ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து !! என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.

கொரோனா பெருந்தொற்றானது இந்த அரசு கட்டமைப்பின் தோல்வியை அம்பலப்படுத்திவிட்டது. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரியண்ணனாகத் திகழும் அமெரிக்கா மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து நாடுகளின் முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.

இந்நிலையில் தனது தோல்வியை மறைக்கவும், தனது அடக்குமுறை அனைத்தையும் சட்டப் பூர்வமாக்கவும் துடிக்கிறது மோடி அரசு. அதனால்தான் இப்பெருந்தொற்று சூழலைப் பயன்படுத்தி மின்சார திருத்தச் சட்டம், சுற்றுசூழல் சட்டத் திருத்தம், புதிய கல்விக் கொள்கை, கிரிமினல் சட்ட திருத்தம் என நீள்கிறது காவி – கார்ப்பரேட்  திட்டங்கள். ஆனால் இவை எதைப் பற்றியும் மக்கள் பேச முடியாதபடியும் எதிர்த்துப் போராட முடியாதபடியும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

மீறிப் போராடுபவர்களை “5-பேருக்கு மேல் கூடாதே…” எனக் கூறி வழக்கு பதிவு செய்கிறது போலிசு. மற்றொரு பக்கம் மக்களுக்காக பேசும் அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் பொய் வழக்குகளின் பேரில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த அரசின் மக்கள் விரோத சட்டங்களையும்  ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து யாரும் நீதிமன்றம் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய மோடி அரசு எவ்வித தங்குதடையுமின்றி தனது நாசகர திட்டங்களை அறிவித்து கொண்டே செல்கிறது. எனவே மக்களுக்கு, மக்கள் போராட்டங்களுக்கு ஊரடங்கு என்றால் இந்த அரசும் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. பெருந்தொற்று அபாயம்தான் உடனடிப் பிரச்சினை என்றால் அதனை தீர்ப்பது ஒன்றுதான் அரசின் முழு கடமையாக இருக்கவேண்டும். இல்லையெனில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்க துணை செய்யும் இந்த “ஊரடங்கை இரத்து செய்!” என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு ! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க