12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நெருங்கியிருந்தது. 1000 மதிப்பெண்களை எடுத்தால் ஹீரோ பேனா வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார் கணேஷ் அண்ணன். என் அண்ணனின் நண்பர் அவர். மற்ற பாடங்களிலெல்லாம் சமாளித்து விடுவேன். இந்தக் கணக்குதான் என்னைப் பலியெடுத்தது. வகுப்பில் என்னையும் கார்த்திக் என்ற இன்னொரு மாணவனையும் தவிர அனைவரும் என்.சி.சி. மாஸ்டரிடம் டியூசன் செல்வார்கள். அவர்தான் கணக்குக்கும் ஆசிரியர். கணக்கிலும், காசிலும் கறார் பேர்வழி. டியூசன் சேரவில்லை என்ற காரணத்தால் ஒவ்வொரு கணக்கு வகுப்பிலும் எனக்கும் கார்த்திக்குக்கும் சிறப்புப் பூசைகள் விழும். தினமும் இதே கதைதான். அவர் தெளிவாக இருந்தார். ஒன்று டியூசன் சேரவேண்டும் இல்லையென்றால் பள்ளியைவிட்டு நின்றுவிட வேண்டும். அவ்வளவுதான்.

டியூசன் சேரவேண்டும் என்று சொன்னால் வீட்டிலும் அதைத்தான் சொல்லப்போகிறார்கள். சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது டியூசனுக்கு மாதம் 60 ரூபாயை யார் தருவார்? இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது நின்றுவிடலாம் என்று எனக்குள் தோன்றிய என்னத்தை மாற்றியவர் எங்கள் தெரு வாசி பான்பராக் பாலு. கொஞ்சம் படித்தவர். எனக்கு மாலை நேரங்களில் கணக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் கணக்கில் 86 மதிப்பெண் எடுத்திருந்ததால் ‘ உனக்கு கணக்கு நல்லா வருது நீ மேக்ஸ் குரூப் எடுத்துக்கோ..’ என்று என்னை இதில் தள்ளியவர் அவர்தான். 10-ம் வகுப்புக் கணக்குக்கும் 12-ம் வகுப்புக் கணக்குக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்ததுதான் என் துரதிர்ஷ்டம். அந்தக் கழிவிரக்கத்தாலோ என்னவோ எனக்கு தினமும் வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

958 மதிப்பெண்கள். பள்ளியில் 4-ம் இடம். ஆயிரம் மதிப்பெண் எடுக்காதபோதும் என்னை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேனா வாங்கிக் கொடுத்தார். ஹீரோ பேனா என்பது அப்போது என்னைப்போன்ற ஆட்களுக்குப் பெருங்கனவு. வாஞ்சையோடு அதைத் தடவிப்பார்த்த நினைவுகள் இன்னும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது.

மேற்கொண்டு என்ன படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. திட்டமிட்டு வழிநடத்தவும் குடும்பத்தில் யாருமில்லை. பான்பராக் பாலுவும் அப்போது வீடு மாறிச் சென்றிருந்தார். சொல்லப்போனால் மேற்கொண்டு என்னைப் படிக்க வைப்பார்களா என்ற நம்பிக்கையும் இல்லாத காலம் அது. நோயாளி அப்பா. குடும்பத்தின் ஒரே வருமானம் அண்ணன் மட்டுமே.

எதற்கும் இருக்கட்டுமென்று இளங்கலை இயற்பியல், இளங்கலை வேதியியல் இரண்டுக்கும் விண்ணப்பித்திருந்தேன். எங்கள் காம்பவுண்டில் குடியிருந்த ஒரு பெரியவர் ரியாசுதீன். அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக இருந்தார். அவரது ஆலோசனைப்படி சென்னை கிண்டி இன்ஸ்டிட்டியூட்டில் லேப் டெக்னீசியன் 3 ஆண்டுப் படிப்புக்கும் விண்ணப்பித்திருந்தேன். மூன்று இடங்களிலும் சீட் கிடைத்தது.

கிண்டி இன்ஸ்டிட்டியூட்டில் படிப்பு முடிந்ததும் வேலையில் சேரும் உத்திரவாதத்தோடு அழைப்பு வந்திருந்தது. பெரியவர் ரியாசுதீனின் உறவினர் அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர்கள் அனைவரிடமும் அதைப் பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள் அது.

அந்த நாளும் வந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது 1650 ரூபாய் கட்ட வேண்டும். குடும்பம் கை விரித்து விட்டது. அந்தத் தொகையைக் கட்ட எங்கள் தெருவாசிகளில் சிலர் முன்வந்தார்கள்தான். ஆனால், அது மட்டும் போதாதே. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவேண்டும். அதுகூட அரசு விடுதியில் பெற்றுத்தருவதாகச் சொன்னார் ரியாசுதீன். புத்தகங்களுக்கு, தினந்தோறும் செலவுகளுக்கு. முக்கியமாக சாப்பாட்டுக்கு? பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இல்லாமல் இருந்திருந்திருந்தால் நானெல்லாம் 12-ம் வகுப்புகூட படித்திருக்க முடியாது. மதியம் சத்துணவு, இரவுக்கு பள்ளியில் வழங்கிய சத்து மாவு. இப்படித்தான் கழிந்தது. இதெல்லாம் கிண்டி இன்ஸ்டிட்டியூட்டில் கிடையாதாம். எனக்கு எதார்த்தம் புரியக்கூடிய வயதுதானே அது. அம்மா என் முகத்தைப் பார்க்கத் தயங்கி விலகிப் போனதை உணர்ந்தேன். என் கல்வி ஆசையை நிறைவேற்ற முடியாத இயலாமை அவளை வதைத்துக் கொண்டிருந்தது. இரவுகளில் நான் தூங்கிவிட்டேனா என்று உறுதிசெய்துவிட்டுத் தலைமாட்டில் அமர்ந்து அழுவாள். அவளுக்குத் தெரியாமல் போர்வைக்குள் நான் அழுதுகொண்டிருப்பேன்.

இந்த அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினேன். அந்த அக்னாலட்ஜ்மெண்ட் அட்டையைக் கிழித்து எரிந்துவிட்டுச் சொன்னேன். ‘ நான் நாளைலர்ந்து வேலைக்குப் போறேன்..’

படிக்க:
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !
தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !

யாருமே எதுவுமே பேசவில்லை. மயான அமைதி நிலவியது. எங்கேயோ போய்விட்டு வந்த அக்கா கிழிந்து கிடந்த அட்டையைப் பார்த்துக் கதறி அழுதாள். கட்டுப்படுத்த முடியாமல் நானும் உடைந்து அழுதேன். அம்மாவும் அழுதாள். அன்று பிடித்த சுத்தியல் இன்றுவரை கீழே வைக்கவில்லை…

கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகள் பங்குபெற்ற புகைப்படத்தைப் பார்த்ததும் ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறது.. கல்வி என்பது கனவு லட்சியம் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன..?

முகநூலில் : Samsu Deen Heera

disclaimer