குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் தம்மை நீதிமன்ற நண்பனாக (அமிகஸ் கியுரி – amicus curiae) இணைத்துக் கொள்ளக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, ஐ.நா. மனித உரிமை ஆணையம்.

“இச்சட்டம் பாரபட்சம் காட்டும் கருவியாகப் பயன்படுத்தப்படும் என்பதால், இதன் காரணமாக நாடற்றவர்கள் உருவாகும் அபாயமிருப்பதாக” ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் ஆண்டனியோ குடேரஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்திருந்தார். “இச்சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமானது” என ஐ.நா. மனித உரிமை ஆணையம் இச்சட்டத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விமர்சனங்களின் தொடர்ச்சியாக சர்வதேச அமைப்பான ஐ.நா. மனித உரிமை ஆணையம், தானே முன்வந்து, தன்னை நீதிமன்ற நண்பனாக இணைத்துக் கொள்ளக் கோரும் மனுவைத் தாக்கல் செய்திருப்பது எதிர்பாராத அதிர்ச்சியை பா.ஜ.க. அரசிற்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்சேல் பேச்லெட்.

“இந்திய உச்ச நீதிமன்றத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே இந்த மனுவைத் தாக்கில் செய்திருப்பதாக”க் கூறியிருக்கிறது ஐ.நா. மனித உரிமை ஆணையம். மேலும், “ஐ.நா. மன்றப் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் எண்.48/141, மனித உரிமைகளைக் காக்கவும், அவற்றை வளர்தெடுக்கவும் மற்றும் உலக நாடுகளுக்கு இது குறித்து ஆலோசனைகளை வழங்கவும் தமக்குப் பொறுப்பும் கடமையும் அளித்திருக்கும் அடிப்படையிலும்; சர்வதேச மனித உரிமை நியதிகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்திடம் விளக்கிக் கூறும் வகையிலும் மட்டுமே இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகவும்” அவ்வாணையம் விளக்கமும் அளித்திருக்கிறது.

“இந்திய ராஜதந்திர வரலாற்றிலேயே இது நிச்சயமாக முன்னேப்போதும் கண்டிராத ஒன்று” என முன்னாள் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே, ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் முக்கியத்துவத்தை யாரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு அசாதாரணமான சட்டத்திற்கு எதிராக அசாதாரணமான முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் மனு இது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்படமால் நிராகரிக்கப்பட்டாலும்கூட இது நரேந்திர மோடி அரசுக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் முக்கியமானதொரு பின்னடைவாகும்.

படிக்க:
♦ உ.பி., குஜராத்தை பின்பற்ற வேண்டுமா அல்லது தமிழ்நாடு, கேரளாவை பின்பற்ற வேண்டுமா ?
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

இந்திய அரசின் வெளியுறவுத் துறை, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். சட்டங்களை இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மையோடு தொடர்புடையது. எந்தவொரு வெளிநாட்டு அமைப்பிற்கும் இந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதற்கான அங்கீகாரமோ தகுதியோ கிடையாது” என எச்சரித்து இம்மனுவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் ஆண்டனியோ குடேரஸ்

ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்த வழக்கில் தன்னை மனுதாரராகச் சேர்த்துக்கொள்ளக் கூறவில்லை. நீதிமன்ற நண்பனாக, மனித உரிமை குறித்து சர்வதேச நியதிகளும், ஒப்பந்தங்களும் கூறுவதென்ன என விளக்கும் அடிப்படையில் மட்டுமே வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கூறியிருக்கிறது. வலதுசாரி நரேந்திர மோடி அரசால் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலராலும்கூட ஐ.நா. மனித உரிமை ஆணையம் இவ்வழக்கில் இம்மட்டில் தலையிடுவதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“இந்த வழக்கின் மனுதாரர்களுள் ஒரு பிரிவினரே சர்வதேச மனித உரிமை நியதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள் என்பதால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மனு அவசியமற்ற ஒன்று” எனக் கூறுகிறது, தி இந்து நாளிதழ்.

“குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் பரிசீலிக்கப்பட வேண்டுமெயொழிய, அதனைச் சர்வதேச ஒப்பந்தங்கள் அடிப்படையில் பரிசீலிக்கத் தேவையில்லை” எனக் கூறியிருக்கிறார், மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன். சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு ஆளும் இந்துத்துவக் கும்பலுக்கு மட்டுமின்றி, நடுநிலையாளர்கள் பலருக்கும்கூட தொண்டையில் சிக்கிய முள் போலாகிவிட்டது.

***

இந்தியாவின் போலி சுதந்திரம் போன்றே, சொல்லிக் கொள்ளப்படும் இந்திய இறையாண்மையும் போலியானதுதான். இதுவொருபுறமிருக்க, உலகமயக் காலக்கட்டத்தில் எது உள்நாட்டு விவகாரம், எது சர்வதேச விவகாரம் என்பதைக் கறாராகப் பிரிக்கும் எல்லைக்கோடு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும், அவர்களின் அறிவார்ந்த பிரதிநிதிகளும் தமது நலனுக்கு ஏற்றாற்போலத் தான் இதற்கு வியாக்கியனம் அளித்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அறிவிக்கும் பட்ஜெட் இறையாண்மை மிக்கதொரு நடவடிக்கையாகும். ஆனாலும், அப்பட்ஜெட்டில் எந்தளவிற்குப் பற்றாக்குறையை அனுமதிப்பது என்பதையும் கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு எவ்வளவு மானியம் ஒதுக்கீடு செய்வது என்பதையும் உள்நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப மைய அரசு தன் விருப்பப்படித் தீர்மானித்துவிட முடியாது. மாறாக, ஏகபோக நிதி நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உலக வங்கி உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் கைத்தடி அமைப்புகளும் விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்றபடிதான் இந்த ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

குறிப்பாக, மைய அரசின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்பதுதான் மேற்கூறப்பட்ட ஏகபோக நிதி மூலதனக் கும்பலின் நிபந்தனை. இதனை ஏற்று நிறைவேற்றும் விதத்தில் 2003-ஆம் ஆண்டிலேயே நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் சட்டமொன்றை இயற்றி, அதற்கேற்பவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றை எதிர்கொள்ள மைய அரசு ஒதுக்கியிருக்கும் 1.70 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ஒதுக்கீடுகளும்கூட, இந்தச் சட்டத்திற்குட்பட்டுத்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது, இந்து நாளேடு.

இந்திய மக்கள் ஒரு பேரபாயத்தை எதிர்கொண்டுவரும் துயரமான நிலையிலும்கூட, அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் விதித்திருக்கும் பற்றாக்குறை விதியை மீறாமல், அதற்குப் பணிந்து நடந்துகொண்டுள்ள மோடி அரசுதான், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மனுவிற்கு எதிராக இறையாண்மை என்ற பூச்சாண்டியைத் தூக்கிக் காட்டுகிறது.

உலகமயமும், உலக வர்த்தகக் கழகமும் நடைமுறைக்கு வந்த 1990-களிலேயே,  ஒரு தேசத்தின்/நாட்டின் இறையாண்மை என்ற கருத்து காலாவதியாகிவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் உள்ளூர் கைத்தடிகளும் அறிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஒரு நாட்டினுள் நுழைந்து இலாபம் ஈட்டுவதற்கு அந்நாட்டின் சட்டங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. அப்படியிருப்பின் அதற்கேற்ப அந்நாட்டின் சட்டங்கள் கைவிடப்பட்டோ, திருத்தப்பட்டோ, ஏகபோக நிதிமூலத்தின் இலாபத்தைப் பாதுகாக்கும் அடிப்படையில் மட்டுமே சட்டங்களும் விதிகளும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

படிக்க:
♦ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !

ஒரு தேசத்தின், நாட்டின் இறையாண்மை என்பது அந்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது. இந்த வரையறையின்படி பார்த்தால், இந்திய நாட்டின் போலித்தனமான இறையாண்மையும்கூட முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பலிபீடத்தில் படையலாக வைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. எனவே, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் மனுவை இறையாண்மையின் அடிப்படையில் எதிர்ப்பதற்கு மைய அரசிற்கு அறம் சார்ந்த அடிப்படை எதுவும் கிடையாது.

மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரத்தில் அந்நிய அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது எனச் சவால்விட்டு வரும் மோடி அரசுதான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்த விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து வந்து, சுற்றிக் காண்பித்து அறிக்கைவிடச் செய்தது. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?

உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்றை இந்திய அரசு மீறிவிட்டதாக அக்கழகத்தின் உறுப்பு நாடுகள், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ்சுமத்தினால், அதற்கான விசாரணையும், தீர்ப்பும் இந்தியச் சட்டங்களின்படி இந்திய நீதிமன்றங்களில் நடைபெறுவதில்லை. உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பாயங்களில்தான் வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. அப்பொழுதெல்லாம் இந்திய அரசோ, ஆளும் வர்க்க அறிவுஜீவிகளோ இந்திய இறையாண்மை குறித்து மூக்கைச் சிந்துவதில்லை.

ஐயா, பயப்படாதீங்க… இது வரைவுதான்….

இந்திய அரசு சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் மட்டும் கையெழுத்திட்டிருக்கவில்லை. சமூக மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்த சர்வதேசிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறது. ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறும்போது, உலக வர்த்தகக் கழகத் தீர்ப்பாயம் அதில் தலையிட்டு இந்திய அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்கலாம் எனும்போது, சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களை இந்திய அரசு மீறும்போது அவ்விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏன் தலையிடக் கூடாது? உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளாலோ, வழக்கு விசாரணைகளாலோ பாதிப்புக்குள்ளாகாத “இந்திய இறையாண்மை”யின் புனிதம்,  ஐ.நா. மனித உரிமை ஆணையம் நீதிமன்ற நண்பனாகத் தலையீடு செய்வதால் பாதிப்புக்குள்ளாகிவிடுமா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருந்தாலும், அச்சட்டத் திருத்தம் பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் குடியுரிமையைத் தீர்மானிப்பதில் முசுலிம் மதத்தினரைப் பாகுபடுத்தும் வண்ணம் மதத்தை அளவுகோலாகப் பயன்படுத்துவதால், இப்பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலையிடுவதற்கு நியாயம் உண்டு. அம்மன்றம் தலையிடுவதை இறையாண்மை என்ற பூச்சாண்டியைக் காட்டி தடுத்து நிறுத்த மோடி அரசு முயலுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இதுவொருபுறமிக்க, இந்திய உச்ச நீதிமன்றம் ஆளும் இந்து மதவெறிக் கும்பலின் கைத்தடியாகச் செயல்பட்டு வருவது பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள், உத்தரவுகள் – ரஃபேல் ஊழல் வழக்கு, பாபர் மசூதி நில உரிமை வழக்கு, அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடும் வழக்கு உள்ளிட்டவை – வழியாக அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனக் கோருவதுகூடத் தவறாகிவிடாது.

– செல்வம்