விகடன் குழுமத்தில் நடைபெறும் ஆட்குறைப்பின் மூலம், சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் எழுதி வரும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக நலனிற்கேற்ற அரசியலைப் பின்பற்றாத காரணத்தால், சமூகம், அரசியல் ஆகிய துறைகளின் எழுதி வந்த பத்திரிகையாளர்கள், கடந்த 3 ஆண்டுகளில் வெளியேறியுள்ளனர் / வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன். தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

***

ணக்கம் சார்,

கடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன்.

எனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ‘வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.

உங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாக எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும் கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று நான் கற்றுக்கொள்ளவில்லை.

படிக்க:
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

நான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

இதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது.

எனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.
மிகுந்த மன வருத்ததுடன்,

ர. முகமது இல்யாஸ்.
(இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது)
20/04/2020

முகநூலில்:Ilyas Muhammed Raffiudeen

disclaimer