O -க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது / மிக அரிதாக வரும் என்று ஒரு அமெரிக்க ஆய்வு முடிவைக் கொண்டு பல செய்திகள் நம்மிடையே வலம் வருகின்றன. அது குறித்த எனது குறு விளக்கம் நேற்று நியூஸ்18 தொலைக்காட்சியில் வெளியானது. இங்கு நம் சொந்தங்களுக்கும் அது குறித்த எனது விளக்கம் பின்வருமாறு ;

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 7.5 லட்சம் கொரோனா நோயாளிகளை வைத்து செய்யப்பட்ட மீளாய்வில். அவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டதாக கூறப்படும் செய்தி தான், “O” ரத்த வகையினருக்கு மற்ற வகையினரை விடவும் 9-18% கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர்.

அவர்களும் கூட O ரத்த வகயினருக்கு முற்றிலும் முதலுமாக கொரோனாவே வராது என்று கூறவில்லை. காரணம் அவர்கள் ஆராய்ச்சி செய்த அமெரிக்காவில் வாழும் கருப்பு இன அமெரிக்கர்களுள் “ஓ” வகை ரத்தம் இருப்பவர்களுக்கு ஏனைய உலகவாசிகளை விட அதிக அளவு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வின் முடிவில் AB ரத்த க்ரூப் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம்
என்றும் கூறப்படுகிறது. இந்த வகை ஆய்வுகளை Correlation study என்போம். அதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து அந்த இடத்தில் இருந்தவர்கள் மீது பழி சுமத்துவது போன்றதாகும்.

உதாரணத்துக்கு ஒரு க்ரைம் ஸ்டோரியை கற்பனை செய்து கொள்வோம்.

ஒருவரின் சாட்சியம் இது, “தூரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. நான் பால்கனியில் இருந்து பார்த்தேன். அப்போது ஒருவர் சரிந்து விழுந்து கிடந்தார். இன்னொருவர் தலையில் தொப்பியுடன் அந்த இடத்தை விட்டு ஓடினார்.” இதுவே சாட்சியம்.

படிக்க:
♦ என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
♦ ஹேப்பி ஹைப்பாக்சியா என்றால் என்ன ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

அவர் கூறும் ஆதாரங்களை வைத்து அந்த கொலை காரன் தலையில் தொப்பி மாட்டியிருந்தது தெரிகிறது என்று போலீஸ் கூறினால் சரியாக இருக்குமா?

மேலும் அவர் தலையில் முடி இல்லாமல் இருந்ததால் அதை மறைக்கவே தொப்பி மாட்டியிருக்கிறார். எனவே தலையில் முடியில்லாதவர்களை நாம் உடனே விசாரிக்க வேண்டும். தலையில் நன்றாக முடி வைத்திருப்பவர்களை வெளியே சுற்ற விடுங்கள் என்றும் கூறுவது அபத்தமான ஒன்றாகத்தானே இருக்கும்.

அது போல தான் பல நேரங்களில் இந்த Correlation studyகளும் அமைந்து விடும். இதே போன்ற ஒரு ஆய்வு முடிவு தலை சொட்டையாக இருக்கும் ஆண்களுக்கு கோவிட்19 வந்தால் மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியும் என்று கூறியது.

ஆனால் அதன் உண்மை நிலை என்ன? யாருக்கு கோவிட்19 பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது?

70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு.

அவர்கள் தலையில் முடியிருக்குமா? சொட்டையாக இருப்பார்களா?

அவர்களுள் 95% பேருக்கு தலையில் முடி இருக்காது.

இதை வைத்து ஆய்வு முடிவு வெளியிட்டு, சிறு வயதில் தலையில் சொட்டை விழும் பலரை பயமுறுத்துகிறார்கள். இதே போன்று தான் இந்த ரத்த வகை குறித்த ஆய்வு முடிவுமாகும்.

கோவிட் 19 வருவதற்கு, வெறும் 9-18% குறைவான ரிஸ்க் “ஓ” வகையினருக்கு இருக்கிறது. ‘ஏபி’ ரத்த வகையினருக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
இதுவும் ஒரு சந்தர்ப்பங்களைஅடிப்படையாக வைத்து செய்யப்படும் ஆய்வாகும்.

சந்தரப்பங்கள் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை Correlation is Not causation, எனவே ஓ ரத்த வகை கொண்ட மக்கள் இந்த ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு சகஜமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெளியே சுற்றித்திரியலாம் என்றும் நினைக்க வேண்டாம்.

மற்ற வகை நண்பர்கள் நமக்கு கொரோனா வந்துவிடும் என்று அஞ்சி நடுங்கவும் வேண்டாம். கொரோனா தொற்று வரும் வாய்ப்பு அனைத்து ரத்த வகையினருக்கும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கிறது. நமது அலட்சியம் அதை இன்னும் எளிதாக்கிவிடக்கூடாது

அலட்சியமும் அச்சமும் தேவையில்லை
எச்சரிக்கை உணர்வு போதுமானது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க