ன்பார்ந்த வினவு வாசகர்களுக்கு,

உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் களத்தில் வினவு இணையதளம் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

சமூக மாற்றத்தை விரும்பும் வாசகர்களும், ஆதரவாளர்களும் வழங்கும் மாதச் சந்தா மற்றும் நன்கொடையின் மூலமாகவே இத்தனை ஆண்டுகளாக வினவு இயங்கி வருகிறது. மேலும் அரசியல் தோழமையின் அடிப்படையில், புதிய ஜனநாயகம் மாத இதழும், வினவு தளத்தில் பணியாற்றும் பகுதிநேரத் தோழர்களும் வினவு தளத்தின் அவசியமான பொருளாதாரத் தேவைகளுக்கு கணிசமான தொகையை வழங்கி வருகின்றனர். இப்படிப் பலரது ஆதரவின் அடிப்படையில்தான் வினவுதளம் தொடக்கம் முதலே இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 அன்று மருதையன், நாதன் விலகலைத் தொடர்ந்து, வினவு ஆசிரியர் குழுவும் பொறுப்பிலிருந்து விலகியது. அதன் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வினவு தளத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக வினவு தளத்தில் பணியாற்றும் பெரும்பான்மைத் தோழர்கள் கூடி விவாதித்து, வினவு தளத்தின் தொடர்பாளராக இருந்த கண்ணையன் இராமதாஸ் (எ) காளியப்பன் அவர்களையே பொறுப்பாசிரியராக நியமித்தோம்.

வினவு தளத்தின் பொறுப்பாசிரியராக காளியப்பன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், வினவு தளத்தில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவரை பதிவுகள் வெளியிடும் பொறுப்பான இடத்தில் இருத்தினார்.

படிக்க :
♦ பு. மா. இ. மு. அமைப்பிலிருந்து த. கணேசன் நீக்கம் | பத்திரிகை செய்தி
♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !

அவரது துணையோடு, கொரோனாவுக்கும் ஏகாதிபத்திய லாபவெறிக்குமிடையிலான உறவு குறித்த சமூக அரசியல் ஆய்வுக் கட்டுரை, மின்வாரிய சட்ட மசோதா – 2020 குறித்த கட்டுரை உள்ளிட்ட பல அரசியல் முக்கியத்துவமிக்க கட்டுரைகளை வெளியிடாமல் முடக்கினார்.

மார்க்சிய லெனினிய அரசியல் பத்திரிகையான புதிய ஜனநாயகம் இதழை மின்னூலாகவும், அதன் கட்டுரைகளை தனித் தனிப் பதிவுகளாகவும் வினவு தளத்தில் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்திருக்கிறோம். ஆனால் காளியப்பன் அவர்கள் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றதும், புதிய ஜனநாயகம் மே மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளில் அரசியல் முக்கியத்துவமிக்கப் பல கட்டுரைகளை எந்தவிதக் காரணமும் இன்றி தளத்தில் வெளிவராதவாறு முடக்கினார்.

கடந்த ஜூலை மாத புதிய ஜனநாயகம் இதழின் மின்னூல் வினவு தளத்தில் பதிவாக வெளியிடப்பட்டது. ஆனால் வெளியிட்ட சில நிமிடங்களில் எவ்விதக் காரணமும் கூறாமல் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். அந்த இதழில் வெளிவந்த இரு முக்கிய அரசியல் கட்டுரைகளான அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம் குறித்த கட்டுரையையும், இந்திய சீன எல்லை மோதல் குறித்த தலையங்கக் கட்டுரையையும் வெளியிடாமல் தடுத்தார். அந்த இரு கட்டுரைகளும் மின்னூலில் இருப்பதால் புதிய ஜனநாயகம் மின்னூலையும் வெளியிட விடாமல் தடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நக்சல்பாரி எழுச்சி நாளின் 53-ம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரை, இ.பொ.க (மா.லெ)-வின் முதல் காங்கிரஸ் நடைபெற்றதன் 50-ம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரை, பு.ஜ.தொ.மு-வின் மே நாள் பிரசுரம் ஆகியவற்றையும் வெளியிடாமல் நிறுத்தி வைத்தார்.

அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான மார்க்சிய – லெனினிய அரசியலை ஜனரஞ்சக ரீதியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே வினவு தளத்தின் நோக்கம். மேற்காணும் மா-லெ அரசியல் கட்டுரைகளை வெளியிடாமல் முடக்கியதன் மூலம் மா-லெ அரசியல் நிலைப்பாட்டிலிருந்து காளியப்பன் அவர்கள் வழுவிச் சென்றுள்ளார்.

மேலும் பல தோழர்கள் எழுதியனுப்பும் கட்டுரைகளையும் வெளியிடாததற்கான காரணத்தையோ, குறைபாட்டையோ கட்டுரையாளர்களுக்குத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் பொறுப்பாசியர் என்ற பொறுப்பிலிருந்தும் வழுவியுள்ளார்.

படிக்க :
♦ புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

காளியப்பன் அவர்களின் மேற்கூறிய செயல்பாடுகளின் தாக்கம், வினவு தளத்திற்காக பணியாற்றும் தோழர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களது பங்களிப்பு சுருங்கும் அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது. முழு நேரமாகப் பணியாற்றிய தோழர்கள், வெறுப்படைந்து பகுதி நேரமாக மாறினர்.

இந்நிலைமைகள் குறித்து வினவு தளத்தில் தற்போது பணியாற்றும் 12 தோழர்களும் விவாதித்தோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தத் தளத்தின் தொடர்பாளராக அறியப்பட்ட காளியப்பன் அவர்கள், டாஸ்மாக் எதிர்ப்புப் பாடலை வெளியிட்டதற்காக ஜெயா அரசால் வினவு தளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போது வழக்கை துணிவோடு எதிர்கொண்டு அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியுள்ளார். அச்சமயத்தில் அவரை உந்தித் தள்ளிய மார்க்சிய லெனினிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் சென்றதையே அவரது சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன என்ற முடிவுக்கு ஒருமனதாக வந்தடைந்தோம்.

ஜூலை மாதத்திற்குப் பின்னர், பதிவுகள் வெளியிடும் பொறுப்புகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவரது அரசியல்ரீதியான தலையீடுகளை வினவு தளத்தில் பணியாற்றும் தோழர்கள் அனுமதிப்பதில்லை. எனினும், தற்போதைய அரசியல் புறச் சூழலில், வினவு தளத்தின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக, கேடான அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் காளியப்பன் அவர்களை இனியும் பொறுப்பாசிரியராகக் கொண்டு செயல்படுவது என்பது அரசியல்ரீதியில் எமது செயல்பாடுகளை முடக்கிக் கொள்வதற்கு சமமானதாகும். ஆகவே, காளியப்பன் அவர்களை பொறுப்பாசிரியர் பொறுப்பில் இருந்து நீக்குவது என ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

மேலும், வலைப்பூவிலிருந்து (wordpress blog) வினவு இணையதளமாக (site) மாற்றப்பட்ட சமயத்தில், வினவு தளத்தின் சர்வர் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், நன்கொடை பெறுவதற்கும் காளியப்பன் அவர்களின் வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. வினவு தளத்தின் தொடர்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார். அந்த வகையில் தளத்தின் சட்டரீதியான உரிமையாளர் என்ற பொறுப்பும், தளத்திற்கான வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. காளியப்பன் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றிருந்த இந்த இடைக்காலத்தில், தம்மை உரிமையாளர் என்று அதிகாரத் தொனியில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை வினவு தளத்தில் பணியாற்றும் தோழருக்கு அனுப்பியுள்ளார்.

சமூக நோக்கிற்காக செயல்படும் தளத்தில், அதிகாரத்துவப் போக்கையும், உடைமைக் கண்ணோட்டத்தையும், கொடுக்கப்பட்ட பொறுப்பை தவறாக பயன்படுத்தும் போக்கையும் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. ஆகவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த “தளத்தின் சட்டரீதியான உரிமையாளர்” என்ற பொறுப்பையும், தளத்திற்கான “வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்” என்ற பொறுப்பையும் திரும்பப் பெற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.

மேற்கூறிய சட்டரீதியான மற்றும் தார்மீகரீதியான பொறுப்புகள் அனைத்தையும், வினவு தளம் பின்பற்றும் அரசியல் நிலைப்பாடுகளை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டுவரும் தோழர் மகாலெட்சுமி அவர்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம்.  இனி வினவின் தொடர்பாளராக தோழர் மகாலெட்சுமி செயல்படுவார். அவரது தொடர்பு எண்-7358482113.

தளத்திலிருந்து வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான பொறுப்புகளை தோழர் மகாலெட்சுமியிடம் ஒப்படைக்க ஒத்துழைக்குமாறு காளியப்பன் அவர்களிடம் முறைப்படி கோரியுள்ளோம்.

இந்த பொறுப்பு மாற்றங்களின் நிலைமை குறித்து விரைவில் அறிவிக்கிறோம்.

தோழமையுடன்,

வினவு தோழர்கள்.
தொடர்புக்கு: 7358482113