கொரோனா நோய்த்தொற்று வந்த பிறகு உலக பொருளாதாரமே நொறுங்கி விட்டதாக தான் முதலாளித்துவ பொருளாதார மேதைகள் கூறுகின்றனர். ஆனால் யாருடைய பொருளாதாரம்? கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்து விட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பல மடங்கு குவிந்துள்ளதே எப்படி?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.

மார்ச் 18-க்கு பிறகு அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 565 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளதாக வாசிங்டனை சேர்ந்த கொள்கைரீதியான ஆய்வுகள் மற்றும் கிலியர்வாட்டர் (Institute for Policy Studies and Clearwater-IPS) என்ற சிந்தனை குழாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் அவர்களது செல்வம் 19 விழுக்காடு பெருகியுள்ளதா அதன் அறிக்கை கூறுகிறது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிற்கு மார்ச் 18 முன்பை விட 36.2 பில்லியன் டாலர் அதிகம் செல்வம் சேர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தான் 4.3 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காரணமாக புனர்வாழ்விற்காக விண்ணப்பங்களை அளித்திருக்கின்றனர்.

4.3 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்த போதிலும், கொரோனாவின் கோரம் உச்சத்தில் இருந்த போதிலும் நாஸ்டாக் (Nasdaq) குறியீடு என்றுமில்லா அளவில் உச்சத்தை அடைந்தது. அமெரிக்காவில் பணக்காரர்களின் இந்த திடீர் வளர்ச்சி என்பது அமெரிக்க மத்திய வங்கி எடுத்த திடீர் நடவடிக்கையினால் ஏற்பட்ட பங்கு சந்தையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கொரோனாவினால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க வட்டி விகிதத்தை ஜீரோவாக குறைத்தது, ஆபத்தான முதலீடுகளாக இருந்தாலும் வரம்பற்ற அளவிற்கு பத்திரங்களை வாங்கி அதை பங்குகளாக மாற்றியது போன்ற நடவடிக்கைகளை மத்திய வங்கி எடுத்தது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் நேரடி தொடர்பிலிருக்கும் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.

நெருக்கடியின் போது அமேசானின் பங்குகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்துள்ளன. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இறக்கத்திலிருந்தாலும் அதிகபட்ச வருமான சாதனைகளை பேஸ்புக்கும் பதிவு செய்துள்ளது. பெசோஸைப் போலவே, மார்ச் 18 முதல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் செல்வத்தின் மதிப்பானது 30 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை IPS அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஃபோர்ப்ஸின் உலகளாவிய பணக்காரர்கள் ஆய்வறிக்கை தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை வந்த நாளும் அமெரிக்காவின் ஊரடங்கும் மார்ச் 18 ஆக இருப்பதால் அந்த தேதியிலிருந்து இந்த ஆய்வு நடந்தேறியிருக்கிறது.

கடந்த 3 மாதங்களில் டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லேரி பேஜ், முன்னால் மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்து மதிப்பானது 15 பில்லியனுக்கும் அதிகமாக ஏறியிருக்கிறது. ஜூம்(Zoom) நிறுவன தலைமை அதிகாரியான எரிக் யுவான் சொத்து மதிப்பும் 2.8 பில்லியன் அதிகரித்திருக்கிறது. வால்மார்டின் பங்குதாரர்களான வாட்டன் குடும்பத்தினரின் சொத்து மதிப்பும் சுமார் 3 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் தான் கிட்டதட்ட 2.85 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 2008 நெருக்கடியின் போது ஏற்பட்டதை விட இது அதிகம். அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவில் வேலையிழப்பு 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு, வேலையிழப்பு, பட்டினி, உயிரிழப்புகள் உள்ளிட்ட நெருக்கடிகள் எளிய மக்களுக்கு தான் இவர்களுக்கல்ல.

படிக்க:
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !
♦ சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் ! 

உலக சூழல் :

ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டிருக்கும் கொரொனா உலக முதலாளிகளில் ஒருபகுதியினரையும் விட்டு வைக்கவில்லை. இதுவரையில்லாத அளவிற்கு 1,062 பணக்காரர்கள் சொத்து மதிப்பை இழந்துள்ளனர். அவர்களின் 267 பேர் பில்லியனர் தகுதியை இழந்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2019 -ல் 8.9 டிரில்லியனிலிருந்து 2020 -ல் 8 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொற்றுநோய் தன்னுடைய பிடியை இறுக்கிக் கொண்டதால், உலகளாவிய பங்குச் சந்தைகள் வெடித்துச் சிதறின. எஞ்சியிருக்கும் பில்லியனர்களில், 51 சதவீதம் பேர் கடந்த ஆண்டை விட சற்று சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.

கொரோனா நெருக்கடியில் குறைந்த விலை பொருள்களை விற்பனை செய்யும் சீன நிறுவனம் பிண்டுவோடுவின் நிறுவனரான கொலின் ஹுவாங் ஜெங் (Colin Huang Zheng) கடந்த இரண்டு மாதங்களில் அதிக சொத்து ஈட்டியவர்களில் ஒருவர். ஸ்பெயின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஜாராவின் முதலாளியும் இண்டிடெக்ஸ் இணை நிறுவனருமான அமன்சியோ ஒர்டேகா சற்றே இறக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.

அதே நேரத்தில் பெர்க்சயர் ஹாத்வே தலைமை நிர்வாக் அதிகாரி வாரன் ப்ஃபெட், உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மெக்சிகன் தொலைதொடர்பு வாணிபத் துறையில் பெருஞ்செல்வரான கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ஆகியோர் இந்த நான்கு மாத காலப்பகுதியில் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தவர்கள்.

இந்திய நிலைமை :

ஏழை எளிய உழைக்கும் இந்திய மக்களை கொரொனா பாடாய்ப்படுத்தினாலும் இந்தியரான முகேஷ் அம்பானி உலகில் 8வது உலகப்பெருஞ்செல்வராகி இந்தியர்களுக்கு சற்றே பெருமையைத் தேடித்தந்துள்ளார்(!). அதாவது, கொரோனாவிற்கு முன்பு 9-வது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். ஏப்ரல் 22 முதல் பல்வேறு ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனெரல் அட்லாண்டிக் உள்ளிட்ட பெரும் உலகளாவிய முதலீட்டாளர்கள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்-ல் முதலீடு செய்துள்ளனர்.

உலகிலேயே தடுப்பூசி தயாரிப்பதில் முதலிடத்திலிருக்கும் சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனவல்லா உலகிலேயே அதிவேக வளர்ச்சி விகிதத்தில் 5-வது இடம் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 57 இடங்கள் முன்னேறி 86 வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தால் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தை 100 கோடி எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்க பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் விளைவுகள் என்ன?

உழைப்பில் ஈடுபடும் ஆகப்பெரும்பான்மையான மக்கள் உண்ண உணவு கிடைக்காமல் தவிக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சொத்துக்கள் மென்மேலும் சேர்வதென்பது சமூகப் பதட்டத்தையும் போராட்டங்களையும் ஏற்படுத்துவதைக் கண்டு பொதுவில் அனைவரும் குறிப்பாக முதலாளித்துவ அறிஞர் பெருமக்களே கவலைப்படுகின்றனர். அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் நடந்த போரட்டங்கள் சமீபத்திய எடுத்துக்காட்டு. “உலகளாவிய தொற்றுநோய்களின் போது பெரும்பணக்கரர்களிடம் மென்மேலும் செல்வம் சேர்வது சமத்துவமற்ற தியாகத்தின் கோரமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரான சக் காலின்ஸ் கூறுகிறார்.

இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு மந்தநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் பாரதூரமான வீழ்ச்சி இந்தியப் பணக்காரர்களின் வளர்ச்சிக்கு இடையூறாகத் தெரியவில்லை. அதே சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்ட இந்திய உழைக்கும் வர்க்கம் ஆயிரக்கணக்கான மைல்கள் குறுக்கும் நெடுக்குமாக கால்கடுக்க நடந்து உள்ளங்கால் வெடித்து; வயிறு காய்ந்து மடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. நேரடி உழைப்புச் சார்ந்த தொழில்கள் மண்ணோடு மண்ணாக, வெறும் ஊக வணிகத்தில் ஈடுபடும் சிலரிடம் மென்மேலும் செல்வத்தை சேர்த்தது தான் நவீன முதலாளித்துவத்தின் சாதனை.


– சுகுமார்
செய்தி ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க