப்பது தலித்துகள் தான். தோலை உறித்து எடுத்து வரும்போது தாக்கப்படுவோமென அஞ்சி அதை செய்யாமல் தவிர்க்கின்றனர். அதனால் நிவர்த்தியின்றி தொழில் முடங்கிவிட்டது.


மொழிபெயர்ப்பு:
பிரியா
நன்றி : சப்ரங் இந்தியா
new-democrats தளத்தில் வெளியான கட்டுரை.

1 மறுமொழி

  1. புனிதம், நிர்வாக சுத்தம், கள்ளப் பணம், தீவிரவாதம் எனும் பல பெயர்களில் இந்திய தொழில்களையும் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தையும் வன்புணர்வு செய்து வருகிறார்கள் காவிக் கயவாளிகள். ஒருபுறம் தோல் தொழில்களை கொன்றொழித்து மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக முன்னணி அடைந்து நமைப்பார்த்து குரூரமாக சிரிக்கிறார்கள்.
    ‘கலி’ முற்றிய இந்த யுகத்தில் மக்கள் வேதனையில் தேற்றவும் ஆளில்லாமல் கிடக்கிறார்கள்.
    மக்கள் ‘கல்கி’ அவதாரம் எடுக்க பிரார்த்தனைகளையும் யாகங்களையும் செய்வோம். குறைந்தபட்சம் ‘நரசிம்ஹ’ அவதாரமாவது எடுக்க வேலை செய்வோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க