சிபிஐ-ன் கஸ்டடியில் இருந்த சுமார் 400 கிலோ தங்கத்தில், “மாயமான” 100 கிலோ தங்கத்தைக் கண்டுபிடிக்குமாறு தமிழக போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2012-ம் ஆண்டு இந்திய கனிமங்கள் மற்றும் உலோக வர்த்தகக் கழகம் மற்றும் சுரனா கார்ப்பரேசன் எனும் தனியார் நிறுவனம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சுமார் 400 கிலோ தங்கத்தை சி.பி.ஐ கைப்பறியது.  தங்கம் மற்றும் வெள்ளி ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வரும் சுரானா கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக இந்திய கனிமங்கள் மற்றும் உலோக வர்த்தகக் கழகத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு, இந்த இரு நிறுவனங்களின் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சென்னையில் உள்ள சுரானா கார்ப்பரேசன் நிறுவனத்தின் கட்டிடத்தில் சுமார் 400 கிலோ மதிப்புள்ள தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் கைப்பற்றியது. அதனை அந்த நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட பெட்டகங்களிலேயே வைத்திருந்தது, சி.பி.ஐ.

படிக்க :
♦ சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !
♦ போலி பாஸ்போர்ட்டுக்கு உதவிய போலீசு !

கடந்த 2012-ம் ஆண்டு இந்த கைப்பற்றுதல் வேலை நடந்தாலும், 2013-ம் ஆண்டு மற்றொரு வழக்கில்தான் அன்னிய வர்த்தகக் கொள்கைக்கு புறம்பாக சுரனா நிறுவனம் தங்கத்தை இறக்குமதி செய்ததாகக் கூறி வழக்கில் இணைத்தது. 2012-ம் ஆண்டு கைப்பற்றப்பட்டவற்றை 2013-ம் ஆண்டு வழக்கோடு இணைத்திருக்கிறது சி.பி.ஐ.

இந்தத் தங்கம் கைப்பற்றப்பட்டதிலேயே உள்நோக்கம் உள்ளதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.  அதன் பின்னர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.  2012-ம் ஆண்டு கைப்பற்றப்பட்டு 2013-ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டு, 2016-ம் ஆண்டு ஆதாரம் இல்லை என்றுகூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட சந்தேகத்திற்கு இந்நிகழ்ச்சிப் போக்கு வலுச் சேர்க்கிறது.

இவ்வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தால் 2016-ம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்திய ஸ்டேட் வங்கி சுரனா நிறுவனம் வாங்கிய கடனுக்கான பணத்தைத் திரும்பப் பெற அந்த நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தைக் கோரியது.

இதனைத் தொடர்ந்து அந்தத் தங்கம் வைக்கப்பட்டிருந்த பெட்டகம் நீதிமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு, நீதிபதி முன்னர் வெளியே எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப்பட்ட தங்கத்தை எடை போட்டுப் பார்க்கையில், அதில் 103 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்துள்ளது.

பெட்டகத்தின் சாவி சென்னையில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக  சி.பி.ஐ கூறினாலும், அதற்கான ஆதாரங்களோ, ஆவணங்களோ எதுவும் அதனிடம் இல்லை.

சிபிஐ-யின் கஸ்டடியில் இருந்த தங்கம், பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படவில்லை. கைப்பற்றப்பட்டு 8 ஆண்டுகளுக்குள் 100 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது. இடமும் பெட்டகமும் சி.பி.ஐ.யின் கஸ்டடியில் இருக்கும் நிலையில், வெளியில் இருந்து கொள்ளை எதுவும் அடிக்கப்பட்டதற்கான தடயம் எதுவும் இல்லாத நிலையில், சி.பி.ஐ-க்குப் பங்கு இல்லாமல், இந்தக் கொள்ளையை  நடத்தியிருக்க முடியாது.

இந்நிலையில், 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்தைச் சேர்ந்த சி.பி.ஐ-ஐக் கொண்டோ அல்லது என்.ஐ.ஏ.-வைக் கொண்டோ விசாரிக்க உத்தரவிடப்பட வேண்டும் என்றும், தமிழக போலீசை வைத்து விசாரணைக்கு உத்தரவிடுவது சி.பி.ஐ-யின் கவுரவத்திற்கு இழுக்கானதாகிவிடும் என்றும் தெரிவித்தது.

படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ வி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா !

ஒன்றல்ல இரண்டல்ல, 103 கிலோ தங்கம் திருடப்பட்டிருக்கிறது. கொஞ்சமும் கூச்சமில்லாமல், சி.பி.ஐ.-யை வைத்தே விசாரித்துக் கொள்கிறோம் என்று கூறியிருப்பதோடு, போலீசை வைத்து விசாரிப்பது கவுரவக் குறைச்சல் என்றும் கூறியிருக்கிறது சி.பி.ஐ. தன்னை தனது கூட்டாளிதான் விசாரிக்க வேண்டும் என திருடனே வேண்டுகோள் விடுப்பது போல,  என்.ஐ.ஏ. அல்லது வேறு மாநில சி.பி.ஐ அலுவலகம் தான் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது சி.பி.ஐ.

இதற்கு சென்னை உயர்நீதிமன்றம், இது ஒரு அக்கினிப் பரீட்சைதான் என்றாலும் சி.பி.ஐ எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் அவர்களது கைகள் பரிசுத்தமாக இருந்தால், சீதையைப் போல அவர்கள் பிரகாசமாக வெளியில் வந்துவிடலாம் என்றும் அப்படி இல்லையெனில், அதற்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் குறிப்பிட்டு மறுத்துள்ளது. தமிழக போலீசை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ. – என்.ஐ.ஏ உள்ளிட்ட நிறுவனங்களின் கேடுகெட்ட தன்மை பல வழக்குகளில் அம்பலமாகியிருந்தாலும், தற்போது சி.பி.ஐ கையும் களவுமாக சிக்கியிருக்கக் கூடிய இந்த தங்கக் “கொள்ளை” வழக்கு இன்னும் பல உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடும் !

கர்ணன்

நன்றி : The Wire