கொரோனா தடுப்பில் தோல்வியடைந்த சில நாடுகளின் தலைவர்கள், மக்களின் கோபம் தங்கள் மீது பாய்ந்து விடுமோ என அஞ்சுகின்றனர். மக்களின் கோபத்தை மடைமாற்ற பல்வேறு சாகச நடவடிக்கைகளில் ஈடு படுகின்றனர். நிறவெறி இன வெறியை தூண்டுகின்றனர். அண்டை நாடுகளுடன் மோதல்களை உருவாக்குகின்றனர். வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர்.

டிரம்பின் அடாவடித்தனம்

இத்தகைய முயற்சிகளை அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்டு டிரம்பு கடைபிடிக்கிறார். கொரோனா பரவலை தடுப்பதில் அலட்சியம் காட்டிய அவர், அது நாடு முழுவதும் பரவிய உடன், மக்களை திசை திருப்ப, சீனா மீதும், உலக நல நிறுவனம் மீதும் வெறுப்பு உணர்வை தூண்டிவிடுகிறார். ஆனால், அமெரிக்க மக்கள் டிரம்பின் மோசடிவார்த்தைகளால், ஏமாந்துவிடவில்லை. டிரம்ப் அரசுக்கு எதிராக அமெரிக்க மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் மாபெரும் கண்டனப் பேரணி உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மக்களை ஏமாற்ற, ஹைட்ராக்ஸி குளோரோக் குயின், கொரோனாவை தடுக்கும் மாபெரும் அருமருந்து என்றார் டிரம்ப். கடவுள் கொடுத்த அன்பளிப்பு என்றார். திடீரென பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் மேற்கொண்டது, மருத்துவ உலகத்தில், கடும் கண்டனத்திற்குள்ளானது.

அடுத்து, கிருமிநாசினிகளை ஊசி மூலம் செலுத்தினால், கொரோனாவை குணப்படுத்த முடியும் என்ற அபாயகரமான கருத்தை வெளியிட்டார். டிரம்பின், முட்டாள்தனமான இந்த அறிவிப்பை நம்பிய சிலர், கிருமிநாசினிகளை இரத்தக் குழாய்களில் மருந்தாக செலுத்திக் கொண்டு, பரிதாபமாக இறந்து போனார்கள்.

மோடியின் திசை திருப்பும் முயற்சிகள்

டிரம்பைப் போலவே, கொரோனா தடுப்பில் தோல்வி அடைந்த மோடி அரசு பல்வேறு போலி அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்துகிறது. தவறான அறிவியல் கருத்துக்களை பரப்புகின்றது. இது தவிர, பல்வேறு திசை திருப்பும் முயற்சிகளையும் மோடி அரசு மேற்கொள்கிறது.

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக நாம் திகழ்கிறோம். இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு. உலகமே நம்மை பாராட்டுகிறது. யோகாவைப் பற்றியும், ஆயுர்வேதா பற்றியும் உலகத் தலைவர்கள் என்னிடம் கேட்கின்றனர்” என்றெல்லாம் அளந்து விடுகிறார், நமது பிரதமர் மோடி. அப்படி யாரெல்லாம் கேட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை!

ஆனால் அதே சமயம், ஆயுஷ் அமைச்சரகம், “ஆயுஷ் மருந்துவ முறை மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும், என , ஊடகங்களில் யாரும் உரிமை கொண்டாடவோ, விளம்பரம் செய்யவோ, தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு செய்வதை மாநில அரசுகள் தடுத்திட வேண்டும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எல்லா மாநில அரசுகளுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா கொரோனாவை தடுக்குமா?

யோகாவை, ஒரு உடற் பயிற்சி என்றளவில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர,யோகா செய்வதால் கொரோனா பரவலை தடுக்க இயலாது. யோகாவை தனது இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு தொடர்ந்து சங் பரிவாரங்கள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில்,கொரோனா மக்கள் மனங்களில் உருவாக்கியுள்ள அச்சத்தைப் பயன்படுத்தி, யோகாவை திணிக்கும் முயற்சியை மோடி மேற்கொள்கிறார்.

உண்மையில்,யோகா என்பது சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றிய ஒன்று என்பதை வசதியாக மறைத்துவிட்டு,அதை இந்துத்துவப் பார்ப்பனிய கருத்தியலுக்கு,சங் பரிவாரங்கள் பயன் படுத்துகின்றன.

ஆரியர்களின் வருகைக்கு முன்பே யோகா இந்தியாவில் இருந்துள்ளது என்பதை வரலாற்று ரீதியாக அறிய முடிகிறது. யோகாவை இந்து மதத்திற்குள் அடைக்கும் முயற்சிகள் உள்நோக்கம் கொண்டது.

ஆயுர்வேதா கொரோனாவை தடுக்குமா?

அடுத்து, ஆயுர்வேதா குறித்தும் மோடி பேசுகிறார்.  ஆயுர்வேதா பண்டைய இந்திய மருத்துவ முறை.அன்றைய காலத்தின் அறிவியல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், கொரோனாவிற்கு ஆயுர்வேதாவில் தீர்விருக்கிறது. கொரோனா வராமல் தடுக்க அது உதவுகிறது என மோடி போதிய, ஆய்வுகளிலின்றி கூறுவது சரியல்ல.
மோடி அரசு, இன்றைய நவீன அறிவியல் மருத்துவத்தை மேற்கத்திய மருத்துவமாகவும், ஆங்கில மருத்துவமாகவும், கிறிஸ்தவ மருத்துவ முறையாகவும் பார்க்கிறது.

ஆயுர்வேதாவை, இந்திய மருத்துவ முறை என்பதைத் தாண்டி, அது ஒரு இந்து மருத்துவ முறை எனக் கருதுகிறது. அதை இந்து மருத்துவ முறையாக மாற்றிட முயல்கிறது. உண்மையில் ஆயுர்வேதா என்பது ஒரு இந்து மருத்துவ முறை அல்ல.

பஞ்ச கவ்யம் கொரோனா மருந்தாகிறது

தற்பொழுது, பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், ஆயுர்வேதா முறையில் பசு மாட்டு சாணம், பால், சிறு நீர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவை அடங்கிய பஞ்ச கவ்யத்திலிருந்து கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, “ராஷ்ட்ரிய காமதேனு அயோக்” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில், அது நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

கோமியம்

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், கங்கை நீரில் கொரோனாவை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா என ஆராய்ச்சி செய்யுமாறு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக கழகத்திடம் வற்புறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு, தடுப்பூசிகளை தயாரிக்கின்றன. ஆனால், இந்தியாவிலோ, பசு மாட்டுச் சாணிக்குள் இந்திய மருத்துவ அறிவியலை, இந்துத்துவா சக்திகள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.

நவீன அறிவியல் மருத்துவத்தின் இருண்டகாலம் மோடி அரசின் ஆட்சிக் காலம் எனக் கூறும் அளவிற்கு, நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

“விளக்கேற்றல் மூலம்”, கொரோனா என்ற இருளை அகற்ற முடியும் என மோடி அரசு பரப்புரை செய்தது. மக்களை விளக்கேற்ற வைத்தது. அதற்கு குவாண்டம் கோட்பாட்டின் அடிப்படையில் தவறான விளக்கங்கள், வழங்கப்பட்டன.

தமிழக முதல்வரோ, “கொரோனா எப்பொழுது கட்டுப் படும்?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “கடவுளுக்குத்தான் தெரியும்” எனக் கூறிவிட்டார். “மூன்று நாளில் கட்டுப்படும்” என ஏப்ரல் மாதம் கூறிய அவர், இப்பொழுது கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு, நழுவிக் கொண்டார்!

தமிழக அரசின் தவறான அணுகுமுறை

இந்நிலையில், தமிழக அரசின் உயர் அதிகாரிகளில் சிலரும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள சிலரும், கொரோனாவை தடுக்க, ‘திரள் காப்பை’ ( Herd Immunity) உருவாக்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு ஆபத்தான கருத்தாகும்.

சமூக காப்பு என்றால் என்ன?

ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் பொழுது, நமது உடலின் காப்பு அமைப்பு , அந்த வைரஸிற்கு எதிராக, எதிர்ப்பொருட்களை உருவாக்குகிறது. அந்த எதிர் பொருட்களால் மீண்டும் அந்த வைரஸ் நமது உடலில் தொற்ற இயலாது. இது போன்ற நிலை மக்கள் தொகையில் ஒரு கணிசமான பகுதியினருக்கு ஏற்பட்டுவிட்டால், மற்றவர்களுக்கு அந்த வைரஸ் பரவும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. இதைத்தான் திரள் காப்பு என்கிறோம் ( திரள் காப்பு என்பதை விட, சமூகக் காப்பு என்பதே சரியான சொல்லாடல்).

இந்த சமூகக் காப்பை, தடுப்பூசிகள் மூலமும் வெற்றிகரமாக பெற முடியும். அதுதான் நல்லது.

மக்கள் தொகையில் 60 விழுக்காடு நபர்களுக்கு, கொரோனா பரவல் ஏற்பட்டு விட்டால், அது மூலம் சமூகக் காப்பு ஏற்பட்டு விடும். அதன் மூலம் மீதமுள்ள 40 விழுக்காட்டினருக்கு கொரோனா பரவாமல் தடுக்க முடியும் என்பது அரசு அதிகாரிகளால் முன் வைக்கப்படும் கருத்து.

சமூகக் காப்பு பெறுவது எளிதா?

வைரஸை தொற்ற விட்டு, சமூகக் காப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல. சமூகக் காப்பு ஏற்பட நீண்ட காலம் ஆகலாம். அதற்குள் கொரோனா போன்ற தொற்றில், லட்சக் கணக்கான மக்கள் இறக்க நேரிடலாம்.

அடுத்து, கொரானாவிற்கு, சமூகக் காப்பு ஏற்படுமா என்பதும் உறுதியாகவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வேர்டு தொற்றியல் நிபுணர் மார்க் லிப்ஸ்டிச் “இந்த வைரஸ் தொற்றுக்குப் பிறகு நோய் எதிர்ப்பொருள் உருவாகும். அது ஓரளவு பாதுக்காப்பை குறுகிய காலத்திற்கு தரக்கூடும். அதன் பின் அந்த பாதுக்காப்பு குறைந்துவிடும் ’’ எனக் கூறியுள்ளார். அதை தற்பொழுது சில ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

இந்த வைரஸ் திடீர் மாற்றத்திற்கு உள்ளானால், ஏற்கனவே உருவான சமூகக் காப்பாலும் கூட, நமக்கு பயன் கிட்டாமல் போகலாம்.

சமூகக் காப்பு ஏற்பட, கொரோனா தொற்றால், போதுமான அளவிற்கு எதிர்பொருள் உருவாகுமா? அது மறு தொற்றை தடுக்கும் அளவிற்கு ஆற்றலுடன் இருக்குமா? என்பது குறித்து நடந்துவரும் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

இங்கிலாந்தும், ஸ்வீடனும் சமூகக் காப்பை உருவாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த நினைத்தன. அதானல் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகின.

சீனாவின், வூஹான் நகர மக்களுக்கே இன்னும் சமூகக் காப்பு உருவாகவில்லை. எனவே, எந்த வித அடிப்படை ஆதாரங்களோ, தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி, சமூகக் காப்பை உருவாக்க முயல்வது மிகப்பெரிய ஆபத்துக்கு வழி வகுக்கும்.

சமூகக் காப்பும் மற்ற நோய்களும்

சீனாவில் 2002 -04 ஆம் ஆண்டுகளில் பரவிய “சார்ஸ்க்கு” உருவான எதிர்ப்பொருள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வில்லை. சார்ஸ், எபோலா காய்ச்சல், நிபா வைரஸ் நோய், மெர்ஸ் போன்றவற்றை சமூககக் காப்பை உருவாக்கியதின் மூலம் கட்டுப் படுத்தவில்லை.

ஆபத்தான வழிமுறை

இந்த சமூகக் காப்பை பெற, எளிதாக, கடுமையான பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதியினரை தொற்றிலிருந்து பாதுக்காக்க வேண்டும். அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய, கோடிக்கணக்கான சர்க்கரை, மிகை இரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக நோயாளிகளை பாதுக்காப்பது எளிதானதல்ல.

முதியோர்களையும், கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாத்திட கோடிக்கணக்கான வீடுகளில் தனி கழிப்பறைகளுடன் கூடிய தனி அறைகள் இல்லை. இந்நிலையில் சமூகக் காப்பை பற்றி பேசுவது அபத்தமானது.

மாறாக, துரித நடவடிக்கை, நோயாளிகளை கண்டறிதல், தனிமைப் படுத்தல், சிகிச்சை வழங்கல், அவர்களுடன் தொடர்புடையோரை கண்டறிதல், தனிமைப் படுத்தல் போன்றவற்றின் மூலம் தான் கட்டுப்படுத்த முடிந்தது. உலக நல நிறுவனமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

தடுப்பூசிகள் தான் சரியான தீர்வு

கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற தடுப்பூசிகள் தான் சரியான தீர்வாக அமையும். பெரியம்மையை தடுப்பூசி மூலம்தான் ஒழித்தோம். போலியோ, கக்குவான், தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி,  தட்டம்மை, சின்னம்மை , மஞ்சட்காமாலை பி போன்ற பல நோய்களையும் தடுப்பு மருத்துகள் மூலமே கட்டுப் படுத்தியுள்ளோம்.

எனவே தடுப்பு மருந்துகள் (Vaccine) மூலம் கிடைக்கும் சமூகக் காப்புதான் பாதுக்காப்பானதாக இருக்கும்.

தடுப்பூசிகளின் வருகைக்காக உலகம் காத்திருக்கிறது!

(நன்றி: ஜன சக்தி )
குறிப்பு : செழுமை படுத்தப்பட்டது.

 

நன்றி : ஃபேஸ்புக்கில் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத். 

1 மறுமொழி

  1. நாட்டின் பிரதமரோ ஏப்ரல் 1, உலக முட்டாள் தினத்தில் புதிய அறிவிப்பு செய்து மக்களை மடையர்களாக்கியுள்ளார், மாநிலத்தின் முதல்வரோ இல்லாத கடவுளிடம் கேட்கவேண்டும் என்று துணிச்சலாக கூறியுள்ளார்,மெஞ்ஞானமுறைகளை கையாளவேண்டிய விஞ்ஞான கழகமோ(isro) புழை புனஸ்கரணங்கள் செய்து செயர்கைகோலை வின்களத்திர்க்கு எழுகிறது…பகுத்தறிவாளகளுகம் வேடிக்கை பார்க்கிறார்கள்…மக்கள் நிலைமையோ ???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க