கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பிற மாநிலங்களில் இருந்து பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.

இந்தியா முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டு தொழில்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் குறைவான கூலிக்குப் பணி செய்ய புலம்பெயர்ந்து செல்கின்றனர்.

கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பீகாரில் சுமார் 71.48 லட்சம் மக்கள் சொந்த ஊர்களில் இருந்து புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இதில் சுமார் 53 லட்சம் பேர் வெளிமாநிலங்களுக்கு வேலைதேடி புலம்பெயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, இதுவரை சொந்த ஊருக்குத் திரும்பிய சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் செய்வதற்கு எந்தவித மாற்று ஏற்பாடு ஏதும் செய்து தரப்படாமல், வருவாயின்றி நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம் வரை, வெளி மாநிலங்களில் இருந்து பீகாருக்கு உள்ளே வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்திய பீகார் அரசு, ஜூன் முதல் வாரத்தில் அந்த பரிசோதனையையும் நிறுத்தியது.

மொத்தத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப்படாத ஆளும் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி அரசு, எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் படுசுறுசுறுப்பாக தயாராகி வருகிறது.

படிக்க:
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ கொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் லாலுப்பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இக்கூட்டணி ஆட்சி இரண்டாண்டுகள் நிறைவடையும் முன்னரே, அமித்ஷா – நிதிஷ்குமார் கைங்கரியத்தில் அந்தக் கூட்டணி முறிந்தது.

இந்தக் கூட்டணி உடைப்பு நாடகத்தில், கடந்த 2005-ம் ஆண்டில் லல்லு பிரசாத் யாதவ் இரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் வழக்கை தூசி தட்டி எடுத்து முதலில் லல்லுவைக் கைது செய்தது சி.பி.ஐ. பின்னர், இதனையும் துணை முதல்வராக இருந்த லல்லுவின் மகன் மீதான ஊழல் புகாரையும் காரணமாக வைத்து இந்த கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தார் நிதிஷ்குமார்.

ஆளுனரிடம் தனது பதவி விலகலை தெரிவித்து விட்டு திரும்புவதற்குள்ளும் அவரது முடிவை வரவேற்று, அவருக்கு ‘நேர்மையாளர்’ என்ற சான்றிதழ் அளித்தார் மோடி. பீகார் சட்டமன்றத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பலம் 71-ஆக இருந்த நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 58 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் பாஜக-வின் சுஷில்குமார் மோடியைத் துணைமுதல்வராகக் கொண்டு, பீகார் முதல்வராக நீடித்தார் நிதிஷ்குமார். எதிர்வரும் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கும் ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணியில் லோக் ஜன்சக்தி கட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பீகார் மக்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் பீகாரில் டிஜிட்டல் பேரணியை நடத்தினார் அமித்ஷா. தேர்தலுக்கு இன்னும் 4 – 5 மாதங்களே இருக்கையில், தனது வழக்கமான ‘ஆள்கடத்தல்’ வேலைகளை பீகாரில் செய்துள்ளது அமித்ஷா – நிதிஷ்குமார் கூட்டணி. கடந்த ஜூன் 23 அன்று ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த மேலவை உறுப்பினர்கள் ஐந்து பேர் நிதிஷ்குமார் முன்னிலையில் ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்துள்ளனர்.

கடந்த மே மாதத்திலேயே, பாஜகவின் மாநில கட்சித் தலைமை மற்றும் தேசிய தலைமை வட்டாரத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தேர்தல் பிரச்சார வியூகம் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்திலேயே 224 தொகுதிகளுக்குமான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது பாஜக.

டிஜிட்டல் படையெடுப்போடு இந்தத் தேர்தலுக்கு பாஜக தயாராக இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாட்சப் (Whatsapp) குழு என்ற வகையில் மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள் தொடங்கவுள்ளதாகவும், அதன் மூலம் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் பல்வேறு வடிவிலான பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையதளம் பீகார் பாஜக தலைவர் ஒருவருடன் பேசியதிலிருந்து தெரிய வந்ததாக வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாஜகவின் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரச்சாரத் திட்டம் மலைக்கச் செய்கிறது.
இத்திட்டத்தின் படி, மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள், 9500 சக்தி கேந்திரங்கள் மற்றும் அவற்றுக்கான தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர்களுடன் பாஜக தேர்தலில் களமிறங்க உள்ளது. மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலேயே இந்த 72,000 குழுக்களில் 50,000 குழுக்கள் உருவாக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள குழுக்களும் விரைவில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார், பாஜக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஒருவர்.

இந்த 72,000 வாட்சப் குழுக்களை 9500 சக்தி கேந்திரங்களின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்கள் இயக்குவார்கள் என்றும் இவர்கள் பாஜக-வின் தேசிய ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியாவின் கீழ் இயங்குவர் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு சக்தி கேந்திரத் தலைவருக்கும் கீழ் 6 முதல் 7 வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்படும்.
‘தி பிரிண்ட்’ இணையதளத்திற்கு தகவல் கூறிய பாஜக ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவர் “டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாஜக பல ஆண்டுகளுக்கு முன்னரே இதனைச் செய்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயின் பேச்சுக்குரலை தொலைபேசி வழியாகக் கொண்டு சென்றது முதல் இன்று 3D வேன்கள் மூலம் எங்கள் தலைவர்களின் பேச்சை கொண்டு செல்வது வரையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல தயாராகி இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், மொத்தம் 72,000 வாட்சப் குழுக்கள் என்ற வகையில் ஒவ்வொன்றிலும் 256 பேர் எனக் கணக்கிட்டாலும் கூட தங்களது கருத்துக்களை சுமார் 2 கோடி பேருக்கு கொண்டு சேர்க்க முடியும் என்றும் கூடுதலாக இணையம் மூலம் கூட்டங்கள் நடத்த “ஜூம்” போன்ற இணையவழி காணொளி சந்திப்புக்கான உரிமம் பெற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பாஜக-வின் தேர்தல் பிரச்சாரத்தில் முதற்கட்டமாக, 72,000 வாக்குச் சாவடிகளிலும் மின்னணு திரைகள் வைத்து மாநிலம் முழுவதும் அமித் ஷாவின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்தத் தேர்தலில் முப்பரிமாண ஒளி அமைப்பின் (3D Display System) மூலம் பாஜக தலைவர்களின் பேச்சை பீகாரின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறது பாஜக.

பெரும்பான்மை பீகார் மக்கள், அடுத்தவேளை உணவுக்கு வழியின்றி, ஊரடங்குக்குப் பின்னர் தமது வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் அதற்கான தீர்வையோ, அதற்கான நிவாரணங்களையோ பற்றி துளிகூட அக்கறையற்ற நிதிஷ்குமார் – பாஜக கும்பல், இன்னும் 5 மாதத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு இப்போதே திட்டம் தீட்டி களத்தில் இறங்கியிருக்கிறது. கொரோனா சூழலில் பசியாலும் வறுமையாலும் வாடும் மக்களுக்கு முன்னால் டிஜிட்டல் திரைகள் மூலம் வளர்ச்சிப் பெருமை பீற்றுவதெல்லாம் வக்கிரத்தின் உச்சம் இல்லையா ?


– நந்தன்
செய்தி ஆதாரம்: த பிரிண்ட்.