கொரோனோவால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்களின் வாழ்நிலை உண்மைகளை எந்த ஊடகங்களும் கூறுவதில்லை.மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி நேரில் சந்தித்து தகவலை சேகரித்தோம்.

இதோ அவர்களின் வாழ்க்கை அவலங்கள்:

இப்பகுதியில் பெரும்பாலும் அப்பளக் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் இந்த 40 நாட்களில் சொல்லிமாளாத துயரத்தை சந்தித்துள்ளோம். எங்கள் சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் என இவர்களிடம் கடனை வாங்கி தான் பிழைப்பை நடத்துகிறோம். இந்த கொரோனோ ஓழியும் வரை எல்லோரையும் வீட்டிற்குள் இருக்க சொன்னார்கள். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் வேலை இழந்து வருமானம் இழந்து நிற்கிறோம். அதற்கு அரசு சரியான நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக இந்த அரசு கொடுத்த 1000 ரூபாய் 3 -வாரம் கூட தாங்க வில்லை எப்படி குடும்பம் நடத்துவது. இதே தொகையை நாங்கள் எடப்பாடிக்கு தருகிறோம் முதலில் அவர் இதை வைத்து குடும்பம் நடத்தட்டும் அப்புறம் எங்களுக்கு தரட்டும் என கொந்தளித்தனர்.

அரிசி என்று எதையோ கொடுத்தார்கள் கோழி கூட கொத்த மாட்டேங்குது இதை நாங்கள் எப்படி சமைத்து சாப்பிடுவது.தொடர்ந்து அவர், கொரோனோவுக்கு முன் ரேசனில் விநியோகிக்கப்பட்ட அரிசி கூட நல்லதாக தான் இருந்தது. இப்போது விநியோகித்த அரிசி மிகவும் கேவலமாக உள்ளது என அவர் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பெண்மணி, எங்கள் குடும்பம் இந்த அரிசியை தான் பொங்கி சாப்பிடுகிறோம் வேற வழி இல்லைங்க தம்பி என்றார்.

இப்போது தான் கொரோனோவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அரசு இப்போது விமான நிலையம், பேருந்துகள்,போக்குவரத்து என அனைத்தையும் இயங்க வைத்துவிட்டார்கள் எங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே நாங்கள் வறுமையில் வாழ்கிறோம் இப்போது கொரோனோவுடன் சாவதா? ஏற்கனவே நாங்கள் அப்பள உற்பத்தியாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கி உள்ளோம். மகளிர் சங்கம், விடிவெள்ளி, சேமம் என அனைத்திலும் கடனை வாங்கியுள்ளோம். அது போக இப்போது வெளிக்கடன் வேறு வாங்கி உள்ளோம். இனி இந்த ஊரடங்கு முடிந்தாலும் எங்கள் கேவலப்பட்ட பிழைப்பு முடிவுக்கு வராது. நாங்கள் இனி வேலை செய்து பணத்தை மிச்சம் செய்து கடனை அடைப்பதா?, வாடகை கொடுப்பதா?, இல்லை எங்கள் வயிற்றை நிரப்புவதா?.

இந்த அரசு எங்கள் கடன் தொகையை அனைத்தையும் தள்ளுபடி செய்தால் தான் எங்கள் வாழ்வு தழைக்கும். இதனை அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம்.
எல்லா கடைகளும் மூடி எங்களோட வயிற்றில் அடித்த இந்த அரசு டாஸ்மாக் கடை மட்டும் திறந்து இன்னும் எங்கள் குரல்வளையை நெறிக்க பார்க்கிறது. இந்த 40 நாளில் அரை வயிற்று கஞ்சியை குடித்தாலும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இந்த டாஸ்மாக் திறந்த இரண்டு நாளில் என் கணவன் என்னை அதிகம் துன்புறுத்தி விட்டார். உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் இந்த டாஸ்மாக் கை மட்டும் தயவுசெய்து திறக்காதீர்கள் என வேண்டுகோளாக அரசுக்கு வைத்தார்கள்.

அப்பளம் உற்பத்தியாளர்கள்:

நாங்கள் இந்த 40 நாட்களில் எங்களுடைய வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. அரசு போதுமான நிவாரண நிதியோ பொருளோ தரவில்லை. நாங்கள் ஏற்கனவே வங்கியில் வாங்கிய கடன் தொகையை செலுத்த திணறுகிறோம். இரண்டு மாதம் கழித்து வட்டி கட்டலாம் என வங்கிகள் சொன்னாலும் அதற்கும் சேர்த்து தான் வட்டி கேட்பார்கள்.

இது போதா குறைக்கு மீண்டும் கடன் வாங்கும் நிலமையை அரசே ஏற்படுத்தி கொடுக்கிறது. பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் அரசு எங்களைப் போன்றோர்களின் கடனை தள்ளுபடி செய்தால் இனி வரும் நாட்களில் நாங்கள் மீள்வோம். இல்லையேல் கடினம்தான்.

எங்கள் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து 60 பேர் சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தொழிலை தொடங்குவதற்கு அனுமதி கேட்டோம். அதற்கு அவர், (FSSAI ) “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆனையம்” சான்றிதழ் இருந்தால் நீங்கள் உற்பத்தியை தொடங்கலாம் என கூறினார்.

படிக்க:
♦ ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !
♦ பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

அதே பகுதியில் உள்ள அ.தி.மு.க உறுப்பினரின் உணர்வை அவருடைய பேச்சு வழக்கில் தருகிறோம்:

தம்பி நாங்க இந்த 40 நாளையும் ரொம்ப அவதிப்பட்டு தான் தாண்டிருக்கோம். இந்த 40 நாளும் வீட்டில் இருந்த மாதிரி இல்ல ஏதோ ஜெயில்ல இருந்த மாதிரி இருந்துச்சு தம்பி. கவர்மெண்ட் கொடுத்த 1000 ரூபா எந்த மூலைக்கு காணும். 1 சிலிண்டர் வெலையே 800 ரூபாங்கிறான் மீதியை வச்சு கடலை உடல வீட்டு சாமான வாங்கிரலாமா? இதுக்கலாம் பணத்த யார் கொடுப்பா?

நானும் அ.தி.மு.க காரேன் தான் தம்பி அதுக்காக சொந்த கட்சி செய்றதெல்லா சரின்னு சொல்ல முடியுமா. தப்புன்னா தப்புதா தம்பி. இவங்களாம் மக்கள எப்படித்தான் பாக்குறாங்கனு தெரியல. நா நெறைய பேப்பரு படிக்கிறேன் அதுல இருந்து தான் சொல்றே தம்பி. இங்க நடக்குறது ஆட்சியே இல்ல ஏதோ சர்வாதிகார ஆட்சி மாதிரி இருக்கு தம்பி.

வெறும் 1000 ரூபாவும் புளுத்துப்போன அரிசியை கொடுத்துட்டு வீட்டவிட்டு வெளியவராத அப்டின்னா எப்பிடிப்பா. இதுல வேற கொறைஞ்சது 50 ரூபாக்காவது பொறிகடல சோப்பு போல சாமான் வாங்குனா தான் அரிசி பருப்பு தருவேன்னுங்குறான். இருக்குறவன் வாங்குறான் அந்த பணமும் இல்லாதவேன் என்னா பன்னுவான் அவன் பட்டினியா கெடந்து சாகனுமா?…நான் நகையை அடமானம் வைச்சு தான் இந்த 40 நாள் கழிச்சு இருக்கேன்.

ஊரடங்கு முடிஞ்சு எங்க தொழில்ல தொடர்ந்தாலும் கஷ்டம் தாங்க. பழைய மாதிரி தொழிலு நடக்க 6 மாசம் ஆகுங்க. அதுவரைக்கும் நான் என் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவேனா?, கரண்ட்டு பில்லு கட்டுவேனா?, சாப்பிடுவேனா?, கடனத்தான் கட்டுவேனா…?

எங்க பகுதியில்ல “நலவாரிய திட்டத்தில்” முதல் தவணையா 1000 ரூபா கொடுத்தாங்க அதுவும் கட்டுமான தொழிலாளர்க்கு மட்டும் தான். கொரோனோ..வ ஒழிக்க முடியாமத்தான் இப்ப மக்கள வெளிய விட்டாங்க தம்பி. கொரோனோவோட வாழ்ந்து செத்துப்போன்னு அரசு நம்மளை கைவிரிச்சுருச்சு தம்பி என ஆதங்கத்துடனும் வேதனையுடனும் கூறி முடித்தார்.

***

ங்குள்ள அப்பளத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். எடப்பாடி அரசு கொடுத்த 1000 ரூபாய் 1 வாரத்திற்கே போதாது என்னும் சூழ்நிலையில் இவர்கள் அந்த தொகையை 3 வாரம் சமாளித்து இருக்கிறார்கள் என்றால் இதை நாம் எப்படி பார்ப்பது.

அடிப்படை தேவைகளை சுருக்கிக் கொண்டு அசைவ உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழ்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக புளுத்துப்போன அரிசியை அவர்கள் பொங்கி சாப்பிட்டதாக கூறியதும் முக்கியமான ஒன்று.

எங்களுக்கு வேறோன்றும் இந்த அரசு செய்ய வேண்டாம் எங்களுடைய கடனை தள்ளுபடி செய்தால் போதும் என்பது தான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது. அவர்கள் இந்த நிலையிலும் அரசிடம் வைக்கும் கோரிக்கை தான் இந்த கையாலாகாத அரசை நாங்கள் நம்ப மாட்டோம் என்னும் கருத்து அவர்கள் வாழ்க்கையில் இயற்கையாகவே இருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆனால் குறைந்த பட்சம் இந்த கோரிக்கையாவது அரசு நிறைவேற்றுமா என்றால் அதை இந்த அரசிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு என்பது போல் இருக்கிறது இந்த கார்ப்பரேட் அரசின் நடவடிக்கை.

ஊரடங்கிற்கு பிறகு தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தி, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாக வருபவர்களை நொங்கி பிதுக்கி அவர்களிடம் இருக்கும் மீதமுள்ள இரத்தத்தை உறிஞ்சி அதில் வரும் இலாபத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்க முனைகிறது.

இனிமேல் தொழிற்சாலையில் ஆட்குறைப்பு, ஊதியத் தொகை குறைப்பு, சங்கம் வைக்கும் உரிமையை பறிப்பது இப்படி தொழிலாளர்களை ஒடுக்குவதற்கான வேலையை தான் இந்த கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் அரசும் இணைந்து நடத்தப் போகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமான கார்ப்பரேட் முதலாளிகளை காப்பது மட்டுமே இந்திய அரசின் தலையாய கடமை என்பது போல், அவர்களின் கடனை அதாவது பல ஆயிரம் கோடிகளை இந்த காலகட்டத்தில் தள்ளுபடி செய்கிறது.
இப்படிப்பட்ட இந்த அரசிடம் தான் நாம் மேற்கூறிய கோரிக்கையை வைக்கிறோம். இந்த அரசு நமது கோரிக்கையை நிறைவேற்றும் என்பது சந்தேகமே, நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாம் போராடித்தான் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

2 மறுமொழிகள்

  1. சீனாவிருந்து ரெடிமேட் பானிபூரீயிலிருந்து அப்பளம் வரை பல்வேறூ நுகர்ப்பொருள்கள் சுங்க இலாக்காவின் அனுமதியோடு
    டன்ட்டன்னாக இறக்குமதி செய்யப்பட்டு,தரகு முதலாளிகள் மூலம் சந்தையிலும், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட ஆன்லைன் விநியோகம் வரை தாராளமாக உள்ள சூழலில், இவர்கள் நிலைமைக்கு முறையான போராட்டமே தீர்வு!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க