டந்த மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடரும் ஊரடங்கை நியாயப்படுத்த தான்தோன்றித்தனமான, வயிற்றெரிச்சலை ஏற்படுத்தக்கூடிய வக்கிரம் நிறைந்த வாதங்களை அடுக்கிவருகிறது, பார்ப்பன பா.ஜ.க. கும்பல்.

‘‘பல்லாங்குழி, தாயம், பரமபதம், கல்லாங்கல் ஆகிய ‘பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டு’க்களைக் குடும்பத்தோடு சேர்ந்து விளையாடி வருவதாகவும்; கரோனா போன்ற பெரும் சங்கடம் வந்திருக்கவில்லை என்றால், வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கை ஏன் ஏற்பட்டிருக்கிறது, வாழ்க்கை எத்தகையது ஆகியன பற்றி நாம் சிந்திக்கக்கூட முயன்றிருக்க மாட்டோம்” என்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி, இந்திய மக்கள் அனைவரும் இந்த ஊரடங்கு காலத்தில் ஆனந்தமாகவும் தத்துவவிசாரத்தில் ஈடுபட்டும் பொழுதைக் கழித்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார், பிரதமர் மோடி.

கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாகக் காட்டும் மோடி வித்தை போலவே, புளித்த ஏப்பக்காரனின் அனுபவத்தை இந்திய மக்களின் அனுபவமாக ஊதி விடுகிறார், மோடி. மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம்கூட அல்லாடிப் போய் நிற்கும் இந்த ஊரடங்கு காலத்தில் அன்றாடங் காய்ச்சிகளின் நிலை என்னவாக இருக்கும்?

உதிரித் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கரோனாவையும் ஊரடங்கையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் இந்து நாளிதழ் நேர்காணல் செய்து வெளியிட்டிருந்தது. அதனை பு.ஜ. வாசகர்களுக்காகச் சுருக்கி வெளியிட்டிருக்கிறோம். அச்சாமானிய மக்களின் ஊரடங்கு அனுபவம் பிரதமர் கூறிய அனுபவத்தை மறுதலிப்பதோடு, கரோனா தொற்றைவிட ஊரடங்குதான் அவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துவதை எடுத்துக் காட்டுகிறது.

– ஆசிரியர் குழு

***

எம்.எஸ்.பாண்டி, கிரானைட் கற்களை ஒட்டுபவர்

கழுத கெட்டா குட்டிச்சுவர்ங்கிற மாதிரி, கிராமத்துல விவசாயம் பொய்ச்சுதுன்னா ஒருத்தருக்கு முதல்ல சோறு போடக்கூடிய தொழில் கட்டிடத் தொழில்தான். எந்த வேலையும் தெரியாட்டியும் கல்லை, மண்ணைத் தூக்கிப் போட்டாவது பிழைச்சுக்கலாம். எத்தனை வருஷ சர்வீஸ் இருந்தாலும் இந்தத் தொழில்ல அதிகபட்ச சம்பளமே எண்ணூரு ரூபாதான். அதனால, மாசத்துல இருபது நாளைக்காவது வேலைக்குப் போனாத்தான் குடும்பம் நடத்த முடியும். முழுசா மூணு மாசமா வேலையில்லன்னா, எங்க நிலைமைய யோசிச்சுப் பாருங்க.

எஸ்.சித்தன், கிரேன் ஆபரேட்டர்,  கலவை இயந்திரம் இயக்குபவர்

ஊரடங்குக்குப் பின்னாடி வேலையெல்லாமே குறைஞ்சுடுச்சு. அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு வர்ற வேலையையும் அரசாங்கம் விதிக்குற கட்டுப்பாடுகள் நாசமாக்கிடுது. ஒரு நாள் மண்டலம்னு சொல்றாங்க, ஒரு நாள் மாவட்டம்னு சொல்றாங்க; எங்கேயிருந்து சார் எங்களை மாதிரி ஆளுங்க வெளியூர் வேலைக்குப் போறது? எங்களை மாதிரி ஆளுங்களால இ-பாஸ் எல்லாம் எடுக்க முடியுமா?

பாண்டிச்செல்வம், கொத்தனார்

பூராம் வெளிமாநிலத் தொழிலாளிங்களை இறக்கி ருசி கண்டுட்டாய்ங்க நம்மூரு மொதலாளிங்க. சல்லீசுக் கூலியில அவய்ங்க மாடா உழைச்சாய்ங்க. நம்மாளுக்கு வேலை இல்லைங்கிறதைப் பயன்படுத்திக்கிட்டு, முன்னாடி அவய்ங்க வாங்குன கொத்தடிமைச் சம்பளத்துக்கே நம்மளையும் கூப்பிடுறாங்க. வேற வேலை இல்லைங்கிறதால இப்படி நம்மாளும் போறான். இது என்னாகுதுன்னா, எல்லார் கூலியையும் பாதிக்குது. அரைக்கூலி, முக்காக் கூலிக்குத்தான் இப்பம் வேலைக்குப் போக வேண்டியிருக்கு; அரசாங்கம் முதல்ல பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தணும். ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம்.

மூக்கையா, செங்கல் சூளைத் தொழிலாளி

நீங்க கட்டிடத் தொழில்னு சொல்ற இந்தத் தொழில்ல குழி தோண்டுறவங்க, கம்பி வளைக்கிறவங்கனு 42 பிரிவு இருக்கு. அந்தத் தொழிலாளர்களிலேயே ரொம்ப ரொம்பக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை பாக்குறது நாங்கதான். கொத்தடிமைத்தனத்துலருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவந்தவங்க நாங்க; இந்த கரோனா திரும்பவும் எங்கள அந்தக் கொத்தடிமைத்தனத்துக்கே கொண்டுபோய் சேர்த்திடும்போல இருக்கு.

குமார், சமையல்காரர்

ஆயிரம் பேருக்குக் குறையாம சமையல் நடக்குற கல்யாணங்கள்ல வெறும் அம்பது பேருக்குத்தான் சாப்பாடுன்னா, எத்தனை பேருக்கு வேலை இருக்கும்? நாற்பது பேர் வேலை பார்த்த இடத்துல, நாலு பேரே அதிகம்னு ஆகிடுச்சி. பலருக்கு விருந்து பரிமாறுன கை அய்யா… இப்படியே போனா என்னாகும்னு இன்னைக்குப் பசியை நெனைச்சுப் பதறுறாங்க. இதெல்லாம் புரியாதவங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு ‘‘ஊரடங்கு போடு!”ன்னு பேசுறாங்க!

படிக்க:
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

ராஜேஷ்குமார், புகைப்பட நிபுணர்

போட்டோகிராபர், வீடியோகிராபர் மட்டுமல்லாம, ஆல்பம் டிசைனிங் செய்றவங்க, வீடியோ எடிட்டிங், ஆல்பத்தை பிரிண்ட் செய்யுற அச்சகம், ஒளிப்பதிவுக் கருவிகளை வாடகைக்கு விடுறவங்கன்னு தமிழ்நாடு முழுக்க ஒன்பது லட்சம் குடும்பங்களோட வேலை, வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் சார் இது. அரசோ, பொதுச் சமூகமோ எங்களை மாதிரியானவங்க பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு உணர்ந்த மாதிரிகூடத் தெரியலைங்கிறதுதான் பெரிய வருத்தமா இருக்கு!

மூர்த்தி, கல்யாண மண்டப உரிமையாளர்

முக்கியமான சீசனை இழந்துட்டோம். அட, எங்களை விடுங்க… ஒவ்வொரு கல்யாணத்தையும் நம்பி எத்தனை தொழிலாளர்கள் இருக்காங்க? கல்யாணத்துல அம்பது பேருக்குத்தான் அனுமதின்னு ஆயிட்டா, பலரு பத்திரிகைகூட அடிக்கிறதில்லை. ரெண்டு மாலையோடு பூ வேலை முடிஞ்சுடுது. மேளவாத்தியம்கூடத் தவிர்த்திடுறாங்க. அப்படின்னா எத்தனை வகை தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும்! மூணு மாசமா யாருக்கும் ஒத்த ரூபா வருமானம் இல்லீங்க!

தாவுத் மியான், தள்ளுவண்டி பிரியாணி கடைக்காரர்

நம்ம வியாபாரமே மூணு மணி நேரக் கணக்குதான். பகல் 12 மணிலேர்ந்து 3 மணி வரைக்கும். ஜனத்துகிட்ட காசு இல்லை. இதுலேயும் போலீஸ் கெடுபிடி வேற! போன வாரம் நாற்காலி எல்லாத்தையும் அள்ளி எறிஞ்சிட்டுப் போய்ட்டாங்க. பல நாள் மிச்சப்படுறதை ஏழைபாழைங்களுக்குச் சும்மா அள்ளிக்குடுத்திட்டு வீட்டுக்குப் போறேன். இதே நிலைமைதான் பக்கத்துல இளநீ, கரும்புச்சாறு, டீ விக்குறவங்களுக்கும். ஆனாலும், இடத்தையும் தொழிலையும் இழந்துடக் கூடாதுன்னு வீம்புக்கு யாவாரம் பண்றோம்.

ரவி, உணவக உரிமையாளர்

இது கிராமத்துக் கடை. வியாபாரிங்க, வழிப் போக்கருங்க இந்தச் சாலை வழி போறவங்க சாப்பிட்டுப்போற இடம்…. வர்றவங்ககிட்ட காசு இல்ல, அவங்களுக்கு வியாபாரம் இல்லைங்கிறது நல்லாவே தெரியுது. இட்லி சாப்பிட்டுட்டு ஒரு டீ குடிக்கிறதுக்குக்கூட யோசிக்கிறாங்க. ஆனா, இன்னொரு ஊரடங்கு எல்லாம் போட்டா பெரும் பாதிப்பாகிடும். ஜாக்கிரதையா மக்களை நடந்துக்க அனுமதிக்கிறதுதான் நல்ல வழிமுறை.

வேலவன் – சங்கீதா, வில்லிசைக் கலைஞர்கள்

ஆறு மாத்தைக்கு திருநெல்வேலி, நாகர்கோயில்ல நடக்குற கொடையாலதான் குடும்பங்கள் வாழும். சாமிக்கே கொடையில்லாதப்போ எங்க கதி என்னாகும்? கொல்லை வேலை, கொத்து வேலை, தீப்பெட்டி கம்பெனி, வேட்டு கம்பெனின்னு அவன் வாழ்நாள்லேயும் பார்க்காத வேலைக்கெல்லாம் போவ ஆரம்பிச்சிட்டாங்க. ராவுல முழிச்சிருந்துட்டுப் பகல்ல தூங்குற பழக்கம் உள்ளவன் எப்படிப் பகல் வேலையப்பார்க்க முடியும்? அரசாங்கம் எந்த முடிவை எடுக்கும்போதும் எங்களையெல்லாமும் சேர்த்து யோசிச்சு எடுக்கணும்!

தேன்மொழி ராஜேந்திரன், கரகாட்டக் கலைஞர்

நாட்டுப்புறக் கலைஞர்களைப் பொறுத்தமட்டுல இந்தக் கோடை காலகட்டம்தான் வருஷத்துல வருமானத்துக்குரியது. காவிரிப் படுகையைப் பொறுத்தமட்டுல தொடர்ந்து மூணாவது வருஷமா வாழ்வாதாரம் இழந்து வக்கத்துப்போய்க் கிடக்கிறோம். ரேஷன் அரிசியை வாங்கித் தின்னுட்டுதான் உசுரு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அதுவுமில்லைன்னா கதை முடிஞ்சுது.

பி.மணிமேகலை, நாடகக் கலைஞர்

கணவரைப் பிரிஞ்சு ஆறு வயசுப் புள்ளயோட இருக்கிற எனக்கு நாடகம்தான் உறுதுணையா இருந்துச்சு. இப்ப நாடகமும் இல்லன்னதும், ஏதோ அனாதையா ஆதரவில்லாம இருக்கிற மாதிரி இருக்கு. மாசத்துல பத்து நாளு வேலைக்குப் போனாலும்கூட, அதவெச்சு மீதி இருபது நாளை ஓட்டிடுவோம். ஆனா இப்படி மொத்தமா மூணு மாசம் வேலையில்லன்னா என்ன செய்றது? நகையை அடமானம் வெச்சு இப்ப ஓடிக்கிட்டிருக்கு. அதுவும் முடிஞ்சுருச்சுன்னா எப்படிச் சாப்பிடப்போறோம்னு தெரியலை.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

கிரேஸ் பானு, திருநபர்

தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருநகரங்களில் குழுவாக இருக்கிறார்கள். சிறு நகரங்களிலோ நாங்கள் உதிரிகள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் 5 கிலோ அரசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களுக்கு ரூ.1,000 கொடுத்தார்கள். ஆனால், இவை யாவும் திருநபர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கானவை. யதார்த்தத்தில் இங்கே திருநபர்கள் அடையாளமற்றவர்கள். அனைவரும் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்கள். பெரும்பாலானோரிடம் இந்தியக் குடிநபர் என்று நிரூபிப்பதற்கான எந்த ஆவணங்களும் கிடையாது. இந்நிலையில், ஆவணத்தைக் காண்பித்தால்தான் உதவிகள் வழங்கப்படும் என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயல்.

சையது – ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள்

என் அம்பது வருஷ அனுபவத்துல சொல்றேங்க, அழிமானம் தொடங்கிருச்சு. பொன்னி, கிச்சடி சம்பா மாதிரியான உயர்ரக அரிசி வியாபாரம் ரொம்ப விழுந்திடுச்சி. சாதாரண ரகம் போகுது, ஆனா, குறைஞ்சுடுச்சு. அதாவது, புதுசா ஒரு கூட்டம் ரேஷன் அரிசியையும், நிவாரணமா கொடுக்கிற அரிசியையும் சாப்பிடத் தொடங்கியிருக்காங்கன்னு பட்டவர்த்தனமா தெரியுது. அரிசி வியாபாரம் குறைஞ்சதால பாதிப்பு எங்களுக்கு மட்டுமில்லீங்க. கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகள், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள், தரகர்கள்னு ஒரு பெரிய கூட்டத்துக்கே பாதிப்பு.

எம்.காஜா, காய்கறி வணிகர்

தமிழ்நாடு முழுக்க ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கலாம். காய்கறிக் கடையில கூட்டம் குறைஞ்சிக்கிட்டேபோகுது. அதேபோல தற்காலிகச் சந்தைகள்ல கடைகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சிக்கிட்டே போகுது. வீடு வீடா போய் காய்கறி விக்கிறவங்களும் குறைய ஆரம்பிச்சிட்டாங்க. மக்கள்கிட்ட பணப்புழக்கம் இல்லாததுதான் காரணம். ஒருபக்கம் விவசாயிங்க விலை இல்லைனு காய்கறிகளைக் குப்பையில கொட்டுறாங்க. இன்னொருபக்கம் நாங்க விக்காம குப்பையில கொட்டுறோம்.

மஜீத், கருவாடு வணிகர்

கரோனாவுல கன்னாபின்னானு வியாபாரம் ஆறது கருவாடுதாங்க. முன்னத்தைவிட நாலு மடங்கு இப்ப கருவாடு விக்குது. இது எங்களுக்கு நல்ல சேதி; ஆனா, மொத்த சமூகத்துக்கும் நல்ல சேதியான்னு சொல்லத் தெரியலை. ஏன்னா, ‘‘கருவாடு அதிகம் வித்துச்சின்னா, பஞ்சம் நெருங்கிக்கிட்டிருக்கு”ன்னு கிராமங்கள்ல சொல்வாங்க. இருபது ரூபாய்க்குக்கூட காய்கறி வாங்க முடியாத நிலையிலதான் அஞ்சு ரூபாய் கருவாடு அதிகம் செலாவணி ஆகும். ஏன்னா, ரெண்டு துண்டு கருவாட்டைப் போட்டு, மொத்தக் குடும்பமும் கருவாட்டு வாசத்துலயே சாப்பிட்டு முடிச்சுடலாம். இப்போ அந்தச் சூழல் உருவாகிட்டு இருக்கிறதை உணர முடியுது.

தொகுப்பு: இளங்கதிர்
நன்றி: இந்து தமிழ் திசை
– புதிய ஜனநாயகம், ஜூலை 2020.