தேதி : 29.7.2020

பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க வருகிறது ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக்கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும்!

நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்ட புதிய கல்விக்கொள்கைக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி தலைமையிலான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014 இல் இருந்தே கல்விக் கொள்கையை மாற்ற தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.

நாடு முழுவதும் கல்வியாளர்களாலும், மாணவர்கள் அமைப்புகளாலும் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்ததால் அவ்வப்போது பின்வாங்கி வந்தவர்கள் இப்போது கொரோனா – ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறைகளால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு புதிய கல்விக்கொள்கையை நாட்டின் மீது திணிக்கிறார்கள்.

இது கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி! பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதுவரை இருந்து வந்த பள்ளிக்கல்வி அமைப்பு முறையை 5+3+3+4 என மாற்றியமைக்கப்படுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு. பள்ளிக்கல்விக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வகுக்கப்படுமாம். அனைத்துவிதமான உயர்கல்விக்கும், அதாவது கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வு, கல்லூரிகளே இனி பட்டம் வழங்கும் என உயர்கல்வி நிறுவனங்களை தன்னாட்சி பெற்றதாக மாற்றுவது, எம்.ஃபில் படிப்பை ஒழித்துக் கட்டுவது, கல்வித் துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது ஆகியவற்றை இப்புதியக் கல்விக்கொள்கை செய்யப் போகிறது.

ஏற்கனவே கல்வித்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதன் விளைவாக மாணவர்கள் கல்வி பெறுவதில் ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த வரைமுறையும் இன்றி பகற்கொள்ளையடிக்கிறார்கள், கல்விக் கட்டணம் கட்டமுடியாத பெற்றோர்களும், மாணவர்களும் அநியாயமாக தூக்கியெறியப்படுகிறார்கள். இதை எதையும் தடுக்க முடியாதபடி அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், அதிகாரிகளும், நீதிமன்றங்களும் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு துணையாக நிற்பது நாடறிந்த உண்மை. இந்நிலையில் கல்வித்துறையை முழுக்க தனியார்மயப் படுத்துவதென்றால் இனி ஏழைகளுக்கு கல்வி இல்லை என்பது நிச்சயம்.

படிக்க:
நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் உயிர்ப்பெறப்போகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிக்கப்படபோகிறது.

பாடப்புத்தகங்களில் பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் ஒழிக்கப்படும். இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது, சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது, தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவதுதான் இவர்களின் நோக்கம். சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவார்கள். உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

மொத்தத்தில், இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது. இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் களத்தில் இறங்குவோம். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாணவர் நலனுக்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!

தோழமையுடன்
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.