டந்த ஏப்ரல் 28 அன்று கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி மாநில முதல்வர்களுடன் விவாதித்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறானதொரு பெருமையை உரிமையுடன் கூறிக் கொண்டார். அதாவது, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என்றும், அவற்றை வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஏராளமான மனித ஆற்றல், தொழில் திறமை, மேம்பட்ட அடிக்கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒட்டுமொத்த உலகத்தில் சீனாவுக்கும் சீனப் பொருளாதாரத்துக்கும் எதிரான வெறுப்புணர்வு நீடிக்கிறது… அத்தகைய அருவருப்பினூடாக இதுவொரு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவுக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் (micro,small and medium enterprises – MSME) ஒரு நல்வாய்ப்பு… இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு; அந்நிய முதலீட்டுக்கு நல்வாய்ப்பு” என்று ஒரு தொலைக்காட்சியில் தொழில் வர்த்தகம் தொடர்பான செய்தியில் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, “சீனாவிலிருந்து புலம்பெயர ஆலோசித்துவரும் நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க இந்தியா தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது” என்று நாளேடுகளில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. உலகளாவிய முதலீடுகளை இந்தியாவில் செய்யுமாறு ஊக்கமளித்தும், இடர்ப்பாடுகளை எளிதாக்கும் கொள்கையையும் ஆயுதமாகக் கொண்டுள்ள “இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” என்ற இந்திய அரசின் கொள்கையின் மூலமாக, ஏற்கெனவே ஏறத்தாழ 1,000 உலகளாவிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

“சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் – வர்த்தக நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, ஐரோப்பாவின் லக்சம்பர்க் நகரத்தைப் போல இரு மடங்கு நிலத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒதுக்கீடு செய்து, அபிவிருத்தி செய்து வருகிறது. …நாடு முழுவதும் 4,61,589 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன” என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு செய்தித் துணுக்கு வெளிவந்தது. அசாம் மாநிலத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் மாநில அரசாங்கம் அறிவித்தது.

திடீரென பா.ஜ.க. ஆளும் உ.பி மற்றும் ம.பி அரசாங்கங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு ஒரு டஜனுக்கும் மேலான அனைத்து தொழிலாளர் சட்டங்களைக் கிட்டத்தட்ட முடக்குவதாகவும், சில சட்டங்களை முற்றாக ரத்து செய்வதாகவும் அறிவித்தன. ஏனெனில், முதலாளிகள் கடும் சுமையாக உள்ள தொழிலாளர் சட்டங்களைப் பற்றி புகார் கூறினார்களாம்; அவர்களது ஆட்சியின் கீழ் “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்” (தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மூலம் சோதிக்கும் முறை) ஓங்குவதால், அது வளர்ச்சியைத் தடுக்கிறதாம்; எனவே, தொழிலாளர் சட்டங்களை முடக்குவதன் மூலம் அரசாங்கம் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கவர்ந்திழுக்கப் போகிறதாம்.

படிக்க:
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

அப்படி நடக்குமா என்ன? ஒரு கடுகளவான அந்நிய முதலீடு சீனாவிலிருந்து முட்டிமோதி வெளியேறி இந்தியாவுக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அது எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் இவை:

  1. உண்மையில், எந்த முதலாளியாவது சீனாவிலிருந்து வெளியேறுகிறாரா?

நாடுகள் என்பன, வேறுபட்ட விலையில் ஒரே பொருளை விற்கின்ற பலசரக்குக் கடைகள் அல்ல; நுகர்வோரை ஊக்குவித்து, ஒரு கடைக்குப் பதிலாக வேறு கடைக்கு மாற்றுவதைப் போன்றதுமல்ல என்று பொருளாதாரவாதியும், சீன விவகாரத்தில் நிபுணருமான டாக்டர் சுப்பிரமணியசாமி குறிப்பிடுகிறார்.

ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கான இத்தகைய முடிவுகள் உணர்ச்சிவயப்பட்டதல்ல. ஒரு நிகழ்வின் உந்துதலுமல்ல. மாறாக, இவை மிகவும் சிக்கலானவையாகும்.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கம் (AmCham China), கடந்த மார்ச் மாதத்தில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் முதலாளிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதன்படி, சீனாவில் கொரோனா தாக்குதல் நிலவும் சூழலில், 70 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதில்லை என்றும், சீனாவுக்கு வெளியே அவற்றைத் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அறிவித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.

அந்நிய முதலாளிகள் சீனாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் எனப்படும் இந்த எல்லா அனுமானக் கட்டுக்கதைகளும் பொய்யானது. இதற்கான காரணம் என்ன?

பெருமளவிலான விநியோகச் சங்கிலிகளின் செயல்திறன், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உலகத் தரமான அடிக்கட்டுமானம் ஆகியவையே அந்நிய நிறுவனங்கள் சீனாவுக்குச் செல்ல முதன்மையான காரணங்களாகும். மேலும், சீனாவில் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை இருப்பதால்தான் அந்நிய முதலாளிகள் அங்கே செல்கிறார்கள். ஒரு தொற்றுநோய் இதனை மாற்றிவிட முடியாது என்பது மட்டுமல்ல; நடைமுறையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெளிப்பட்ட சீன அரசின் திறமை ஆகியவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பார்த்தன.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கத்தின் தலைவரான ஆலன் பீபி, “கொரானா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தைய மாதங்களில் சீனா தனது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்து, குறுகிய காலத்தில் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததில் பிற நாடுகளைவிட சீனா முன்னணியில் இருந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தக் காரணங்களுக்காக அந்நிய நிறுவனங்கள் சீனாவை நாடி வந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பதற்காகத்தான், சீனாவிலிருந்து தொழிலும் வர்த்தகமும் வெளியேறி இந்தியாவுக்கு வருகின்றன என்று கூறப்படுகிறதா? ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், பெருமளவில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள தானியங்கித் (ஆட்டோமொபைல்) தொழில் போன்ற நிறுவனங்கள், திடீரென சீனாவிலிருந்து கிளம்பி வேறொரு நாட்டில் தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஒருக்காலும் சாத்தியமே இல்லை. மேலும், ஒருக்கால் சில தொழில் – வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறினாலும், அவை பிற நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத்தான் வந்தாக வேண்டுமா என்ன?

  1. அந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

உலகின் முன்னணி 1,000 நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு (FDI) பற்றியும், பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ள முதல் 25 நாடுகளின் தரவரிசையைக் கணக்கீடு செய்த பட்டியலையும் ஏ.டி. கியார்னே (A.T. Kearney) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ள முன்னணியிலுள்ள முதல் 10 நாடுகள் என்ற வரிசைப் பட்டியலில் முதன்முறையாக 2015-இலிருந்து இந்தியா இல்லாமல் போய்விட்டது. அதேசமயம், தென்கிழக்காசிய நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருப்பதோடு, கடந்த 2018-இல் அவை 11 சதவீத அளவுக்கு அதிகரிப்பையும் கொண்டுள்ளன. அதன் பிறகு இந்தப் புள்ளிவிவரமானது, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (DPIIT) கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அது, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு சரிவைச் சந்தித்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டியதோடு, முதன்முறையாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதையும் வெளிப்படுத்தியது.

இல்லை; இந்தியாவானது அந்நிய முதலீட்டாளர்களைக் கவரக்கூடியதாக இல்லவே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவையனைத்தும் சமமான முக்கியத்துவமுடையவை. இது வெறும் நில ஒதுக்கீடு அல்லது கடுமையான விதிகளைக் கொண்ட தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்டதல்ல. மாறாக, சிவப்பு நாடாத்தனம் (கடுமையான விதிமுறைகளைக் காட்டி இழுத்தடிப்பது), மிரட்டிப் பணம் பறிப்பது, கடந்தகால நோக்கிலான பின்னோக்கிய சட்டத் திருத்தங்கள், விதிகளில் மனம்போன போக்கிலான மாற்றங்கள், வரி பயங்கரவாதம், மோசமான உற்பத்தித் திறன், துறைமுகங்களில் பைத்தியக்காரத்தனமான தாமதங்கள், இறையாண்மைக்கு ஆபத்து என்ற பெயரில் தடைகள், இன்னும் பலவாறானவற்றால் உருவானவை.

  1. உள்நாட்டு முதலாளிகளுக்குக்கூட கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

நல்லது. அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான். கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டில் முதலீடு மிகவும் மந்தமான நிலையில் உள்ளதை பொருளுற்பத்திக்கான இயந்திரச் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பொறியியல் சாதனங்கள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் மூலதன அழுத்தம் கொண்ட நிறுவனங்கள் துறையில் நிலவும் மந்தநிலைமைகளே படம் பிடித்துக் காட்டுகின்றன.

உள்நாட்டில் தேவை (demand) மிகவும் குறைந்து வற்றிப்போன நிலைமை, மறுபுறம் ஆலைகள் அதிகத் திறன் கொண்டுள்ள நிலைமை, பொதுத்துறையில் அரசின் மிகக் குறைவான முதலீடு – ஆகியன இதற்குக் காரணங்களாக உள்ளன. இதன் விளைவாக, உள்நாட்டுத் தொழில் – வர்த்தகத்தில் முதலாளிகள் கூடுதலாக முதலீடு செய்வதில் ஊக்கமற்ற நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும், தனியார் முதலீட்டில் நிலவும் வறட்சியால் இந்திய நாடானது பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று அம்சங்களும், குறிப்பாக கடைசி இரண்டு அம்சங்களும் யாவரும் அறிந்தவைதான். நிலைமை இப்படியிருக்க, சீனாவிலிருந்து வெளியேறி அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? அதேபோல, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன?

படிக்க:
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

இது, கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்ற கேள்விகளையும் நிர்பந்தங்களையும் தடுக்கும் நோக்கத்துடன், ஊடகங்கள் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிட வைத்து, பொருத்தமற்ற செய்திகளின் பின்னே நாட்டு மக்களை ஓடவைக்க அரசியல்வாதிகள் கையாளும் உத்தியாகவே தெரிகிறது. இது, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடுகள் சீனாவிலிருந்து புலம்பெயரப் போவதாகவும், இதுவொரு நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மாநில முதல்வர்களிடம் கூறினார். இருப்பினும், இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உடனே களத்தில் குதித்தன. இதேபோன்ற கூச்சலை எழுப்பி பக்கமேளம் வாசிக்கத் தொடங்கின.

இங்கே ஒரு சுவையான முரண் உள்ளதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. கடந்த 2014-15ஆம் ஆண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் எண்ணிக்கையை வைத்து பெருமிதம் கொண்ட பிரதமர், மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். அதன் பிறகு, அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டபோது, அரசின் சாதனைப் பட்டியலிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பற்றிய செய்திகள் கைவிடப்பட்டன. முட்களால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பாதையில் சென்று, கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுக்க மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்கள் முயற்சித்து தோல்வியடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லப்படும் அந்நிய நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுக்க, இப்போது மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

– புதியவன்

(11.5.2020 தேதியிட்ட பிசினஸ் ஸ்டாண்டர்டு ஆங்கில நாளேட்டில் தேபஷிஸ் பாசு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)