கொரானா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்வேறு மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பெருமளவிலான குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது.

இந்தியாவில், ஆன்லைன் கேமில் ஈடுபடும் 60 சதவீதமானோர் 18 முதல் 24 வயதுடையவர்களே. ஊரடங்கில், பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமில் வெற்றி அடைபவர்கள் பணம் ஈட்டி, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள், மற்றும் விராட் கோலி, தமன்னா போன்ற முன்னணி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் விளம்பரத்திற்கு வருவது ஆகியவற்றில் மயங்குகின்றனர்.மேலும் தம்மாலும் எளிமையாக பணம் ஈட்ட முடியும் என்றும் நம்புகின்றனர்.

பின், பணத்தை இழந்து செய்வதறியாமல் தற்கொலை, கொள்ளை, கொலை ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர்.  மேலும், இதனால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மணமுறிவு வரை செல்வதாகவும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் பணத்தை இழந்த இளைஞர்கள் உள்ளிட்டு தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் கேமிங்கில் பணத்தை இழந்ததன் காரணமாக 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

படிக்க :
ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?
டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

இராமநாதபுரத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தனது பெற்றோரின் வங்கிக்கணக்கில் இருந்து 90 ஆயிரத்தை செலவு செய்ததும், வீட்டிற்கு தெரியாமல் இருக்க, வங்கியிலிருந்து தன் அப்பாவின் செல்பேசிக்கு வந்த SMS-களை அழித்ததும் செய்தியாக வெளிவந்தது. இதே போல ஆந்திராவிலும், வடமாநிலத்திலும் இலட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு பெற்றோரை ஏமாற்றிய சம்பவமும் வெளிவந்தது.

ஆன்லைன் கேம்கள் எனப் பொதுவாகக் கூறினாலும், PUBG மற்றும் FreeFire போன்ற கேம்களைத்தான் பெரிதாக மாணவர், இளைஞர்கள் விரும்புகின்றனர். இந்தியாவில் மட்டும் பப்ஜி செயலியை 5 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். செயல்பாட்டிலுள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் 3.30 கோடி பேர். உலகளவில் பப்ஜி கேமர்களில் 21 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். காரணம், தன் நண்பர்களுடன் கூட்டாக, அவர்கள் எங்கிருந்தாலும் பரஸ்பரம் பேசிக்கொண்டே விளையாடும் வகையில், எந்த செலவுமின்றி, எளிதில் அனைவரும் விளையாடும் வடிவில், நிஜ உலகிற்கு இணையாக 3d கிராஃபிக்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

களத்தில் இருக்கும் அனைவரையும் சுட்டு வீழ்த்தி ‘வெற்றியின்’ அடுத்தடுத்த இலக்குகளை அடைவது, நண்பர்கள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் அவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் உள்ளிழுத்து செல்கிறது. விளையாட்டில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தங்கள் ஐடி-க்கு தேவையான உடை, Gun Skin, Pet Skin, helmet, parachute, Skateboard என வாங்கி தாங்கள் விரும்பியபடி, ஐடி-யை ‘ராயலாக’ பராமரித்துக் கொள்வதுடன், அதை பிறருக்கு விற்கவும் செய்கின்றனர். இதற்காகவே, ஆயிரங்களில் இருந்து இலட்சங்கள் வரை பணத்தை விரயம் செய்கின்றனர்.

பொழுதுபோக்கிற்காக பப்ஜி, ஃப்ரிபயர் போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்கள், நாளடைவில் அதிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியே வரமுடியாமல் மூழ்கி அடிமையாகின்றனர். இதனால், தங்களுடைய வழக்கமான படிப்பு, வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட முடியாமல் கவனச்சிதறல், மன அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட நோய்களுக்கும், ஆத்திரப்படுவது, கோபப்படுவது போன்ற behavioural பிரச்சினைகளுக்கு ஆட்படுவதும், கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான, காரணம் விளையாட்டின் உள்ளடக்கத்தில் உள்ளது.

விளையாட்டில், எதிரியாக சித்தரிக்கப்படும் சக விளையாட்டாளரை நோக்கமற்ற முறையில், குழுவாக சேர்ந்து தங்கள் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தி, அடுத்தடுத்த கொலைகளுக்கு தயாராவதுதான் இதன் உள்ளடக்கம். விளையாடும் போது ‘மச்சி அவன விடாதடா போட்றா, போட்றா’, ‘அட்றா அவன, கொல்றா’ என ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் மொழி, வன்மத்தை துண்டுகிறது.

ஏதோ, விளையாட்டு தானே எனத் தோன்றலாம். ஆனால், “குழந்தைகள், நிழல் உலகம் (virtual world) கற்றுத்தரும் வன்முறையை நிஜ உலகிற்கு (real world) கொண்டுவரும் ஆபத்துள்ளது” என எச்சரிக்கிறார் WEF-ஐச் சேர்ந்த பாரூல் ஓரி.

அதற்கு உதாரணமாக, சமீபத்தில், ஜீ தமிழ் தொலைகட்சியின் தமிழா, தமிழா நிகழ்ச்சியில் பேசிய பல பெற்றோர்கள், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் தன் பிள்ளைகள் சின்ன சின்ன காரணங்களுக்காக கோபப்பட்டு செல்ஃபோனையும், வீட்டில் உள்ள பொருட்களையும் உடைப்பதாக கூறினர். ஒருவர் மகளிடமிருந்து செல்ஃபோனை பிடுங்கியதால், தன் கழுத்தைப் பிடித்ததாக கூறுகிறார்.

கடந்த மாதம், ம.பி-யில் 11 வயது சிறுவன், ஃப்ரி பயர் கேமில் தன்னை தொடர்ச்சியாக தோற்கடித்த 10 வயது சிறுமியின் தலையில் கல்லால் அடித்துக் கொன்றுள்ளான். தெலுங்கானாவில் பப்ஜி விளையாடுவதை கைவிட்டு படிக்க சொன்னதற்காக பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இச்சம்பவங்கள் உணர்த்துவது என்ன? PC கேம்களுக்கு அடிமையான அமெரிக்க மாணவர்களிடையே பரவிய துப்பாக்கிக் கலாச்சாரத்தை இதோடு ஒப்பிட்டால், இதன் ஆபத்தை புரிந்துகொள்ளலாம். உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் கேமில், ஈடுபடுவோர் சூதாட்டக் கோளாறுக்கு (gambling disorder) ஆளாவதாக 2018-ல் (WHO) அறிவித்துள்ளது.

படிக்க :
♦ சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
♦ உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்

உலகளவில் 560 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியா, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், ஆன்லைன் கேமிங்கிற்கான செயலிகளை பதவிறக்கம் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இருந்து வந்த சூழலில், கொரோனா ஊரடங்கு ஆன்லைன் கேமிங் கம்பெனிகளுக்கான கதவை மேலும் அகலத்திறந்துள்ளது.

2023-ல் இணையதள பயனர்களின் எண்ணிக்கை 650 மில்லியனாக அதிகரிக்கும் என்ற தகவல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சந்தை ஆதிக்கத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. 2010-ல் வெறும் 25 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் 2019-ல் அது 11 மடங்காக உயர்ந்து 275 நிறுவனங்களாக உள்ளது.

சமீபத்தில் நடந்த இந்திய சீன எல்லை மோதலை ஒட்டி, சீனாவுக்கு நேரடியாக பதிலடிக் கொடுக்க முடியாத இந்தியா, ஆன்லைனிலேயே தனது பதிலடியைக் கொடுத்தது நினைவிருக்கலாம். பப்ஜி உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது.  அந்த சந்தையைக் கைப்பற்ற, இந்திய நிறுவனம், நடிகர் அக்சய் குமாருடன் இணைந்து ஃபாவ்-ஜி (FAU:G) என்ற கேமை கொண்டுவர இருக்கிறது. இதன் முதல் கட்டத்தை, கல்வான் பள்ளத்தாக்கை அடிப்படையாகக் கொண்டு அமைத்துள்ளதாக கூறுகிறது அந்நிறுவனம். “பொழுதுபோக்கோடு, நமது இராணுவ வீரர்களின் தியாகங்களையும் தெரிந்துகொள்வார்கள் ”என்கிறார் அக்சய் குமார்.

அப்பட்டமாக தேசியவெறியை போர்வெறியாக்கி இந்துத்துவ பாசிஸ்டுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு இந்திய இளைஞர்களைப் பலி கொடுப்பதற்கான வழிமுறையை இந்துத்துவக் கும்னல் ஏற்படுத்தியிருப்பதை இதில் காணலாம். இப்படி உருவாக்கப்படும் போர்வெறியைப் பெருமையாகக் காட்டியே மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து பாசிசத்தை அமல்படுத்துகிறது இந்திய அரசு.

இந்தியாவில் 75% இளைஞர்கள்தான் என பீற்றிக்கொள்ளும் மோடியிடம், வேலை எங்கே என்று கேட்டால், பக்கோடா விற்பதுகூட சுயதொழில்தான் என வாய்க்கொழுப்புடன் பதிலளிக்கிறார். கல்வி, மருத்துவ உரிமைகள் பறிக்கப்படுகிறது. விவசாய, சுற்றுச்சூழல், தொழிலாளர்நல சட்டங்களை கிரிமினல்த்தனமாக திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வும், வேலையின்மையும் குடும்பங்களை பட்டினிக்குள் தள்ளுகிறது. மறுபுறம் அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களிடம் இந்தியாவின் 77 சதவீத சொத்துக்கள் குவிகிறது. உலகப்பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி கிடுகிடுவென முன்னேறுகிறார். மக்களோ ஓட்டாண்டிகளாப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் இத்தகைய சமூக அநீதிக்கும், கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிராக களத்தில் நிற்பவர்கள் மாணவர்கள் – இளைஞர்கள்தான். இந்தியாவின், CAA எதிர்ப்பு போராட்டத்தில் மோடி அரசை நிலைகுலைய வைத்தவர்களும் அவர்கள்தான்.

அத்தகைய இளைஞர்களை, நிஜ உலக பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி நிழல் உலகில் மூழ்கடிக்கிறது ஆன்லைன் கேம்கள். இயல்பான படைப்பாற்றல், சிந்தனை, அறிவு, நல்ல ஒழுக்க விழுமியங்களை, சமூகப்பற்றை காலி செய்து கொலைவெறியை, சகமனிதனை எதிரியாக பார்க்கும் சிந்தனையை, அனைத்து வர்க்க இளைஞர்களிடமும் கலாச்சார சீரழிவைத் திணிக்கிறது.

ஆளும் வர்க்கம், ஆன்லைன் கேம்களையும், சமூகத்தில் அதனால் ஏற்படவிருக்கும் தாக்கத்தையும் தெளிவாகத் தெரிந்தேதான் இதனை அனுமதிக்கிறது. குறிப்பாக ஊக்குவிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா டுடே 2,50,000 ரூ பரிசுத்தொகை அறிவித்து பப்ஜி கேம்க்கான போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

“கஞ்சிக்கு வழியில்ல கேம் கேக்குதா” எனக் கண்டிக்கிறது அடித்தட்டு வர்க்கம். “குளிப்பதில்லை, உண்பதில்லை, வீட்டில் இருப்பவர்களுடன் சரியாக பேசுவதில்லை. மனநோயாளி போல உள்ளான்” என வருத்தப்படுகிறது நடுத்தரவர்க்கம். இப்படி, இளைஞர்களிடம் ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ள கும்பல் கலாச்சாரம், போதை உட்பட அனைத்து சீரழிவுகளையும் மேலும் வளர்த்து மனநோயாளியாக்குகிறது.

தன் உரிமைகள் பறிக்கப்படுவதைப்பற்றி, தன் மீதான சுரண்டல் பற்றி கண்டுகொள்ளாத, பொறுப்பற்ற தக்கை மனிதர்களைத்தான் உருவாக்க விரும்புகிறது முதலாளித்துவம். அதற்கு, பொருத்தமான உள்ளடக்கத்தோடுதான் ஆன்லைன் கேம்கள் டிசைன் செய்யப்படுகிறது. ஆளும்வர்க்கத்தின் விருப்பத்திற்கிணங்க, ஸ்மார்ட் ஃபோன்களின் வழியே நிழல் உலகிற்குள் தலையை மூழ்கிக் கொண்டு உரிமைகளை இழப்பதா ? அரசின் மக்கள் விரோத, மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கு  எதிராக களத்தில் இறங்குவதா? முடிவு செய்ய வேண்டிய தருணம் இது.

அருணகிரி