தேதி: 27, மாதம்: ஏப்ரல், ஆண்டு: 2020, நாள்: திங்கள்கிழமை.

மொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய்த் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் தனிமையில் இருக்க வேண்டும் என உலக நாடுகள் அறிவித்திருந்தன. இதை உறுதிப் படுத்த பல்வேறு நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலை ஒருமாதத்தை எட்டியிருந்தது. மே மூன்றாம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த முடக்கநிலை மேலும் கூட்டப்படும் சூழல் இருப்பதாக பேச்சு பரவி வந்தது.

அன்றாடங்காய்ச்சித் தொழிலாளர்கள் வேலையும் கூலியுமின்றி தவித்துப் போயிருந்தனர்; சிறு குறு தொழில் செய்பவர்களோ முடக்க நிலைக்குப் பிந்தைய நிலைமையை நினைத்து திகைத்துப் போயிருந்தனர்; மாதச் சம்பளக்காரர்களோ இனிமேல் வேலை நிலைக்குமா, சம்பளம் கிடைக்குமா, கடனுக்கு வட்டி கட்டுவதெப்படி என்கிற நிச்சயமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டு மலைத்துப் போயிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் கொரோனா உண்டாக்கிய பேரிடரை சென்னையில் நடந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.

சம்பவ தினமாம் 27-ம் தேதி அன்று சென்னையைச் சேர்ந்த மொக்கை ஜோக் நடிகர் எஸ்.வீ சேகர் 13 பாக்கெட் ஆவின் பால் வாங்கியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு 13 பாக்கெட் பாலா?? என்று வாயைப் பிளக்க வேண்டாம். அன்னாரின் வீட்டில் வயதான பிள்ளைகளும், இனிமேல் வயதாகப் போகும் பிள்ளைகளும் உள்ளனர் என்பதை அவரே கூறியுள்ளார். மேலும் ‘அரிய வகை ஏழைகள்’ என்பதால் இந்த 13 பாக்கெட் பாலே கூட குறைவு தான்.

இந்நிலையில் வாங்கிய பால் பக்கெட்டுகளை வெட்டி குக்கரில் இட்டு காய்ச்சும் பணியைத் துவங்கிய போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நீங்கள் செய்திகளில் படித்தது உண்மை தான். அதில் 9 பாக்கெட்டுகள் திரிந்து போனது. இந்த துயர சம்பவத்தைக் கண்டு கதிகலங்கிப் போன எஸ்.வீ சேகர் அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார். நடந்த பேரிடர் குறித்த தகவலை முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் முகவரிக்கும், துணைமுதல்வரின் ட்விட்டர் முகவரிக்கும் புகாராக தெரிவித்தார்.

எஸ்.வீ சேகரின் புகாரையடுத்து மொத்த அரசு நிர்வாகமும் பரபரப்புடன் செயல்பட்டது. ஆவின் நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கெட்டுப் போன 9 பாக்கெட்டுகளுக்கு பதிலாக வேறு 9 பாக்கெட் டபுள் டோன் பாலை சேகரின் வீடு தேடி வந்து கொடுத்துள்ளார்.

இத்தனையும் மூன்றே மணி நேரத்துக்குள் நடந்துள்ளதால் சேகரின் வீட்டில் வாழும் அரிய வகை ஏழைகள் பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையில் மாற்றாக கொடுக்கப்பட்டது “டபுள் டோன் பால்” என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி உண்மையில் பல்லாண்டுகள் அரசு பணியில் ஈடுபட்டு பட்டை தீட்டப்பட்டவர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. எனவே தான் அரிய வகை ஏழைகளை டீல் செய்யும் கலையை நன்கு கற்று கடைத்தேறியுள்ளார்.

படிக்க:
♦ தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
♦ எஸ்.வி.சேகர் – எச். ராஜாவை என்ன செய்ய ? கருத்துப் படம்

***

இதற்காகவே காத்திருந்த திமுகவைச் சேர்ந்த உடன் பிறப்புகள் அம்மாவின் வழியில் ஆட்சி செய்து வரும் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாண்புமிகு முதல்வரை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் “பால்பாக்கெட் பழனிச்சாமி” உள்ளிட்ட ஹேஷ்டேக் போட்டு கேலி செய்யத் துவங்கினர். இன்னும் சிலர் மீம்கள் மூலம் ஒரண்டை இழுத்தனர். (மாதிரிக்கு ஒன்று மட்டும்)

கொரோனா பேரிடர் காலத்தில் செய்வதற்கு உருப்படியான ஆயிரம் வேலைகள் இருக்க, போயும் போயும் ஒரு கொழுப்பெடுத்த பாப்பான் வீட்டுக்கு பால் சப்ளை செய்வது தான் முக்கியமா என்பது திமுகவினரின் கிண்டல்களின் சாரம். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மருத்துவர்கள் தவித்து வரும் நிலையில், சோதனைக் கருவிகளையே சோதனை செய்யும் ஒரே கரகாட்ட கோஷ்டியாக தமிழ்நாடு இருக்கும் நிலையில், பொருளாதார மீட்சிக்கான வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் நிலையில் – ஒரு மாநில முதல்வர் திரிந்த பால் விவகாரத்தில் எல்லாம் தலையிட வேண்டுமா? என்பது உடன் பிறப்புகளின் ஆத்திரத்துக்கு காரணம்.

ஒரு முதல்வரை இவ்வாறு விமர்சிக்கலாம் தான், ஆனால், மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இக்கட்டான நிலைமையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பால் திரிந்தது யாரோ வீட்டில் இல்லை – எஸ்.வீ சேகரின் வீட்டில். அவர் ஒரு அரிய வகை ஏழை. சாதாரண அரிய வகை ஏழை என்றால் இந்து பத்திரிகைக்கு “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்கு எழுதுவதோடு அடங்கி விடுவார். ஸ்பெசல் சாதா என்றால் மொட்டை பெட்டிசன். ஆனால் இவர் ஸ்பெசல் ஸ்பெசல் அரிய வகை ஏழை – நடவடிக்கை இல்லையென்றால், பெட்டிசன் நாக்பூருக்கும் டெல்லிக்கும் போகும்.

நாம் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும். மனசாட்சியின்றி விமர்சிக்க கூடாது.

நாம் புரிந்து கொள்ள வேண்டியது பார்ப்பனியம் எப்படி எளிய மக்களை பார்க்கிறது, பழிவாங்குகிறது என்பதைத் தான்.

சாதாரணமாக நம் வீடுகளில் பால் திரிந்து போனால் திரிந்த பாலை வீணாக்காமல் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம், ஒரு படி மேல் போனால் நம் அம்மாக்கள் காலையில் யார் மூஞ்சியில் விழித்தோம் என்று யோசிப்பார்கள், கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் பால் பாத்திரத்தை நாளையில் இருந்து ஒழுங்காக கழுவ வேண்டும் என்று சிந்திப்பார்கள்; அதிகபட்சம் போனால் மறுநாள் பால் பூத் அண்ணாவிடம் ‘நேத்து பால் திரிஞ்சிடிச்சிண்ணே’ என்று ஏக்கமாக சொல்லி விட்டு இனாமாக ஒரு ரூபாய்க்கு மிட்டாயோ கடலை உருண்டையோ கிடைக்குமா என்று பார்ப்போம்.

நம்மில் வெகுசிலருக்குத் தான் கஸ்டமர் கேருக்கு புகார் தெரிவிக்க முடியும் என்பதே தெரிந்திருக்கும். ஆனால், எஸ்.வீ சேகர் நேரடியாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கிறார். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநிலத்தின் முதல்வர்; ஒன்பது கோடி மக்களுக்கு முதல்வர். ஒரு முதல்வருக்கு தினசரி எத்தனை வேலைகள், அக்கப்போர்கள், பஞ்சாயத்துகள் இருக்கும் என்று நாம் யோசிப்போம். இது போன்ற சில்லரை விசயங்களை ஒரு முதல்வர் அலுவலகத்திற்கு எடுத்துப் போக கூச்சப்படுவோம்.

ஆனால், அரியவகை ஏழைகள் கூச்சப்பட மாட்டார்கள். உலகமே அழிந்தாலும் கூட காலையில் பேப்பர் பையன் இந்து பேப்பரை வீசி விட்டுப் போனது குறித்து தான் அரிய வகை ஏழைகளின் மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். பேப்பர் பையனின் அடாவடித்தனத்தை அவனது முதலாளிக்கு போட்டுக் கொடுத்து அவன் வேலையை காலி செய்தால் தான் மனம் ஆறும்.

அலுவலகங்களில் அரிய வகை ஏழைகள் சூழ வேலை பார்ப்போருக்குத் தெரியும் – மொட்டை பெட்டிசனின் வலிமை குறித்து. இந்த ஜந்துக்களிடம் எதற்கு வீண் வம்பு என சகித்துக் கொண்டு ஒதுங்கிப் போவோர் தான் அதிகம். சில்லரை விசயங்களில் தனது “கெத்தை” காட்டி மகிழும் குரூர புத்தி அரியவகை ஏழைகளுக்கு உண்டு. ஊரே சுடுகாடானால் என்ன, என் தட்டில் காசு விழ வேண்டும் என்கிற சின்ன புத்தியும் அரியவகை ஏழைகளுக்கே உரியது.

இதைத் தான் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

– தமிழண்ணல்