ரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு  மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன. இப்போராட்டங்களின் வளர்ச்சிப்போக்கு இந்திய அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லதாக இருக்கும்.

மோடியும் அவரது ஆதரவாளர்களும் வெற்றி அடைந்தால், மதச்சார்பின்மை, ஜனநாயகம், அறிவியல் உணர்வு ஆகிய மதிப்பீடுகளெல்லாம் இந்தியாவில் பெயருக்குக்கூட இல்லாது ஒழிக்கப்படும். அதற்கு மாறாக, மக்கள்திரள் போராட்டங்கள் வெற்றியடைந்தால், அவ்வெற்றி புதிய இந்தியாவைப் படைப்பதற்கான வாசலைத் திறந்துவிடுவதாக அமையும்.

இந்தப் போராட்டத்தைத் தோற்கடிக்கப் பார்ப்பன பாசிசக் கும்பலும் அவர்களது அடிவருடிகளும் இரண்டு வழிகளில் முயலுகிறார்கள். ஒன்று, மிகக் கொடூரமான, மிருகத்தனமான அடக்குமுறை; மற்றொன்று, அவதூறுகளின் மூலமும் பொய் வழக்குகளின் மூலமும் போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்துவது. எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் அதனைத் தொடர்ந்து வரவுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றையும் எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்த இரட்டைத் தாக்குதல்களை எதிர்கொண்டு தொய்வின்றி நடந்துவருகின்றன.

  • “இந்துக்களும் முசுலீம்களும் இணைந்துவிட்டால், நாஜியால் என்ன செய்துவிட முடியும்?”
  • “பாசிசத்திலிருந்து விடுதலை!”
  • “நாங்கள் குடியுரிமைக்கான சான்றுகளைத் தரமாட்டோம்; நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்!”
  • “எனது குடியுரிமையை நிரூபிக்குமாறு கேட்க நீ யார்?”

இவையெல்லாம் போராட்டத்தில் எதிரொலிக்கும் முழக்கங்கள்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் உரையாற்றிய ஒரு முஸ்லிம் மாணவன், “நான் இறக்கும் தருவாயில் மீண்டும் இங்கேயே பிறக்க அல்லாவிடம் வேண்டுவேன்” எனக் கூற, அதற்கு மற்றொரு மாணவன், “முஸ்லிம் மதத்தில் மறுபிறவி என்ற நம்பிக்கை கிடையாது” எனக் கிண்டல் செய்ய, அதற்கு அம்முஸ்லிம் மாணவன், இருக்கலாம்; “நான் பெங்காலியும்கூட” எனப் பதில் அளிக்க, அப்போராட்டக் களமே வெடிச்சிரிப்பில் மூழ்கியது.

மகாராஷ்டிராவில் மும்பய் நகரிலுள்ள கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் உடை அணிந்து நெற்றியில் குங்குமமும் இட்டு வந்த இளம் பெண், “உங்களை எது அதிகமாகக் காயப்படுத்துகிறது? எனது ஹிஜாபா, அல்லது நான் ஹிஜாப் அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டிருப்பதா?” எனக் கேட்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அக்கேள்வியை எதிரொலித்தார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதம் கடந்து உருவாகி வரும் இந்த ஒற்றுமையும், ஜனநாயக உணர்வும்தான் பார்ப்பன பாசிசக் கும்பலை அச்சங்கொள்ள வைக்கிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., பொருளாதார மந்தம், வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம், 370 முடக்கம் ஆகிய தாக்குதல்களைச் சகித்துக்கொண்டதைப் போன்று, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு  ஆகியவற்றையும் இந்திய மக்கள் பொறுத்துப் போவார்கள் என்ற அவர்களின் கனவு மண்கோட்டையாகச் சரிந்துவிட்டது.

படிக்க:
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
♦ நிதி மூலதன ஆட்சி !

***

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு என்ற இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்து நிற்பதில் முஸ்லிம்கள் முன்னணியில் நின்றாலும், இப்போராட்டம் முஸ்லிம் மத அடையாளத்தை முன்னிறுத்தி நடத்தப்படவில்லை. அவர்கள் பச்சைக் கொடிக்குப் பதிலாக மூவர்ண தேசியக் கொடியைக் கையில் ஏந்தி வருகிறார்கள்.

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டாம்” எனக் கூறிய டெல்லி ஜும்மா மசூதி இமாம் அகமது புகாரியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, பழைய டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம்கள் உ.பி.யைச் சேர்ந்த தலித் தலைவர் சந்திரசேகர் ராவணன் தலைமையில் திரண்டு போராடினார்கள். “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கம் அப்போராட்டத்தில் கேட்கவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தின் முகவுரையை முழக்கமாக எழுப்பினார்கள்.

டெல்லியில் மட்டுமல்ல, இராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா திவான் சையத் சைனுல் ஹுசைன் சிஸ்டியின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, இராஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பிற மதத்தினரோடு கலந்துகொண்டார்கள்.

இந்த இந்துத்துவ திரிசூலத்தை எதிர்த்த போராட்டம் முஸ்லிம் மாணவர்கள் பெருவாரியாகப் பயிலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டும் நடைபெறவில்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மேற்கு வங்கம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உ.பி. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் எனப் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நூற்றுக்கணக்கான கல்லூரிகளிலும் நடைபெற்றிருக்கிறது, நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசு இந்து மதவெறியோடு நடத்திய தாக்குதல்தான் இப்போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றியது.

மத வேறுபாடுகளைக் கடந்து, பல்வேறு வர்க்கங்கள் மற்றும் சமூகத் தட்டுக்களைச் சேர்ந்த பொதுமக்களை, குறிப்பாக, மாணவர்களை, இளைஞர்களைப் பெருவாரியாக ஈர்த்து, நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இந்து மதவெறிக்கு எதிராக மதச்சார்பின்மையையும், பாசிசத்திற்குப் பதிலாக ஜனநாயகத்தையும் முன்வைக்கின்றன என்றால், இப்போராட்டத்தை ஒடுக்க முயலும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இந்து மதவெறியையும் அரசு பயங்கரவாதத்தையும் இணைத்துக் கொண்டுள்ளன.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலும்; உ.பி. முஸ்லிம்கள் மீது யோகி ஆதித்யநாத் அரசு கட்டவிழ்த்துவிட்டு வரும் அடக்குமுறைகளும்; மோடி, அமித் ஷா தொடங்கி எச்ச.ராஜா வரையிலான பா.ஜ.க. தலைவர்கள் இப்போராட்டங்களைக் கொச்சைப்படுத்திக் கூறும் அவதூறுகளும் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.

***

.பி. முசுலீம்கள் மீது ஆதித்யநாத் அரசு நடத்திவரும் இந்து மதவெறி அரசு பயங்கரவாதக் கூட்டுத் தாக்குதலை, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தில் நடத்திய முஸ்லிம்படுகொலையோடு ஒப்பிட முடியும். “இந்துக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாது” என குஜராத் இனப்படுகொலையின்போது மோடி போலீசு அதிகாரிகளிடம் கூறினார் என்றால், “முசுலீம்களைப் பழிக்குப் பழித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என இந்து மதவெறியைக் கக்கித் தாக்குதலை நடத்திவருகிறார், ஆதித்யநாத்.

குஜராத்தில் பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் முசுலீம்கள் மீது நடத்திய தாக்குதலை குஜராத் போலீசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது என்றால், உ.பி.யிலோ போலீசு நண்பர்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்து மதவெறி குண்டர் படையும் போலீசும் இணைந்து முசுலீம்கள் மீது தாக்குதலை நடத்திவருகின்றன. பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் அவர்களது கையாட்களும் போலீசு நடத்திய தாக்குதலின் தளபதியாகச் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முசாஃபர் நகரில் முசுலீம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மைய இணை அமைச்சருமான சஞ்ஜீவ் பல்யான் வந்து போலீசைத் தூண்டிவிட்ட பிறகுதான் தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முசுலீம்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

ஏழை முசுலீம்களைச் சுட்டுக் கொல்வதும், வசதியான முஸ்லிம் குடும்பங்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கிக் கொள்ளையிடுவதும்  உ.பி.யில் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

படிக்க:
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !

***

ஃபெரோசாபாத் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான இருபத்தாறு வயதான ரஷீத் ஒப்பந்தத் தொழிலாளி; தனது கூலியை வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார் ரஷீத். முப்பது வயதான ஹரூன் தனது எருதை விற்றுவிட்டுத் திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முசாஃபர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான நூர் முகம்மதுவின் கூலியை நம்பித்தான் அவரது குடும்பமே காலத்தை ஓட்டிவருகிறது. இவர் போலீசின் துப்பாக்கிக்குப் பலியானரா அல்லது ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானரா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

துப்பாக்கியால் சுடப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போகவில்லை. காப்பாற்றுவதற்கு வாய்ப்பிருந்தும்கூட நூர் முகம்மதுவிற்கு முசாஃபர் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், அவரை மீரட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து போனார்.

குண்டடிபட்ட மீரட் நகரைச் சேர்ந்த முகம்மது மோசின், ஆசிப் உள்ளிட்ட மூன்று பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் இரத்தப் போக்கு நிற்காமல் இறந்து போனார்கள்.

“குண்டடிபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாதென மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக” வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 வயதான அப்துல் ஜலீலும், 24 வயதான நௌஷினும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டடிபட்ட அந்த இருவரையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொரு முஸ்லிமையும், அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் சிகிச்சை அளிக்கமாட்டார்கள் என முன் அனுமானித்து, முஸ்லிம் மருத்துவர் நடத்தும் ஹைலாண்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

இந்த ஒரு காரணத்துக்காகவே, மங்களூரு போலீசு அந்த மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து உள்நோயாளிகளைத் தாக்க முயன்றதோடு, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் மருத்துவமனை வளாகத்தில் வீசியது. போர்ச் சூழலில்கூட மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாதென்ற சர்வதேச நியதியைக் காலில் போட்டு மிதித்திருக்கிறது, மங்களூரு போலீசு.

முசாஃபர் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த அன்றைய இரவில் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு, உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் துணையோடு, அவர்கள் அடையாளம் காட்டிய முஸ்லிம் வீடுகளுக்குள் எல்லாம் புகுந்த போலீசு அவ்வீடுகளில் இருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி, பணம் நகைகளைத் திருடிச் சென்றிருக்கிறது.

தனது பேத்திகளின் திருமணத்திற்காக எடுத்து வைத்திருந்த ஐந்து இலட்ச ரூபாய் பெறுமான நகைகளை “போலீசு திருடிச் சென்றுவிட்டதாக”க் குற்றஞ்சுமத்துகிறார், முசாஃபர் நகரைச் சேர்ந்த ஹமீத் ஹசன்.

மீரட் நகரில் தெற்கு சிவில் லைன்ஸ் பகுதியில் செல்ஃபோன் / கணினி விற்பனை நிலையம் நடத்திவரும் நசீர் கான், ஆஸிஃப் ஆகிய இருவரும், “ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமது கடையிலிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பெறுமான மின்னணுப் பொருட்களை அடித்து நொறுக்கியும் திருடியும் சென்றுவிட்டதாக” போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உ.பி. மாநில போலீசு அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். அடியாள் படை என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. தற்பொழுது, யோகியின் ஆட்சியில் அவ்வரசுப் படை மிகவும் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ். விசுவாசியாக மாறி, முஸ்லிம்களை வேட்டையாடியிருக்கிறது.

மீரட் நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் என்.சிங், ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறியனுக்கே சவால் விடும் வகையில், உ.பி. முசுலீம்களை பாகிஸ்தானுக்கு ஓடுமாறு பேசி, அம்மதவெறிப் பேச்சை சமூக வலைத்தளங்களில் ஒளிப்படமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்த உ.பி. மாநில போலீசார், “இனி இந்த வீடெல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம். குடியுரிமைச் சட்டம் உங்களை பாகிஸ்தானுக்குத் துரத்திவிடும்” எனக் கூறியிருக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆத்திரமூட்டி, அவர்களை வன்முறையில் இறங்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, மதரீதியான கொச்சையான அவதூறுகளை உ.பி. மாநில போலீசு ஆர்ப்பாட்டத்தின்போது சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்களின் சுன்னத் மதச் சடங்கைக் கேலி செய்யும் வகையில், முக்கா துலுக்கன் என வார்த்தைக்கு வார்த்தை கூறி முஸ்லிம்களை அவமானப்படுத்தியிருக்கிறது.

மங்களூரு நகரில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை ஆய்வாளர் சாந்தாராம் குந்தர், “இத்துணை முறை சுட்ட பிறகும் ஒருத்தன்கூட சாகவில்லையே” என வன்மத்தோடு சக போலீசுக்காரர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

மைய அரசின் துணை நிதியமைச்சர் அனுராக் தாக்குர், “துரோகிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்றும்; பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “முஸ்லிம்கள் இந்துக்களின் வீடு புகுந்து நமது மகளை, சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்” என்றும்; மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ், “எமது அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை நாயைப் போல சுட்டுக் கொன்றது” என்றும் விஷமத்தனமாகப் பேசியிருப்பதெல்லாம், முஸ்லிம்களை வன்முறையில் இறங்கச் செய்து, அவர்களைத் தனிமைப்படுத்திவிட வேண்டும் என்ற தீய நோக்கம் கொண்டவையாகும்.

நியாயப்படியும், சட்டப்படியும் பார்த்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கர்நாடகா மற்றும் உ.பி. மாநில முஸ்லிம்கள் மீதும் அலிகர் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் இந்து மதவெறியோடு அரசு பயங்கரவாத வன்முறையை ஏவிவிட்ட உ.பி., கர்நாடகா மற்றும் டெல்லி போலீசு மீதும்; அவ்வரசுப் படையை வழிநடத்திச் சென்ற ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. தலைவர்கள் மீதும்தான் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு எதிராக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குச் சட்டப்படி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற முஸ்லிம்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள் ஆகியோர் மீது பிணையில் வெளிவரமுடியாதபடி பொய்வழக்குகளைப் போட்டுச் சிறையில் அடைத்திருக்கிறது, பார்ப்பன பாசிசக் கும்பல். இதன் மூலம் போராடிய முஸ்லிம்களை வன்முறையாளர்களாகச் சித்திரிக்கும் சதியை அரங்கேற்றியிருக்கிறது.

***

மிழகத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி உருவானதைப் போன்றே, ஒரு வெகுமக்கள் எழுச்சி நாடு தழுவிய அளவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உருவாகியிருக்கிறது. இந்த மூன்றும் ஆர்.எஸ்.எஸ்.  இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் முன்னெடுப்பு என்பதை உணர்ந்து இந்த எழுச்சி நடைபெற்று வருவதுதான் இதனின் தனிச்சிறப்பு.

இப்போராட்டத்திற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவளித்தாலும், இந்த மக்கள் எழுச்சி எதிர்க்கட்சிகள் உள்ளிட்டு எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் தலைமையிலும் நடைபெறவில்லை என்பதைப் பல்கலைக்கழக- மாணவர்களின் போராட்டங்களும் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம், கொல்கத்தா சர்க்கஸ் பார்க் போராட்டம் ஆகியவையும் உணர்த்துகின்றன.

போராட்டங்கள் தன்னெழுச்சியாகவும், துண்டு துண்டாகவும் நடைபெறுகின்றன; ஒருங்கிணைப்பு இல்லை என்பதையெல்லாம் பலவீனமாகக் கருதிக் கவலை கொள்வதைக் காட்டிலும், தேர்தல் அரசியல் கட்சிகளின் செயலின்மைக்கும், தேர்தல் அரசியலுக்கு வெளியே மாற்று அரசியல் தலைமை எதுவும் உருவாகாத வெறுமை நிலைக்கும் இடையில், இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டும் முந்திக்கொண்டும் செல்லும் மக்களின் உணர்வு நிலையை எண்ணி மகிழ்ச்சியடைவதே பொருத்தமாக இருக்கும்.

1917 மார்ச்சில் ரசியப் பெண்கள் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் நடத்திய போராட்டம் அக்டோபர் புரட்சியின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

பார்ப்பன பாசிஸ்டுகளை இந்திய சமூக, அரசியல் அரங்கிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என விருப்பங்கொண்டுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் களத்தில் நிற்கிறார்கள். “என்னை எதிர்த்து நிற்கும் தலைவன் யார்?” என்று காங்கிரசுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் சவால் விட்ட மோடி, தன்னை எதிர்த்து நிற்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களை, மாணவர்களை, தாய்மார்களைக் கண்டு திகைத்து நிற்கிறார். புதிய தலைமைகளை இந்தப் போராட்டம் நிச்சயம் உருவாக்கித் தரும்.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020 


பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை தாமதமாக ஏப்ப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கு வருந்துகிறோம்.


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க