விவசாயிகள் படும் பாடையும் அவர்களின் துயரத்தையும் பற்றிப் பேசுகையில், “இவனோடும் சண்டை, நமக்கு இயற்கையோடும் சண்டை” என்ற துன்பியல் வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்கவே முடியாத ஒன்று. மோடி அரசின் மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளின் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளை இயற்கையும் தன் பங்குக்குத் துயரத்தில் மூழ்கடித்துவிட்டது.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டுதான் மேட்டூர் அணை பருவத்தே திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி பரப்பு அதிகமானதோடு, விளைச்சலும் ஹெக்டேருக்கு 6 டன் என்பதைத் தாண்டி, 6.2 டன்னாக அதிகரித்திருந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் மட்டும் சம்பா சாகுபடி பரப்பு 10 இலட்சம் ஏக்கரைத் தாண்டியதோடு, விளைச்சலும் நட்டமின்றி இருக்கும் என விவசாயிகளால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விவசாயிகளின் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக முடிந்துபோனது.

படிக்க :
♦ கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !

♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

குறுவை விளைச்சல் எதிர்பார்த்ததையும்விட அதிகமாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் வியாபாரிகள் விளைந்த நெல் மூட்டைகளைக் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கீழாகக் குறைத்துக் கேட்டதால், விவசாயிகளுக்கு அரசிடம் விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. தமிழக அரசோ வரத்துக்கு ஏற்றபடி உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரம் பத்து நாள் எனக் காத்திருந்து நெல் மூட்டைகளை விற்க நேர்ந்தது.

நெல் மூட்டைகளைப் பல நாட்கள் திறந்த வெளியில் போட்டு வைத்திருந்ததால், அவை திடீர் மழையில் நனைந்து, நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. அதிகரித்த ஈரப்பதத்தைக் காட்டி நெல்லைக் கொள்முதல் செய்ய அதிகார வர்க்கம் மறுத்தது. இப்படித் தமிழக அரசு குறுவை நெல் கொள்முதலில் திட்டமிட்டுச் செய்த பல்வேறு “குளறுபடிகள்”, புறக்கணிப்பு, தாமதங்களின் மூலம் விவசாயிகளை நட்டமடையச் செய்தது என்றால், பருவம் தவறிப் பெய்த ஜனவரி மாத கனமழை சம்பா விளைச்சலை அடியோடு நாசப்படுத்திவிட்டது,. நிவர், புரெவி புயல்களில் தப்பிப் பிழைத்த பயிர்களைக்கூட ஜனவரி மாத கனமழை விட்டுவைக்கவில்லை.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்டு 14 மாவட்டங்களில் 8 இலட்சம் ஏக்கரில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்லும், பிற விளைபொருட்களும் முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பின் வீச்சு

காவிரி டெல்டாவைச் சேர்ந்த தஞ்சை மாவட்டத்தில் 25,000 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 1,25,000 ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 1,50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்வயல்கள் நீரில் மூழ்கி, விளைச்சல் வீணாகிப் போயிருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கும் மேலான நெல்வயல்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும்; நெல்லுக்கு அப்பால் வாழை, கரும்பு, பருத்தி, மக்காச் சோளம் ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரிலும் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலுமாக 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தேசமடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3.34 லட்சம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டதில், தோரயமாக 1 லட்சம் ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருக்கக்கூடும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாத மழையால் சுமார் 75,000 ஏக்கரில் விளைந்து நின்ற நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும்; நெல் தவிர, சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, எள், மக்காச்சோளம் ஆகிய தானியங்களும் அழுகிவிட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களையொட்டி அமைந்திருக்கும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் குண்டு மிளகாய் எனச் சந்தையில் அழைக்கப்படும் இராமநாதபுரம் முண்டு மிளகாய் பயிரிடப்படிருந்தது. மிளகாய்ச் செடிகள் காய்க்கத் தொடங்கிய பருவத்தில் டிசம்பர் இறுதியிலும், ஜனவரி தொடக்கத்திலும் பெய்த மழையால் ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து நின்ற மிளகாய்ச் செடிகள் அழுகிப் போயிருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்தும்; 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளமும்; 20 ஆயிரம் ஹெக்டேரில் பாசிப் பயறும்; மீதமுள்ள நிலங்களில் கம்பு, வெள்ளைச்சோளம், சின்ன வெங்காயம், மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, எள், குதிரைவாலி, சிவப்புச் சோளம், சீனி அவரை, கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு மானவாரிப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இவையனைத்தும் ஜனவரி மாத மழையில் நாசமாகிவிட்டன.

இந்தப் பயிர்களில் சின்ன வெங்காயம், உளுந்து, பாசி ஆகியவை மார்கழி மாதம் 10-ம் தேதியையொட்டி அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஆனால், விடாது பெய்த மழை காரணமாக உளுந்து, பாசி பயிர்களில் முதிர்ந்த காய்களின் நெத்துகள் வழியே ஈரப்பதம் ஏற்பட்டதால் முளைத்துவிட்டன. பொன் நிறத்தில் காணப்பட வேண்டிய வெள்ளைச்சோளம் கருமை நிறத்துக்கு மாறிவிட்டது. சின்ன வெங்காயம், ஈரப்பதம் காரணமாக நிலத்திலேயே அழுகி துர்நாற்றம் வீசியது. கொத்தமல்லிச் செடிகள் அதிக ஈரப்பதத்தால் குறைந்த இலைகளுடன் அழுகிப் போயின. மிளகாய் செடிகள் முளைக்காமல் போனதாகத் தெரிவிக்கிறார்கள் அம்மாவட்ட விவசாயிகள்.

தென்காசி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை விவசாயப் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் பாசிப்பயறுச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையால் நனைந்து முளைத்துவிட்டதாகக் குமுறுகிறார்கள் விவசாயிகள்.

ஒரு ஏக்கரில் நெல் பயிரிடுவதற்குத் தோரயமாக 35,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறும் விவசாயிகள், இந்தத் தொகைக்குத்தான் பயிர்க் காப்பீடும் செய்திருக்கிறார்கள். மானாவாரிப் பயிர்களை எடுத்துக் கொண்டால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யாமல் வெள்ளாமை பார்க்க முடியாது. ஒரு ஏக்கரில் 4 முதல் 5 டன் வரை உளுந்து விளைந்தால், தமக்கு 28,000 முதல் 35,000 ரூபாய் வருமானம் கிட்டும் என்றும், முதலீடுபோக குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இலாபம் கிட்டியிருக்கும் எனக் கூறுகிறார்கள், தென் மாவட்ட விவசாயிகள்.

படிக்க :
♦ கஜா புயல் தாக்குதலிலிருந்து மீளாமல் தவிக்கும் டெல்டா மக்கள் !

♦ கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்

விவசாயிகள் கூறும் இந்தக் கணக்குப்படிப் பார்த்தால், ஜனவரி மாத கனமழையால் நெல் விவசாயிகளும், தோட்டப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயம் அடைந்திருக்கக்கூடிய நட்டம் இரண்டாயிரம் கோடி ரூபாயைத் தொடக்கூடும். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட அழிவையும் இதோடு சேர்த்தால், இந்த நட்டக் கணக்கு மூவாயிரம் கோடியையும் தாண்டக்கூடும்.

கந்துவட்டிக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் குறு, சிறு, நடுத்தர விவசாயிகளால் இந்த நட்டத்தை எப்படித் தாங்க முடியும்? விதை நெல்லுக்குக்கூடப் பயன்படாது என்றபடி சம்பா சாகுபடி அழிந்து நிற்கும் நிலையில், எதிர்வரும் நாட்களில் சோத்துக்கு என்ன வழி? தண்ணீரில் அழுகிப் போன பயிர்கள் வைக்கோலுக்குக்கூடப் பயன்படாது என்பதால், மாட்டுத் தீவனத்திற்கு என்ன செய்வது? அடுத்த பட்டத்திற்கு யாரிடம் கடன் கேட்பது எனக் கலங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். நிலவுடமையாளர்களின் நிலையே இதுதான் என்றால், கூலி விவசாயத் தொழிலாளர்களின் உடனடி எதிர்காலத்தை நினைத்துப் பார்ப்பதே அச்சமூட்டக்கூடியதாக உள்ளது.

எடப்பாடி அரசின் மெத்தனம், அலட்சியம்

14 மாவட்ட விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்ட இத்துயரத்தைப் பேரிடராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மைய அரசோ இதுவரை மதிப்பீட்டுக் குழுவைக்கூட அனுப்பி வைக்கவில்லை. மதிப்பீட்டுக் குழு வந்தாலும், அதனின் கணக்கீடும் பரிந்துரையும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகத்தான் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. பாதிப்பு குறித்த கணக்கீடைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக அரசோ, இதுவரை இடைக்கால நிவாரணம் எதனையும் அறிவிக்கவில்லை.

நிவர், புரெவி புயல்களாலும் மற்றும் ஜனவரி மாத மழையாலும் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 ரூபாய் நிவராணமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி வருகிறார்கள்.

“எதிர்பார்த்திருந்தபடி நெல் அறுவடையாகியிருந்தால், நெல்லை விற்கும் காசோடு, வைக்கோலை விற்பதன் மூலமும் ஒரு தொகை கிடைக்கும். இப்பப் பயிரெல்லாம் அழுகிட்டதால வைக்கோலும் போச்சு. அதனால், எங்களடோ உழைப்பு, இலாபம் அனைத்தையும் கணக்கில் எடுத்து முழுமையான நிவாரணம் வழங்கணும்” என்கிறார், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரசேனன். எனவே, விவசாயிகள் கோரும் நிவாரணம் முப்பதாயிரம் என்பது மூலதனச் செலவுக்குக் குறைவானது மட்டுமல்ல, அவர்களின் உழைப்பின் உற்பத்தி மதிப்புக்கும் குறைவானதுதான்.

ஆனால், அ.தி,மு.க. அரசோ, விவசாயிகளின் கோரிக்கையை அடியோடு புறக்கணித்துவிட்டு, நிவர், புரெவிப் பயுல்களால் பாதிப்படைந்த ஐந்து இலட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளீட்டுப் பொருட்களுக்கான மானியத்தை அளித்துவிட்டு, “இம்மானியத்தால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000; நெல் அல்லாத நன்செய் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10,000; மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.25,000 வரை நிவாரணமாகக்  கிடைக்கும் என்றும் இம்மானியம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதிகமென்றும்” தம்பட்டம் அடித்துவருகிறது.

இந்த உள்ளீட்டு மானியம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டும் மதிப்பீட்டைவிட அதிகம் என்பதை மறுப்பதற்கில்லைதான். அதேசமயத்தில், இந்த மானியம் தமிழக விவசாயிகள் கோரிவரும் நட்ட ஈட்டிற்கு அருகில்கூட வரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. தமிழக அரசு அறிவித்திருக்கும் உள்ளீட்டு மானியத்தின்படி நெல்விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்குக் கிடைக்கும் நிவாரணம் வெறும் ரூ.8,000/-தான். மீதமுள்ள 22,000 ரூபாய் நட்டத்தை விவசாயிகள்தான் சுமக்க வேண்டும் எனக் கைக்கழுவி விட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இந்தப் பஞ்சு மிட்டாய் மானியமும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தரப்பட்டிருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது. “இந்த இரண்டு புயல்களால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 6,000 விவசாயிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கணக்கு எடுக்கப்பட்டிருப்பதாக” கூறுகிறார், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலர் விமல்நாதன் (ஜூ.வி, 20.01.2021).

இன்னொருபுறத்திலோ, தமிழக அரசு, மைய அரசிடம் நிவர் புயல் நிவாரணமாகக் கோரியிருந்த 3,758 கோடி ரூபாயில் இதுவரை ஒரு சல்லிக்காசுக்கூடத் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க. அடிமை அரசும் அதை வலியுறுத்திப் போராடியதாகத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எத்தனை சீட் ஒதுக்குவது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அதிகாரச் சண்டை, சசிகலா விடுதலை, அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைப்பு என்ற பஞ்சாயத்துக்கள்தான் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்து வருகிறதேயொழிய, இரண்டு ஆளுங்கட்சிகளும் தமிழக விவசாயிகளின் வேதனையைத் துடைப்பதை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை.

மோடி மற்றும் எடப்பாடி கும்பலின் இந்த அலட்சியமும் புறக்கணிப்பும் தனது முதல் பலியை டெல்டாவில் வாங்கிவிட்டது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்ற விவசாயி, மழையால் தனது பயிர்கள் நாசமானதால் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போகுமே என்ற மன உளைச்சலின் காரணமாக ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தமிழக விவசாயிகள் அடைந்திருக்கும் வேதனை எத்துனை பாரதூரமானது என்பதைத்தான் ரமேஷ் பாபு-வின் தற்கொலை எடுத்துக் காட்டுகிறது. இந்த அகாலச் சாவுகள் ரமேஷ் பாபுவுடன் நின்றுவிடுமா அல்லது தொடர்கதையாக நீளுமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

தமிழக விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின், புயல் மற்றும் மழை நிவாரணத் தொகையை விவசாயிகள் கோருகிறபடி ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாயாக அதிகரித்துக் கொடுத்தால் மட்டும்போதாது. அவர்கள் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனங்களிடமும், கந்து வட்டிக் கும்பலிடமும் வாங்கிய கடன்களை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

படிக்க :
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

♦ நெல்லுக்குப் பதிலாக சோளத்தை விதைக்கச் சொல்லும் அரியானா அரசு !

புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகள் எங்கும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தீவிரமாகவும் விரிவாகவும் நடைமுறைப்படுத்துவதோடு, அதற்கான கூலியையும் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு, குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்காவது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் ரேஷனில் இலவசமாக வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். எதிர்வரும் குறுவை, சம்பா சாகுபாடிக்குத் தேவையான விவசாய வங்கிக் கடன்கள், விவசாய இடுபொருட்களுக்கான மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதன் வழியாகவே, மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் போராட்டத்திற்குத் தமிழக விவசாயிகளின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.


அறிவு