12 வயதான பெண் பிள்ளை, உடல் மெலிந்து நலிந்திருந்தாள். முகத்தில் தோல் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. காது கேட்காத பாட்டியுடனும், தாத்தாவுடனும் தங்க லாக்டவுனுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்தவள் பள்ளி விடுமுறையாதலால்
இங்கேயே தங்கி விட்டாள்.

தாத்தா பாட்டி வீட்டில் அதிக செல்லம் ஆதலால் தினமும் சாக்லேட் / க்ரீம் பிஸ்கட் என்று உண்டிருக்கிறாள். அவளது உடல் எடை கடந்த நான்கு மாதங்களில் பத்து கிலோ குறைந்துள்ளது.

சோர்வு, எதிலும் நாட்டமின்மை, கவனக்குறைவு, எப்போதும் தூக்கம், எப்பொதும் பசி – பசியென்றால் அகோரப்பசி – எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள்.

என்ன சாப்பிட்டாலும் எடை போடவில்லை என்பது பாட்டியின் கவலை, இரவு நேரம் தன்னைப்போலவே மூன்று முறை சிறுநீர் கழிக்கிறாள் என்பதும் பாட்டியின் கூடுதல் கவலை..

இந்த அறிகுறிகளை வைத்து அந்த பெண் பிள்ளைக்கு வந்திருக்கும் நோயை 95% யூகித்து விட்டேன்.

உடனே ரத்த சர்க்கரை அளவு பார்க்கும் மானியை எடுத்து விரல்களில் குத்தி சர்க்கரை அளவுகளை பார்த்தேன். எண்ணியது போலவே 594mg/dl என்று காட்டியது.

ஆம்… இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான டைப் ஒன்று நீரிழிவு திறன் படைத்தோர்களில் ஒருத்தியாய் இணைந்து விட்டாள் அந்த குழந்தை. சரி.. இனி தான் எனக்கு சவால் ஆரம்பிக்கிறது

அந்த காது கேளாத பாட்டியிடமும், எதுவும் புரியாமல் இருக்கும் அந்த குழந்தைக்கும் பேதைக்கும் இடையில் உள்ள பருவத்தில் இருக்கும் பிள்ளைக்கும், டைப் ஒன்று நோயைப்பற்றி பேசி புரிய வைத்தேன். (என்பதை விட தொண்டை தண்ணீர் வற்ற வற்ற கத்தி புரியவைத்தேன்.)

காரணம் நான் பேசியது அவளது பாட்டிக்கு கேட்கவில்லை, நான் போட்டிருந்த முகக்கவசத்தை தாண்டி அந்த பாட்டியின் பழுதடைந்த செவிப்பறைகளை என் குரல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கிட்டத்தட்ட நான் கத்திக்கொண்டிருந்தேன்.

பாட்டி படிக்காதவர், அதனால் நான் கூறியது பாதிக்கும் பாதி புரியவில்லை. என்னால் இயன்ற அளவு அந்த குழந்தைக்கும் பாட்டிக்கும் புரிய வைத்து விட்டு முடிக்கும் போது அவளது தாத்தா உள்ளே வந்தார்.

அவருக்கு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். ஆனால் இம்முறை அதிக ஒலி தேவைப்படவில்லை. அவர் ஓரளவு புரிந்து கொண்டார். உடனடியாக சில ஆயிரங்களுக்கு பரிசோதனை எடுக்கும் அளவு வசதி கிடையாது.

தந்தை மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் ஆட்டோ ஓட்டுகிறார். தாய் இவளின் இன்னும் சில சகோதரிகளை பார்த்துக்கொண்டு அங்கு இருக்கிறார். இன்சுலின் பரிந்துரைத்தேன்.

அதை ஏன் போட வேண்டும்?
ஏன் அதை நிறுத்தக்கூடாது?
அதை எப்படி போட வேண்டும்?
எந்த அளவுகளில் போட வேண்டும்?
எங்கு போட வேண்டும்?
எப்போது போட வேண்டும்?
என்று வரிசையாக கூறினேன்.

அடுத்து அந்த குழந்தையிடம் லோ சுகர் குறித்தும் அப்படி ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஒரு சிறு பாடம் நடத்தினேன்.

தாத்தாவிடமும் பாட்டியிடமும் இந்த பிள்ளைக்கு இன்சுலின் போட்டால் மட்டுமே குணமாகும் டைப் ஒன் டயாபடிஸ் நோய் வந்துள்ளது. இதற்கு இன்சுலின் மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு மருந்து. எனவே இன்சுலினை ஒரு போதும் நிறுத்தக்கூடாது.
யார் கூறினாலும் நிறுத்தக்கூடாது என்று அறிவுரை எச்சரிக்கை வழங்கினேன்.

அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள், அடுத்து அந்த குழந்தையிடம்
உணவு கட்டுப்பாடு குறித்து விளக்கி எழுதிக்கொடுத்தேன். அவள் அதன் மீது பெரிய அக்கறை காட்டியது போல் தோன்றவில்லை.

படிக்க:
♦ O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது என்பது உண்மையா ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !

இருப்பினும் இனிப்பு / பேக்கரி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மட்டும் கடுமையாக கூறினேன். அவளும் ஆமோதித்து தலையாட்டினாள், அவளது தாத்தா இன்சுலினை வாங்கி வந்தார். அதை எப்படி எப்படி கொடுப்பது என்று ஒரு டெமோ காட்டினேன்.

அவளது வீட்டருகே ஓய்வு பெற்ற செவிலியர் இருக்கிறார் என்பதும் அவர் இந்த ஊசியை போட்டுவிடுவார் என்பதும் ஒரு நிம்மதி பெருமூச்சு. இப்படியாக இன்று ஒரு டைப் ஒன்று நீரிழிவு திறன் கொண்ட ஒரு குழந்தையைக் கண்டறிந்தேன்.

படத்தில் தாங்கள் பார்ப்பது இன்சுலின் ஊசி கிடைக்கப்பெற்ற டைப் ஒன்று நோய் பாதிக்கப்பட்ட சிறுவன்.

fஒரு நோயைக் கண்டறிவதைக் காட்டிலும் அந்த நோய்க்கான சிகிச்சையை முன்னெடுத்துச் செல்வது, அதை நோயாளியை முழுமையாக உடன்படுமாறு செய்வது என்பது மிகப்பெரிய சவால்.

லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோயாதலால் இந்த நோயை முதன்முதலில் கண்டறியும் வாய்ப்பு என்பது ஆயிரத்தில் ஒரு மருத்துவருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய வாய்ப்பு.

இன்று அந்த நல்லவாய்ப்பை எனக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றியும் புகழும்.

உலகில் வாழும் டைப் ஒன்று நோயாளிகள் அனைவருக்கும் உயிர் காக்கும் அமிழ்தம் இன்சுலின் திரவத்தை கண்டறிந்த பாண்டிங் மற்றும் பெஸ்ட் சகோதரர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.

சில நாட்களில் மரணடைந்திருக்க வேண்டிய அந்த சிறுவன் பல ஆண்டுகள் நவீன மருத்துவ கண்டுபிடிப்பான இன்சுலினால் உயர் வாழ்ந்தான் என்பது வரலாறு.

இறைவனுக்கே புகழனைத்தும்

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க