உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 11

பாகம் – 10

உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி? – தொடர்ச்சி

நான்காவதாக, கட்சிக்குள்ளேயும், வெளியிலேயேயும் போராட்டங்கள் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்; பலவேறு குற்றங்களும் குறைபாடுகளும், செய்த வேலையின் பரிசீலனையிலும், தொகுத்துக் கூறும் பொழுதும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். முதலில் ‘விசயத்தில்’ கவனம் செலுத்த வேண்டும்; பிறகுதான் “ஆளுக்கு” வரவேண்டும். முதலாவதாக விசயங்களை, விவாதத்திற்குரியனவற்றை, அதன் தன்மையை, முக்கியத்துவத்தை, குற்றங் குறைகளின் காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்; அதற்குப் பிறகுதான் இந்தக் குற்றங்களுக்கு யார் காரணம், யாருடையது பிரதான பொறுப்பு, யாருடையது குறைந்த பொறுப்பு என்று சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்த தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் யார் பொறுப்பாளி  என்று கேட்டுக்கொண்டு ஆரம்பிக்கக்கூடாது; ஒரு தோழர் தெரியாமல் தவறு செய்கிறார், பரிபூரணமாக அந்தத் தவறை உணருகிறார், அதை திருத்திக் கொண்டும் வருகிறார் என்ற நிலைமை இருக்கும் வரையில் அத்தோழரை மனமார வரவேற்க வேண்டும். அதில் அதிநுட்பம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது; உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில் நமது கொள்கை ஊழியர்களுக்கும் தோழர்களுக்கும் அடி கொடுப்பது, மற்றவர்களைத் தாக்குவது, அவர்களுக்கு அடிகொடுப்பது அன்று. ஏனெனில் அத்தகைய கொள்கை சாராம்சத்தில், சவுக்கடி கொடுக்கும் கொள்கை, தொழிலாளர் மக்கள் விசயத்தில் சுரண்டும் வர்க்கங்கள் கையாளும் அடக்குமுறைக் கொள்கையேயாகும். நமது கொள்கை ஊழியர்களுக்குள் பரஸ்பர உதவி, பரஸ்பர பரிசீலனையாகும்.

அடிக்கடி முடிவுகளை, கட்டுப்பாட்டை, கம்யூனிஸ்டு ஒழுக்கத்தை மீறும் குறிப்பாக மிகக் குறும்புத்தனமான தோழர்கள் விசயத்தில் கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் அவர்களுடன் வாதிக்க முடியவில்லை எனும்பொழுது சில குறிப்பான விசாரணைக் கூட்டங்கள் நடத்துவது அனுமதிக்கப்படும் என்பது மட்டுமல்ல, இது சில சமயங்களில் அத்தியாவசியமும் கூட, அத்தகைய நடைமுறையை பொதுவாக தாக்குவது என்பது தவறாகும்.

ஐந்தாவதாக, விமர்சிக்கப்பட்ட, தண்டிக்கப்பட்ட தோழர்கள் மேல்கமிட்டிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்வதற்கு எல்லா சந்தர்ப்பமும் அளிக்கப்பட வேண்டும். ஒரு தோழரைப் பற்றி செய்யும் அமைப்பு முடிவுகள், குறிப்புகள் எல்லாம் நேரில் அறிவிக்கப்பட வேண்டும்; இவை அவர் முன்னிலையில் செய்யப்பட வேண்டும். அவர் ஒப்புக்கொள்ளவில்லையென்றால், பின் விவாதத்திற்குப் பிறகு, அந்த விசயத்தைப் பற்றி மேலதிகாரிகளுக்கு அனுப்பலாம். (தண்டிக்கப்பட்ட பிறகு, அதிருப்தி தெரிவிக்கும் எந்த தோழர் சம்பந்தப்பட்ட விசயத்திலும் அந்த தோழரே மேலதிகாரிகளுக்கு விண்ணபித்து கொள்வதற்கு விரும்பாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்ட கட்சி அமைப்பு அவ்விசயத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்) தண்டிக்கப்பட்ட தோழர் மேலதிகாரிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்வதை எந்த கட்சி அமைப்பும் தடுக்க முடியாது. கட்சி அங்கத்தினருக்கும் மேல்முறையீடு செய்யும் உரிமையை மறுக்க முடியாது. எந்த மேல்முறையீட்டையும் எந்த கட்சி அமைப்பும் அனுப்பாமலே வைத்துக் கொள்ள முடியாது.

சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் சம்பந்தப்பட்ட கட்சி அங்கத்தினர், நேரிடையாக ஒரு மேல் கட்சிக் கமிட்டிக்கு அல்லது மத்திய கமிட்டிக்கு அவர் அங்கம் வகிக்கும் கட்சி அமைப்பின் அனுமதி பெறாமலே மேல்முறையீடு செய்து கொள்ள முடியும். அம்மாதிரி மேல்முறையீடு செய்து கொள்ளும் அத்தோழர் மேல்முறையீடு செய்வதற்கு முன்பு முதலாவதாக தனது அபிப்பிராயத்தையும், காரணங்களையும் வேறுபாடுகளையும் பூரணமாக விளக்க வேண்டும்; இவையனைத்தையும் தனது கட்சி அமைப்பிற்கு தெளிவுபடுத்த வேண்டும்; தனது அமைப்பில் வாய் மூடிக்கொண்டு, மேலுள்ள கட்சி அமைப்பை ஏமாற்றும் நோக்கத்துடன், அத்துடன் பொறுப்பற்ற பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடாது. எப்பொழுது மேல்முறையீடு செய்கிறார்களோ, அப்பொழுது இறுதி முடிவு மேல்கட்சி அமைப்பைச் சேர்ந்து விடுகிறது. கீழ்மட்டத்திலுள்ள ஒரு கட்சிக் கமிட்டி ஒரு தோழர் மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை மேல்கமிட்டி ரத்து செய்யவோ, குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம்.

சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் விவாதத்திற்கு பின்னரும் கட்சி அமைப்பிற்குள் முடிவாக ஒருமைப்பாடு ஏற்படவில்லையெனில் அவ்விசயத்தை பெரும்பான்மை முடிவுப்படி தீர்க்கலாம். அதற்குப் பிறகு இன்னும் அபிப்பிராய பேதங் கொண்டிருக்கும் சிறுபான்மையினருக்கு அபிப்ராய சுதந்திரம் உண்டு; நடவடிக்கைகளிலும் பெரும்பான்மையின் முடிவுக்கு பரிபூரணமாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

ஒருசில தோழர்களோ அல்லது கீழ்மட்டத்திலுள்ள கட்சிக் கமிட்டிகளோ, மேலுள்ள கட்சி கமிட்டியை அல்லது தலைமைக் கமிட்டியை, செய்த வேலையை பரிசீலனை செய்யும் பொருட்டு தக்க கூட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டால், மேல்கமிட்டி சாத்தியமான பொழுது தனது வேலையை பரிசீலிப்பதற்கு அத்தகைய கூட்டங்களை கூட்ட வேண்டும்.

ஆறாவதாக, கட்சிக்குள் நிகழ்த்தும் போராட்டத்திற்கும், கட்சிக்கு வெளியில் நடத்தும் போராட்டத்திற்கும் இடையில் தெளிவான வரையறுப்பும், முறையான இணைப்பும் வேண்டும். கட்சிக்கு வெளியில் நடத்தும் போராட்டத்திற்கு உட்கட்சிப் போராட்டத்தில் உபயோகப்படுத்தும் அதே வடிவங்களை கைக்கொள்ளக் கூடாது. அதே போல் கட்சிக்குள் நடத்தும் போராட்டத்திற்கு கட்சிக்கு வெளியில் நடத்தும் போராட்ட வடிவங்களை கைக்கொள்ளக் கூடாது; வெளியிலுள்ள சக்திகளையும், நிலைமைகளையும் கட்சியை எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்த்துவதற்கும், கட்சியை பயமுறுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்வதை தவிர்க்க விசேஷ கவனம் செலுத்த வேண்டும். எல்லா கட்சி அங்கத்தினர்களும் விசேஷ உஷார் உணர்வு காட்ட வேண்டும்; இல்லையெனில் ஒளிந்து கொண்டிருக்கும் ட்ராட்ஸ்கீயவாதிகளும், எதிர்ப்புரட்சிக்காரர்களும் கட்சிக்குள் நடக்கும் தகராறுகளையும் போராட்டங்களையும் அவர்களுடைய சீர்குலைவு நடவடிக்கைகளையும் நடத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். உட்கட்சிப் போராட்டங்கள் நடத்துவதில், இந்த நபர்கள் கட்சித் தோழர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது. கட்சிக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக நிலைநாட்டுவதின் மூலமும் உட்கட்சிப் போராட்டத்தை முறையாக நடத்துவதின் மூலமும் இதைச் செய்ய முடியும்.

கட்சிக்குள் பகிரங்கமான போராட்டங்களும், சித்தாந்தப் போராட்டங்களும் மட்டும்தான் அனுமதிக்கப்படும். கட்சியின் சட்ட திட்டங்களையும், கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறும் எந்தப் போராட்ட வடிவமும் அனுமதிக்கப்படமாட்டாது.

ஏழாவதாக, கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகளைத் தடுக்கும் பொருட்டு, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை வரையறுத்து வைப்பது அவசியம்:

1. கட்சி தலைமைக் கமிட்டி கட்சி அமைப்பிடம் மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட கட்சி அங்கத்தினர்கள், அவர்களுடைய அபிப்பிராயங்களையும், விமர்சனங்களையும், தக்க கட்சி அமைப்புகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்; பொதுஜனங்களிடம் அது பற்றி தற்செயலாகக் கூட பேசக்கூடாது.

2. மற்ற கட்சி அங்கத்தினர்களுடன் அல்லது சில பொறுப்பான கட்சி அங்கத்தினர்களுடன் மாறுபட்ட அபிப்ராயம் கொண்ட கட்சி அங்கத்தினர்கள் அவர்கள் முன்னிலையில் அல்லது சில குறிப்பான கட்சி அமைப்புகளில் விமர்சனம் செய்யலாம்; அதைப் பற்றி வெளியே போகிற போக்கில் பேசக்கூடாது.

3. மேல் மட்டத்திலுள்ள ஒரு கட்சிக் கமிட்டியுடன் ஒரு கட்சி அங்கத்தினரோ அல்லது கீழ்மட்டத்திலுள்ள கட்சி கமிட்டிகளோ, வேறுபடுவார்களானால் அந்த பிரச்சினையை மேல் மட்டத்திலுள்ள கட்சிக் கமிட்டியில் கிளப்பலாம்; விசயத்தை அலசி ஆராய்வதற்கு கூட்டம் கூட்டும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்; அல்லது இதற்கு மேல் மட்டத்திலுள்ள கட்சிக் கமிட்டியின் கவனத்திற்கு அவ்விசயத்தைக் கொண்டு போகலாம்; ஆனால் அதைப்பற்றி பொறுப்பற்று பேசித் திரியவோ அல்லது அதற்கு இன்னும் கீழ்மட்டத்திலுள்ள கமிட்டியிடம் அதைப் பற்றி தெரிவிக்கவோ கூடாது.

4. கட்சி அங்கத்தினர்கள், வேறு ஏதாவது ஒரு கட்சி அங்கத்தினர் தவறு செய்வதையோ, கட்சியின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் நடந்து கொள்வதையோ கண்டுபிடித்தால் அத்தகைய நடவடிக்கைகளை அதற்கு தக்க கட்சி அமைப்பிற்கு அறிவிக்க வேண்டும்; விசயத்தை மூடி மறைக்கவோ அல்லது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு அளித்துக் கொள்ளவோ கூடாது.

5. கட்சி அங்கத்தினர்கள் நேர்மையான வேலை முறையை வளர்க்க வேண்டும்; வஞ்சகத் தன்மை கொண்டது எதையும் எதிர்க்க வேண்டும்; எந்தவித வஞ்சகப் பேச்சானாலும் செயலானாலும் சரி, அதை எதிர்க்க வேண்டும்; வீண் பேச்சு, வம்பளப்பு, மற்றவர்களுடைய ரகசியங்களைக் துருவித் தெரிந்து கொள்ள முயலுவது, வதந்திகளை பரப்புவது முதலியவற்றில் ஈடுபடுகின்ற அனைவரையும் வன்மையாக கண்டனம் செய்ய வேண்டும். கட்சியின் தலைமைக் கமிட்டிகள் அடிக்கடி சில குறிப்பான விசயங்களை பற்றி, கட்சி அங்கத்தினர்கள் பேசுவதற்கு தடையிட்டு கட்டளை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்.

6. எல்லா மட்டங்களிலுள்ள தலைமைக் கமிட்டிகள், அடிக்கடி வீண் பேச்சு, கோட்பாடற்ற தகராறுகள் முதலியவற்றில் ஈடுபடும் தோழர்களை அழைத்து, அவர்களுடன் பேச வேண்டும்; திருத்த வேண்டும்; அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்; மற்ற வழிகளில் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும்.

7. எல்லா மட்டங்களிலுமுள்ள கட்சிக் கமிட்டிகள் கட்சி அங்கத்தினர்கள் முன்வைக்கும் அபிப்பிராயங்களை மதிக்க வேண்டும். பிரச்சினைகளை விவாதிக்கவும், செய்த வேலையை பரிசீலைனை செய்யவும் அடிக்கடி கூட்டங்களைக் கூட்டி கட்சி அங்கத்தினர்கள் தங்கள் அபிப்பிராயத்தை அறிவிப்பதற்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும்.

கோட்பாடற்ற போராட்டங்கள் பொதுவாகவே தடை செய்யப்பட வேண்டும்; அதன் மீது தீர்ப்புக் கூறக்கூடாது. ஏனெனில் தீர்ப்புக் கூறுவதென்பது முடியாத காரியம்.

(தொடரும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க