தாஷா நர்வால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆராய்ச்சி (Ph.D.) மாணவி. தேவங்கனா கலிதா, அதே பல்கலைக்கழகத்தின் பெண்ணியத் துறை ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) மாணவி. இவர்கள் இருவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் “பிஞ்ஜ்ரா தோட்” (கூண்டை உடை) என்ற பெண்ணிய அமைப்பின் உறுப்பினர்கள்.

இவர்கள் இருவரையும் கடந்த பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக மே 23 அன்று கைது செய்தது, டெல்லி போலிசு. அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தது உள்ளிட்டு ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகளை இவ்விரு மாணவிகள் மீதும் சுமத்தி, கடந்த பிப்ரவரியிலேயே முதல் தகவல் அறிக்கை தயார் செய்திருந்த டெல்லி போலிசு, அதன் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில், இளம் மாணவிகள் என்றும் பாராமல் நடாஷாவையும், கலிதாவையும் கைது செய்திருக்கிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவிகள் தேவங்கனா கலிதா (இடது) மற்றும் நதாஷா நர்வால்.

இவர்களது பிணை மனுக்கள் மீது மறுநாள் (மே 24) நடந்த விசாரணையில், “இருவரும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் தாக்குதல் தொடுத்தார்கள் எனக் குற்றஞ்சுமத்தப்படுவதற்கு முதல் கட்ட ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை” என டெல்லி மாநகர குற்றவியல் நடுவர் கருத்துத் தெரிவித்தார். இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மற்றைய குற்றச்சாட்டுகள் பிணையில் வெளிவரக்கூடிய சாதாரண குற்றச்சாட்டுகள் என்ற நிலையில், பிணையில் வெளிவரமுடியாத இந்தக் குற்றச்சாட்டும் கலகலத்துப் போனது.

அவ்விரு மாணவிகளும் பிணையில் வெளியே வந்துவிடக் கூடும் என்பதை விசாரணையின் போக்கில் அனுமானித்த டெல்லி போலிசின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, அதனைத் தடுக்கும் திட்டத்தோடு விசாரணை முடிவடைவதற்கு முன்னரே இரண்டாவது முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதில், அவர்கள் இருவர் மீதும் முந்தையதைவிடக் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கொலை, கொலை முயற்சி, சதி தொடங்கிச் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தனர் என்பது வரையிலும் சுமத்தப்பட்டன.

இந்த இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அவர்கள் இருவரையும் 14 நாட்கள் போலிசு காவலில் எடுத்துக் கொள்ள அனுமதி கோரியது சிறப்புப் புலனாய்வுக் குழு. நீதிமன்றம் இரண்டு நாட்கள் மட்டுமே போலிசு காவலுக்கு அனுமதித்த நிலையில், போலிசு விசாரணை முடிந்தபின், அவர்கள் இருவரும் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டவுடனேயே நடாஷா மீது உபா சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கும், கலிதா மீது மூன்றாவது முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டன.

ஜே.என்.யூ. மாணவிகள் நடாஷா, கலிதா ஆகிய இருவர் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பாய்ச்சப்படுவதிலிருந்து, அம்மாணவிகளைப் பழி தீர்த்துக்கொள்ளுவதுதான் டெல்லி போலிசைக் கையில் வைத்திருக்கும் மோடி அரசின் நோக்கம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

நடாஷா, கலிதா என்ற இந்த இரு மாணவிகள் மீது மோடி அரசிற்கு ஏன் இத்துணை வன்மம் என்றால், அவர்கள் இருவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், தேசியக் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையையும் எதிர்த்தார்கள், அவ்விரண்டையும் எதிர்த்து டெல்லி நகர முசுலிம்கள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டதோடு, அவர்கள் சார்ந்த அமைப்பான பிஞ்ஜரா தோட் அதற்கு ஆதரவு அளித்தது என்பது தவிர வேறு காரணங்கள் இல்லை.

இவர்கள் இருவரை மட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கும் ஒவ்வொருவரையும் நிரந்தரமாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு மோடி அரசின் உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவது, டெல்லி கலவரம் தொடர்பாகப் பதியப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் அம்பலமாகி வருகிறது.

டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவி ஸஃபூரா ஜார்கார் (இடது); அப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் மீரான் ஹைதர்.

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவியான ஸஃபூரா ஜார்கர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் மோடி அரசின் மதவெறி பாசிச வன்மத்திற்கு மற்றொரு உதாரணம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் நடந்த போராட்டத்தையொட்டி கைது செய்யப்பட்ட ஸஃபூராவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியவுடனேயே, அவர் டெல்லி கலவரத்தின் சதிகாரர்களுள் ஒருவராகக் குற்றம் சுமத்தப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சதி வழக்கு தொடர்பான விசாரணையின்போது, டெல்லி கலவரத்தில் ஸஃபூரா ஆற்றிய பாத்திரம் குறித்த போலிசின் குற்றச்சாட்டில் தெளிவில்லை என நீதிபதி தெரிவித்தவுடன், ஸஃபூரா மீது உபா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன.

ஸஃபூரா கர்ப்பிணி என்ற நிலையிலும்கூட, அவர் பிணையில் வெளியே வருவதை மோடி அரசு விரும்பவில்லை. அவர் மீதான இத்துணை வன்மத்திற்குக் காரணம், ஸஃபூரா குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தார் என்பது மட்டுமின்றி, அவர் ஒரு முசுலிம், முக்கியமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலிம் என்பது மற்றொரு முக்கியமான காரணமாகும்.

டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி மாநகர மன்ற உறுப்பினருமான இஷ்ரத் ஜஹானுக்கு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் பிணை வழங்கிய கூடுதல் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, தனது தீர்ப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவந்த அவர் மீது டெல்லி போலிசு பொய்யாக வழக்கு போட்டிருப்பதாகக் குறிப்பிட்டதோடு, “அரசின் நியாயமற்ற நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு அவருக்கு அடிப்படை உரிமை இருக்கிறது” என்றும் சுட்டிக் காட்டினார்.

காங்கிரசு கட்சியின் முன்னாள் மாநகர மன்ற உறுப்பினர் இஷ்ரத் ஜஹான். (கோப்புப் படம்)

இவ்வாறான நீதிமன்ற உத்தரவுக்குப் பின், இஷ்ரத் ஜஹான் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டெல்லி போலிசோ அவருக்குப் பிணை வழங்கப்பட்ட மறுநிமிடமே அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

டெல்லி கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த பர்வேஸ் ஆலம், முகம்மது இல்யாஸ், முகம்மது தானிஷ் மீதான வழக்கிலும் இதே வன்மம்தான். டெல்லி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரபா தீப் கவுர் இம்மூவருக்கும் பிணை வழங்கியவுடனேயே, அவர்கள் பிணையில் வெளியே வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, டெல்லி கலவரத்திற்கு நிதி ஏற்பாடு செய்து கொடுத்தது மற்றும் அக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை புனையப்பட்ட வழக்குகளை எடுத்துக் கொண்டால், டெல்லி போலிசும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவும் வெறும் கைத்தடிகள்தான். விசாரணையை எந்தத் திசையில் எடுத்துச் செல்ல வேண்டும், யார் யாரையெல்லாம் கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் மீது என்னென்ன வழக்குகளை அடுத்தடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வது சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த நீதிக்கான அறைகூவல் மற்றும் அறிவுத்துறையினர் குழு என்ற இரண்டு அமைப்புகள்தான். இவ்விரண்டு அமைப்புகளும் இணைந்து டெல்லி கலவரம் தொடர்பாக மைய அரசின் உள்துறைக்குக் கொடுத்திருக்கும் அறிக்கையின்படிதான் போலிசு விசாரணை நடந்துவருவதையும் வழக்குகள் பதியப்படுவதையும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

படிக்க:
அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !

ஜாமியா பல்கலைக்கழக மாணவன் ஆசிஃப் இக்பால் தன்ஹா வழக்குத் தொடர்பான விசாரணையில் கூடுதல் குற்றவியல் நீதிபதி தர்மேந்தர் ரானா, போலிசின் வழக்கு குறித்த குறிப்பு நோட்டை ஆராயும்போது, போலிசு விசாரணை ஒரு குறிப்பிட்ட “இலக்கை நோக்கியே நகரும் உண்மை தெரிவதாக”க் குறிப்பிடுகிறார்.

டெல்லி கலவரத்தின்போது கடைகளை எரித்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டவரின் பிணை குறித்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி, பிணையை மறுப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியை விடுக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. ஆனால், நீதிமன்றம் அப்படிச் செயல்பட முடியாது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடாஷா, கலிதா, ஸஃபூரா ஜார்கர், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் மீதான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களும், டெல்லி உயர்நீதி மன்றமும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மோடி அரசு சிறுபான்மை முசுலீம்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களை ஒரேயடியாக ஒடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்துகின்றன.

இதன் காரணமாகத்தான் டெல்லி கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலோர் மீது பாசிச கருப்புச் சட்டமான உபா ஏவிவிடப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு எவ்விதமான காத்திரமான ஆதாரமும் அரசுக்குத் தேவையாக இருக்கவில்லை என்பதை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில் கோகோய், பிட்டு சோனாவால் ஆகிய இருவர் மீது போடப்பட்டிருக்கும் உபா வழக்கு எடுத்துக்காட்டுகிறது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் அகில் கோகாய் (இடது) மற்றும் பிட்டு சோனாவால்.

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் சத்ரா முக்தி சங்க்ராம் சமிதி என்ற மாணவர் அமைப்பின் தலைவரான பிட்டு சோனாவால், கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதி என்ற விவசாய அமைப்பின் ஆலோசகரான அகில் கோகாய் ஆகிய இருவர் மீதும் உபா சட்டத்தைப் பாய்ச்சுவதற்கு அவர்களை மாவோயிசத் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களாகக் காட்டியிருக்கிறது, அசாம் மாநில பா.ஜ.க. அரசு.

இதற்கு ஆதாரமாக, இவர்கள் தமது முகநூல் பக்கங்களில் லெனினின் படத்தை வைத்திருந்தார்கள், அவர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம் இருந்தது, அவர்கள் தங்கள் நண்பர்களைத் தோழர் என அழைத்து வருகிறார்கள், முதலாளித்துவத்தை அழிக்க வேண்டும் என்ற லெனினின் மேற்கோளை தமது முகநூலில் வைத்துள்ளனர் எனத் தமது குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, அசாம் மாநில போலிசு.

கரோனா தொற்று பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, இரண்டு முனைகளில் தாக்குதல் தொடுத்து வருகிறது மோடி அரசு. ஒன்று, தனது பார்ப்பன திட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். மற்றொன்று, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் பறிப்பு, மின்சாரம், சுற்றுப்புறச் சூழல், அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடுவதற்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள். இவையிரண்டையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தத் தாக்குதல்களைத்தான் கார்ப்பரேட் காவி பாசிசம் என நாம் குறிப்பிடுகிறோம்.

கரோனா தொற்றைவிட, இந்த கார்ப்பரேட் காவி பாசிசம்தான் நாட்டைக் கவ்வியிருக்கும் மிகப் பெரும் அபாயமாகும். இந்த அபாயத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி எதிர்த்து நின்றதற்காகவே வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட அறிவுத் துறையினரும்; நடாஷா, ஸஃபூரா, கலிதா உள்ளிட்ட முற்போக்கு மாணவர்கள்; பிட்டு சோனாவால், அகில் கோகோய் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

– செல்வம்
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

1 மறுமொழி

  1. காவி பாசிசத்தின் கைப்பிள்ளையாக கெஜ்ரிவால் நிர்வாகம் : ஒரு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தால் அதற்குரிய குற்றப் பத்திரிகை /மகஜரை தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால் புதிதாக மேலும் இரண்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதின் மூலம், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ஜாமின் வழங்கும் உரிமைகளை மறுப்பது,நிஜ குற்றவாளிகளான இந்துத்துவா பயங்கரவாதிகளை தப்பிக்க வைக்க (cctv footage-back verification records) தடை ய சாட்சியங்களை அழிப்பது போன்ற எல்லா கிரிமினல் நடவடிக்கைகளையும் கையாளும் அரசியலை கொண்டு மனித உரிமைகளை கேள்விக்குறியாக்குவது.ஏட்டளவில்லுள்ள ஜனநாயக அவலம் தொடர்கிறது… வரும் சந்ததி மாணவர்கள் இளைஞர்கள் கூடிய தொழிலாளர் விவசாயிகளின் துணை கொண்டு புரட்சியை சாதிக்க ஆயத்தமாகி சமூக அனீதிகளை எதிர்க்கும் புறச்சூழல் நிர்ப்பந்தம் செய்கிறது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க