ஆவடியில் இருந்து 06.08.2020 அன்று மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணிற்கு வயதான தம்பதியினர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வேலைக்காக வாங்கியதாகவும், கொரானா தொற்றுக் காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கினால் வேலை, வருமானம் இன்றி கடந்த 4 மாதமாக வண்டிக்கு தவணை கட்ட முடியாத சூழலில், “இன்னும் ஒரு மணி நேரத்தில் வண்டியை பிடிங்கி விடுவதாக…” வண்டிக்கு கடனளித்த நிறுவனத்தினர் போன் செய்து மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
பெரியவர் நெய்வேலியில் அலுவலகப் பணியில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இருவரையும் படிக்க வைக்கவும், திருமணத்திற்கென்றும் கனரா வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். தற்போது வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு தற்போது ஓய்வூதியமாக மாதம் ரூ. 9000 வருகிறது.
ஆனால் ஏற்கெனவே வாங்கிய கல்விக்கடன், திருமணக் கடனுக்காக நெய்வேலி கனரா வங்கி கடந்த ஒரு வருட காலமாக ஓய்வூதிய பணத்தைத் தராமல் கடனுக்காக ஈடுசெய்துகொள்கிறது. நேரில் சென்று மேனேஜரை பார்த்து தம்பதியினர் பேசியுள்ளார்கள். “முழு கடனையும் கட்டு! பிறகு மத்ததை பேசி கொள்ளலாம்” என ஈவிரக்கம் இல்லாமல் பேசியுள்ளார்.
“மாதம் பென்சன் ரூ. 9000-த்தையும், வருடத்திற்கு ரூ. 28,000 மருத்துவ செலவிற்கு வருவதையும் மொத்தமாக பிடித்துக்கொள்கிறீர்கள். இப்பொழுது கொரானா காலம் என்பதால், தற்போது பார்த்துவரும் வேலையிலும் வயதானவர் என சொல்லி, வேலைக்கு வேண்டாம் என சொல்லிவிட்டனர். ஆகையால், வாழ்வாதரத்திற்கு பணமே இல்லை. இப்படி மொத்தமாக பிடித்துக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக் கொள்ளுங்கள்.” என பேசியதை மேலாளர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
ஓய்வூதியம் என்பதே வயதான காலத்தில் பாதுகாப்பதற்காகதான். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக நெய்வேலி கனரா வங்கி மேலாளர் நடந்து கொள்கிறார். கடன்களைக் கட்ட நெருக்கடி கொடுக்கக் கூடாது என அரசுத் தரப்பில் பல்வேறு அறிக்கைகள் விடப்பட்டாலும், அது வெறுமனே மக்களின் காதுகளைக் குளிர்விப்பதற்காக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் கடன் வசூலிப்பவர்களின் வேட்டை தொடரந்து கொண்டேதான் இருக்கிறது.
படிக்க:
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
♦ மக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !
கந்து வட்டிக்காரர்களை விட மோசமாக ஒரு பொதுத்துறை வங்கி நடந்து கொள்கிறது என்பதே மக்கள் மீதான அரசின் அணுகுமுறைக்குச் சான்று. நூறு கோடி ஆயிரம் கோடி கடன் பெற்ற பெரு முதலாளிகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அயல்நாட்டுக்குப் பறந்து செல்ல அனுமதிக்கும் மத்திய அரசு, ஒரு நெருக்கடியான காலத்தில் மூத்த குடிமக்களிடம் மட்டும் ‘கறார்’ காட்டுகிறது.
கொரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்நிலை இயல்புக்குத் திரும்பாத சூழலில், வாழ்வாதாரமிழந்து மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலையில், கடன் வசூலுக்கான காலக் கெடுவை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட வீதியில் இறங்கி மக்கள் போராட வேண்டிய தருணம் இது.
தற்போது அந்தப் பெரியவர் பிரச்சினை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு சட்டரீதியான தலையீட்டை மேற்கொண்டிருக்கிறது மக்கள் அதிகாரம் !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.