முடிவில்லா ஊரடங்கின் காலகட்டத்தில் நமது தேசிய சிறு குறு உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட சிறு முயற்சி தான் இந்த பதிவு.

அப்பள உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு. G.திருமுருகன் அவர்களை சந்தித்த போது உற்பத்தியாளர்கள், சிறு அப்பளக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கை குறித்து விவரித்தார்.

நாங்கள் பாரம்பரியமாக இந்த அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். 1998-க்கு பிறகு எங்களுடைய உற்பத்தி மென்மேலும் பெருகியது. உற்பத்தியில் 90℅, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், மாலத்தீவு, அரபு போன்ற வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம். 10% மட்டும் தான் மதுரையில் விற்பனை செய்கிறோம்.

வெளிநாட்டில் எவ்வளவு தான் தின்பண்டங்கள் இருந்தாலும் உணவு உண்ணும் போது அப்பளம் தான் அவர்களுக்கு மிகவும் பிடித்த தின்பண்டமாக இருக்கிறது.
சென்னை, கோவை திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அப்பளத் தொழில் நடைபெற்றாலும் மதுரை தான் வெளிநாட்டின் அப்பளத் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.

இந்த தொழிலுக்கு தேவையான உளுந்து 70% பர்மாவில் இருந்து பெறப்படுகிறது. இந்தியாவில், தஞ்சை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் இருந்து 30% உளுந்து தான் பெறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து பெறப்படும் உளுந்துக்கு பசைத்தன்மை இருப்பதாலும், அப்பளத் தயாரிப்பில் பிரயோகப் படுத்தும் அனைத்து வகையான வேலைகளும் கைகளினால் செய்யப்படுவதும் அப்பளம் சுவையாகவும், கெடாமலும் இருக்கிறது.
பர்மா உளுந்தில் பசைத்தன்மை இல்லாததால் அப்பளம் சுவையற்றதாக இருக்கிறது.
மேலும் இயந்திரத்தை பயன்படுத்தி அப்பள உற்பத்தி செய்வதால் அப்பளம் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு கெட்டு விடும்படியாகவும் உள்ளது.
அப்பளம் விலை ஏற்றத்தாழ்வுக்கு இதுவும் முக்கியமான காரணம் என்கிறார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அதாவது, மார்ச் கடைசி வாரம் ஏப்ரல் முதல் வாரம் இந்த நாட்களில் மட்டும் 90% அப்பளம் விற்பனை ஒப்பந்தம் தள்ளுபடி ஆனது. சரக்குகள் அனைத்தும் திரும்பி வந்துவிட்டது. இதனால் எங்களுக்கு 3லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு விட்டது.

என் கம்பெனியை சார்ந்து 1000 குடும்பங்கள் இருக்கின்றன. அரிசி, பருப்பு என எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்கிறோம். இவை அவர்களுக்கு போதாது என்று எனக்கு தெரியும். நாங்களே ஊரடங்கிற்கு பிறகு இழந்த இழப்பை ஈடுகட்டுவதற்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் அதிக அளவில் பணம் தேவை என்கிற சூழலில் தொழிலாளர்களின் நிலை என்பது மிகவும் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசால் மட்டும் தான் எங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்.

எங்கள் தொழில் GST இல்லை என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் அத்தொழிலை அழிக்கும் விதமாக சுமார் 1000 கோடி முதலீட்டுடன் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள் அப்பளத் தொழிலில் கால்பதிக்க போகின்றனர்.

படிக்க:
♦ மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !

எங்களுடைய பாரம்பரிய தொழில் அடுத்த தலைமுறைக்கு தொடரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என மன வேதனையுடன் கூறினார்.
சிறு, குறு அப்பள உற்பத்தியாளர்கள் நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கிதான் தொழிலை நடத்தி வருகின்றோம். இப்போதே பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஊரடங்கு முடிந்தாலும் பழைய இயல்பு நிலையை எட்டுவதற்கு குறைந்தது 6 மாதம் காலமாவது ஆகும். அதுவரை எங்கள் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கும்.

இப்போது மத்திய அரசு அறிவித்திற்கும் “20 லட்சம் கோடி” சலுகை திட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் அரசிடம் கோருவது இதுதான்.

• மார்ச்சில் இருந்து மே வரைக்கும் 3 மாதம் கடனை தள்ளுபடி செய்வது.
• 1 வருடம் மின்சாரம் இலவசமாக வழங்குவது.
• உளுத்தம்பருப்பை மானிய விலையில் கூட்டுறவில் வழங்குவது.,

இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே நாங்கள் மீண்டு வர ஒரே வழி என கூறி முடித்தார்.

***

அப்பள உற்பத்தியாளர் திரு. சீனிவாசன் : நான் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் 40 வருடமாக அப்பளக் கம்பெனி நடத்தி வருகின்றேன். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. 20,000 தொழிலாளர்கள் இருக்கின்றனர். என்னைச் சார்ந்து 300 குடும்பங்கள் உள்ளன. என் கம்பெனியில், பேக்கிங் பிரிவு, அப்பளத் தயாரிப்பு என வேலை முறைகள் உள்ளது.

நாங்கள் பெரும்பாலும் கை வேலை முறைகளில் தான் அப்பளம் தயாரிக்கின்றோம்.
இப்போது தான் அப்பளத் தயாரிப்பு இயந்திரம் வைத்து வேலை செய்கிறோம்.
ஏனென்றால் மற்ற தொழில் போன்று ஒரு சிறு காலத்திற்குள் கற்றுக் கொள்ளும் தொழில் அல்ல. இதனை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 3வருடம் ஆகும். அந்த 3வருடம் கூலி பெரிதாக கிடைக்காது என்பதால் அதை ஏற்றுக் கொண்டு வேலை செய்யும் ஆட்கள் மிகக் குறைவு. குறிப்பாக ஒரு நபர் கட்டிட வேலைக்கு சென்றால் 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் இங்கோ ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் வேலை பார்த்தால் தான் 500 ரூபாய் கிடைக்கும். இயந்திர வேலைக்கு குறைந்த ஆட்கள் இருந்தால் போதும் என்பதால் இயந்திரத்தில் அப்பளம் உற்பத்தி செய்கிறோம்.

மாதிரிப் படம்

ஆனால் கையில் தயாரிக்கும் அப்பளத்திற்கும் இயந்திரத்தில் தயாரிக்கும் அப்பளத்திற்கும் தரம் மற்றும் சுவை வேறுபாடுகள் அதிகம் உள்ளது என்றார், மதுரை ஜெய்ஹிந்த்புரம் அப்பளம் உற்பத்தியாளர்.திரு. சீனிவாசன்.

சரக்குகள் முன்புமாதிரி விற்பனையாகவில்லை. ஏனென்றால் கல்யாணம், ஓட்டல்கள், லாட்ஜ்கள் போன்றவை ஏதும் இயங்கவில்லை. இதனால் சரக்குகள் தேக்க நிலையில் உள்ளது. இப்போது ஒரு சில பலசரக்கு கடைகளில் மட்டும் தான் விற்பனையாகிறது என்பதால் புதியதாக உற்பத்தி செய்ய தயக்கமாக உள்ளது.

அப்பளம் உற்பத்திக்கு தேவையான உளுந்து தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தான் வருகிறது. இப்போது போக்குவரத்து இல்லை என்பதால் உளுந்து பற்றாக்குறை காரணமாக உற்பத்தியும் குறைவாகவே இருக்கிறது.

படிக்க:
♦ மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பளத் தயாரிப்புக்கு ஏற்ற காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அனைத்து தொழிலாளர் குடும்பங்களும் அதிக உற்பத்தி செய்து வருமானம் ஈட்டுவார்கள்.  ஆனால் நிலைமை ஊரடங்கினால் முற்றிலும் மாறிவிட்டது. தொழிலாளர்கள் வருமானம் இழந்து அமைதியாக இரண்டாம் கட்ட ஊரடங்கு வரைக்கும் வீட்டில் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக பழகி விட்டார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் எங்கள் தொழிலாளர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகள் செய்தோம். ஆனாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசுக்கே உள்ளது. எங்கள் தொழில் இனி வரும் காலங்களில் நீடிக்க வேண்டும் என்றால் அரசு நாங்கள் கோரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
• மாதம் 5000/- ரூபாய் வீதம் 6 மாதத்திற்கு வழங்க வேண்டும்.
• 6 மாதத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
• மானிய விலையில் உளுந்து, அரிசி மாவு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என கூறி முடித்தார்.

அப்பள உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்பது மத்திய மாநில அரசின் மீது உள்ள அவநம்பிக்கையை வாழ்க்கையின் எதார்த்தத்தில் இருந்து வெளிபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் தான் தத்தம் தொழில்கள் மீள முடியும் என்கின்ற நிலையில் இருக்கும் போது, இதை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாம் விடாப்பிடியாக போராடித்தான் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

1 மறுமொழி

  1. இந்த கட்டுரை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் வர வேண்டியது தற்போது நிலைமை அதோடு மோசமாக இருக்கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க