ஊடகத் துறையினரை மிரட்டி கருத்துரிமையை நசுக்கும் காவி பாசிசத்தை கண்டித்தும், CAA போராட்டத்தில் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும், பழங்குடி மக்களுக்காகவும் , இயற்கை வளங்களைக் காக்கவும்,போராடி கருத்துக்களை கூறும் ஜனநாயக முற்போக்கு அறிவுத்துறையினர், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே போன்ற மக்கள் போராளிகளை விடுதலை செய்யக்கோரியும் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து திருச்சியில் 03.08.2020 காலை 11 மணி அளவில் மரக்கடை இராமகிருஸ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பு குழுத் தோழர் சத்யா தலைமையேற்று முழக்கமிட்டு தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் சட்டத்திருத்தத்தை அம்பலப்படுத்தியும், திருச்சி உள்ளிட்ட தமிழக ஆறு, ஏரி, குளங்கள் சீரழிக்கப்படுவதை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர். ஐயா சின்னத்துரை அவர்கள் கண்டன உரையாற்றினார். கூடுதலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள EIA 2020-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் பேசினார்.
அடுத்து ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் சம்சுதீன் அவர்கள், கொரோனா காலத்தில் மக்களை தனித்திரு, விழித்திரு, வீட்டிலேயே இரு என சொல்லி மத்திய மோடி அரசு பல சட்ட திருத்தங்களை செய்து மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்வதை கண்டித்தும், காவி பாசிசத்தின் RSS, BJP காரர்களை சாதிவெறி, மதவெறி கருத்துகளை பரப்புவதை கண்டித்தும் புகார் கொடுக்கும்போது அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு துப்பில்லை. மாறாக புகார் கொடுக்கும் நபர்களை கூப்பிட்டு விசாரிக்கும் இந்த போலீசு ஜனநாயகப் பூர்வமாக நடக்கிறதா ? நான் விசாரணைக்கு போக மாட்டேன். என காவல்துறை அடவாடித்தனத்தை அவர்கள் முகத்தில் அறைந்தது போல பேசினார்.
அடுத்து திராவிடர் விடுதலை கழகத்தின் வழக்கறிஞர். தோழர் சந்துரு உரையில் கருப்பர் கூட்டம் பேசிய வீடியோ என்பது கந்த சஷ்டி கவசத்தில் உள்ள விஷயத்தை விளக்கி பேசினார். அதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வது தவறு. மாறாக ஆபாசக் குப்பைகளாக உள்ள கந்த சஷ்டி கவசத்தை எழுதியவரைதான் கைது செய்ய வேண்டும் என பேசியும் ஜனநாயக உரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் பறிப்பது, ஊடகவியலாளர்களையும் மிரட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்ற வகையில் கண்டன உரையாற்றினார்.
படிக்க:
♦ மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
♦ கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
அடுத்து பேசிய அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஸ்வரன். அவரது உரையில் இந்தியா ஜனநாயக நாடு, காந்தி தேசம் என்று கூறி இங்கே கொரோனா ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் இருக்க வைத்து மக்கள் குழு கடன், வீட்டு வாடகை கொடு என அவர்களை வீட்டை விட்டு நடுத்தெருவுக்கு இந்த அரசு துரத்துகிறது. ஆகஸ்டு 31 வரை பஸ், ரயில் ஓடாது என்றால் எப்படி வேலைக்கு செல்வது கடன் கட்டுவது, இது பற்றியெல்லாம் அரசு மக்கள் மீது அக்கறை இல்லாமல் வாட்டி வதைக்கிறது. பல சட்டங்களை திருத்தி மக்களுக்கு எதிராக மோடி அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருவதை எதிர்த்து போராட வேண்டும் என்பதை பேசினார்.
அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு பாடகர் தோழர் கோவன் பேசுகையில் இன்று காவிப் பாசிசம் என்ற இருள் நம்மை சூழ்ந்து வருகிறது. பகுத்தறிவு, சுயமரியாதை, ஜனநாயகபூர்வமான கருத்துக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்தும் அதனுடைய தோழர்களை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளனர். திருக்குறளுக்கு விளக்கவுரை பலரும் பேசியுள்ளனர். அதேபோல கந்தசஷ்டி கவசத்தில் உள்ள விஷயத்தை விளக்கி கருப்பர் கூட்டத்தில் தோழர்கள் பேசினார்கள். அவ்வளவுதான், உடனே இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி விட்டார்கள் என அவர்கள் மீது குண்டாஸ் போட்டுள்ளனர். இது ஜனநாயக நாடா? கருத்துரிமை, பேச்சுரிமை என்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றார்.
அடுத்து மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில் சாக்ரடீஸ் என்ற விஞ்ஞானி பட்டப்பகலில் தீப்பந்தம் ஏந்தி நடந்து சென்றார். காரணம் அறிவுள்ள மனிதர்கள் தேடுவதாக கூறினார். அது போன்றுதான் இங்கு போராட மக்களை தேட வேண்டியுள்ளது முட்டாள்களாகவும், அடிமைகளாக விவரம் அறியாதவர்களாக நாம் இருக்கக் கூடாது. மாறாக பகுத்தறிவுச் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார். அதேபோல இன்று காவிக் கும்பல் பகுத்தறிவற்ற, மதவெறி, சாதிவெறி கருத்துகளை பேசுகின்றனர். அதற்கு மக்கள் மயங்கக் கூடாது. மக்களுக்கு இந்த அரசு மருத்துவ சிகிச்சை கொடுக்க துப்பில்லை. கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை 5 நாளில் குணமாகிவிடுகின்றனர் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். 15 நாள் சிகிச்சை தருவது இல்லை. மாறாக ஒரு நோயாளிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி அதிலும் கொள்ளையடிக்கிறது இந்த எடப்பாடி அரசு. மக்களுக்கு சரியான முறையில் உணவு, சிகிச்சை கொடுக்காமல் அவர்களை சாகடிக்கிறது இந்த அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அடுத்து நன்றி உரையாற்றிய மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் இரண்டு நாள் முன்பு டெல்லி அரியானா மாநிலத்தில் குர்கான் பகுதியில் மாட்டிறைச்சி ஏற்றி சென்ற லாரி டிரைவரை நடுரோட்டில் பசு குண்டர்கள் தாக்கி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ்காரர்கள் முன்னிலையில் சுத்தியலால் பசு குண்டர்கள் கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற அவரை பலமுறை தாக்கியுள்ளனர். மக்கள் கண்டு கொள்ளவில்லை. போலீசார் கைது செய்யவில்லை. இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் செய்ய வேண்டும் என காவி கும்பல் பல வழிகளில் முயற்சிக்கிறது.
2015-ல் ஆட்டிறைச்சி வைத்திருந்த அக்லாக் என்பவரை மாட்டிறைச்சி வைத்துள்ளார் என பொய் பிரச்சாரம் செய்து அவரை அடித்தே கொன்ற கும்பல், இன்று பசு குண்டர்கள் மூலமாக அதே படுகொலை செய்ய எத்தணிக்கிறது. மோடி அரசு 2015-ல் பசுக் குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்கிழிய பேசினார். ஆனால் இன்று 2020-ம் ஆண்டு இன்று வரை பசு குண்டர்கள் தாக்குதல் குறையவில்லை. தமிழகத்தில் முற்போக்கான, ஜனநாயகபூர்வமான, சிந்தனை கருத்துக்களை ஒழித்து, திராவிட கருத்துக்களை ஒழித்து, பார்ப்பனிய இந்து மதவெறி கருத்துக்களை, முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பி வட மாநிலங்களைப் போல இங்கும் RSS, BJP கும்பல் கலவரத்தை நடத்துவதற்கு சதி செய்து வருகின்றனர். இதை எதிர்த்து களத்தில் முறியடிக்க வேண்டும் என பேசினார்.
மேலும் கலந்துகொண்டு பேசிய அனைத்து அமைப்புகளின் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் பாதுகாப்பளித்த காவல்துறையினருக்கும் நன்றி கூறி முடித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக தோழர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த பகுதி மக்கள் இயல்பாகவே வேலை நிமித்தமாக கூடும் பகுதி என்பதால் ஆர்வமாக நின்று கவனித்தனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.
தொடர்புக்கு : 94454 75157