ணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் உருக்குலைந்து போயிருந்த, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்த கொரோனா பொதுமுடக்ககாலத்தில் கிட்டதட்ட அழிவின் விழும்பு நிலைக்கே சென்றுவிட்டனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெரும்பான்மையானோர்க்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடியவை இந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தான்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து அவர்களுக்கான ஊக்கத்தொகையாக ரூ. 3 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் பலன் 32 சதவீதம் பேருக்கு மட்டும்தான் சென்றடைந்திருக்கிறது என்பதுதான் இத்திட்டத்தின் இலட்சணம். இதனை லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தனியார் நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்கள், சாதாரண ஏழை மக்கள் பொதுமுடக்கத்தினால் வேலை இழந்துள்ளனர். வேலை இழப்புக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் எந்த இழப்பீடும் தரவில்லை. அரசின் நிவாரணமும் கிடைக்கவில்லை.

படிக்க :
♦ ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
♦ ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)’ வெளியிட்ட அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலை நேரம் 5.6சதவீதம், இரண்டாவது காலாண்டில் 17.3 சதவீதம்,மூன்றாவதில் 12.1 சதவீதம் குறைந்துள்ளது என கூறுகிறது. மூன்றையும் சேர்த்து சராசரியாக 11.7 சதவீத வேலை நேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் முறையே 3.1சதவீத, 27.3 சதவீத ,18.2 சதவீத வேலைநேரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இழந்துள்ள வேலை நேரத்தை ஊதியமாக கணக்கிட்டால் தொழிலாளர்கள் இழந்துள்ளதன் தீவிரம் புரியும். இந்தியாவில் 16.2 சதவீத வருமானத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.

இப்படி ஒருபுறம் தொழிலாளர்கள் வருமானத்தை இழந்திருக்கும் நிலையில், மறுபுறத்தில் இந்தியாவின் பங்குச்சந்தை சமீப காலமாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சென்செக்ஸ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 50,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தையடைகிறது.

சென்செக்ஸ் புள்ளிகளை பார்க்கும்போது, பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக ஒருவர் நினைக்கலாம். உண்மையில் அவை இப்போதுதான் தொடங்குகின்றனஎன்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

கொரோனாவிலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய முதலாளிகள்

இத்தகைய ஏற்றத்தாழ்வு பொது முடக்கம் தளர்ந்து உற்பத்தி தொடங்கிய இன்றைய நிலைமைகளைவிட, பொதுமுடக்க காலத்தின் போது அதிகமாகக் காணப்பட்டது. உண்மையில் பொதுமுடக்கம் என்பது முதலாளிகளுக்கு பணம் பறிக்கும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதையே அவர்களே வெளியிட்டுருக்கும் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிதியாண்டின் ஏப்ரல் ஜூன் காலாண்டில் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் ரூ.1.33 லட்சம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளன என தெரிவிக்கிறது.

மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 1897 நிறுவனங்களில் கடந்த 2020 ஜூன் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டின் முடிவில் 27 சதவீத வருமான வீழ்ச்சியையும், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த காலாண்டில் 6 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்தது. வருமானம் வீழ்ச்சி அடைந்தாலும் பெரு முதலாளிகளது இலாபம் குறையவில்லை. இது எப்படி சாத்தியம் ?

பொதுமுடக்கக் காலத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களின் செலவினங்களை பெருமளவு வெட்டிச் சுருக்கியதே அந்த லாபத்திற்கான காரணம். குறிப்பாக, பெருவாரியான தொழிலாளர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பியது; பெருமளவு பணிகளை குறைந்த கூலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்றியது; மூலப்பொருட்கள் பயன்பாடு மற்றும் இருப்பு வைத்துக் கொள்வதில் உள்ள செலவினங்களை குறைத்துக் கொண்டது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இவையே தனியார் நிறுவனங்களின் இலாப பெருக்கத்திற்கு காரணிகளாக உள்ளன.

இப்படித்தான் தொழிலாளர்களின் வாழ்நிலை கடும் பாதிப்பில் இருக்கும்போது மிகப்பெரிய முதலாளிகளின் சொத்து அதிகரிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள 1சதவீத பணக்காரர்கள் பொருளாதார நெருக்கடி, பொதுமுடக்கம், உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்றவற்றால் பாதிக்கப்படவேயில்லை.

சுவிஸ் வங்கி அறிக்கையின்படி கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டமான, 2020 ஏப்ரல் ஜுன் இடைப்பட்ட காலத்தில் உலக பணக்காரர்களின் சொத்து 27.5சதவீதம், அதாவது 10.2 டிரில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 2189 ஆக உயர்ந்திருக்கிறது.

படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் ஏப்ரல் ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 423 பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக்கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள்ளது.

பெருமுதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும்தான் வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள். இவர்களுக்கு சலுகைகள் வழங்குவதின் மூலம் ஏழை மக்களுக்கும் அந்த பயன் சென்றடையும் என்கிறார்கள் முதலாளித்துவவாதிகளும் ஆட்சியாளர்களும். இதனை “டிரிக்கிள் டவுன் கோட்பாடு” (Trickle Down Theory) என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, ஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது இன்று இந்தக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வின் மூலம் கண்கூடாகத் தெரிகிறது.

ஆக்ஸ்பாம்’ அறிக்கையின்படி இந்தியாவின் 1சதவீத பணக்காரர்கள் நாட்டின் 43 சதவீத சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். அடி நிலையிலுள்ள 50சதவீத மக்கள் மொத்தமாகச் சேர்த்தே வெறுமனே 2.8சதவீத சொத்துக்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய பாரபட்சமாகும்.

இந்தப் பாரிய ஏற்றத் தாழ்வின் அடித்தளம் இந்த முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக். “அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற நெருக்கடிகள் எதுவானாலும் அவை பணக்காரர்களுக்கு வாய்ப்புகளை தந்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது” எனக் கூறும் பிரபாத் பட்நாயக், “மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது” என்கிறார்.

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி இந்தியாவிலும் ஆத்மநிர்பார் எனும் பெயரில் நாட்டுச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது மோடி அரசு. கொரோனா ஊரடங்கின் மூலம் பல்வேறு கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அதில் ஒன்றுதான் தற்போது விவசாயிகள் எதிர்த்துப் போராடிவரும் வேளாண்சட்ட மசோதாக்கள். கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானியங்கள் சென்றால், இந்தியா பஞ்சம் மற்றும் பசிப் பட்டியலில் முன்னேறி சோமாலியாவை விட மோசமான நிலைமையை சந்திக்கும்.

பிரச்சினைகளின் அடிக்கொல்லியான முதலாளித்துவக் கட்டமைப்பின் இருப்பை கேள்விக்குள்ளாக்குவதுதான் பிரச்சினைகளுக்கு நாம் தீர்க்கமாகக் காணக்கூடிய தீர்வாக இருக்க முடியும்.

மூர்த்தி