இந்திய துணைக் கண்டத்தில் அழிக்க முடியாத வரலாற்று தடங்களை பதித்த மாபெரும் போராட்ட எழுச்சி பற்றிய  வரலாறு.  உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் உண்மை கதைகள், அந்தப் போராட்டக்களத்தில் களமாடிய மாவீரர்களின் அனுபவங்கள், சுய தேடல்கள், அழுத்தமான மனப்பதிவுகள் ஒரு விரிவான நேர்காணல் ஆக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வார குத்தகை விவசாயிகளும் கிராமப்புற ஏழை மக்களும் நடத்திய  மாபெரும் போராட்டம். போர்க்குணமிக்க போராட்டத்தில் உருக்கி வார்க்கப்பட்ட புதிய வார்ப்புகள், நெஞ்சுரம் மிக்க போராளிகளாக, தன்னல உணர்ச்சியை போரிட்டு வென்ற மாவீரர்களாக திகழ்ந்த பொதுவுடமையாளர்கள், இந்தப் போராட்டத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.

பழமை (பழைய வரலாறு) மறக்கப்படும் ஒரு அபாயகரமான சூழலில், மிக மிக தேவைப்படும் ஒரு குரலாக இந்த நூல் வெளிவருகிறது. பிற்போக்கு சக்திகள் அணி திரண்டு வரும் சூழலுக்கு மத்தியில், இது  இன்னும் ஆழமான பொருத்தத்தை பெறுகிறது.(இந்த நூலுக்கான அறிமுக உரையில் தோழர் சுமித் சர்க்கார் )

நில உரிமையாளருக்கு உண்மையான சாகுபடி செய்பவருக்கும் இடையில் உள்ள ஓர் உறவு முறை, வார குத்தகை முறை என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது. அன்றைய நாட்களில் வார குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகள் உதவியோடு நிலம் பயிரிட்டு வந்த வழக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. நிலத்தின் விளைச்சலை பொறுத்து நான்கில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு அல்லது பன்னிரண்டில் ஒருபங்கு நில வாடகை செலுத்தப்பட்டு வந்தது.

விளைச்சலில் பாதியை சாகுபடியாளர்கள் தருவது போன்ற ஒப்பந்த விதிமுறைகளின்படி கூலி தொழிலாளர்களை வைத்து சாகுபடி செய்யப்பட்ட இடங்களில், விதைகளை சாகுபடி செய்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இரும்பு முனை கொண்ட கலப்பை, மரக் கலப்பை, நுகத்தடி, கிணற்றில் இருந்து பாசனத்துக்கு நீர் இறைக்க தோல்பை, கயிறு ஆகிய பொருட்களை நிலவுடைமையாளர்கள் தந்துவிட வேண்டும். இந்த முறை பல நூற்றாண்டுகள் வரை நீடித்து வந்தது.

பாரம்பரியமாக இருந்து வந்த வார குத்தகை முறையானது 1793-ல் காரன்வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியிருப்பு சட்ட வடிவத்தில் ஒரு மாற்றத்திற்கு உள்ளானது. சாகுபடி வேலைகள் அதற்கான செலவு என முழுமையும் படிப்படியாக குத்தகைதாரர் மீது விழுந்தது. நிலத்தின் உரிமையாளர்களே பயிர்களுக்கும் உரிமையாளர் ஆனார். இதுதான் குத்தகைதாரர்கள் இடம் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி ஆகும். சிறிது சிறிதாக சேர்ந்த நூற்றாண்டுகால அதிருப்தி தீப்பொறியாக வெடித்து, வங்காள விவசாயிகளின் மகத்தான  எழுச்சியாக வெடித்தது.

தெபாகா உழவர் பேரெழுச்சி நடைபெற்று பல்லாண்டுகள் உருண்டோடி விட்டபோதும், “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற அடிப்படைக் கோரிக்கை இதுவரை முழுமையாக அடையப்படவில்லை. வார குத்தகை விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு இன்னும்கூட உரிமையாளர்களாக ஆக முடியவில்லை. இப்போதும்கூட விளைச்சலில் 25 விழுக்காடு விவசாயத்தில் ஈடுபடாத நில உரிமையாளர்களுக்கு போய் சேருகிறது. “நிலமற்ற விவசாயிகளின் நெஞ்சில் நிலத்திற்கான தாகம் இன்னமும் அப்படியே இருக்கிறது” என்று அந்த மாபெரும் விவசாயிகள் எழுச்சியின் தளகர்த்தர் தோழர் அபானி லகரி கூறுகிறார்.

எரிமலையாய் வெடித்து சிதறிய வங்கத்தின் உழவர் பேரெழுச்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தது.

1. விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு உரிமை வேண்டும்.
2. தானிய கடனுக்கு வட்டி இல்லை.
3. அறுவடை முழுவதும் விவசாயிகளுக்கு சொந்தம்.
4. நிலத்தில்  இருந்து வெளியேற மாட்டோம்.
5.உழுபவனுக்கே நிலம் சொந்தம்.

போராட்டத்தின் விளைவாக, விவசாயிகள் விளைச்சலை தங்கள் சொந்த களஞ்சியங்கள் எடுத்துச் சென்றார்கள். சட்டவிரோத பறிமுதல் முடிவுக்கு வந்தது. தானிய கடனுக்கு வசூலித்து வந்த வட்டி கொடுமை முடிவுக்கு வந்தது. நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் தங்கள் கிராம வீடுகளை காலி செய்து விட்டு நகரங்களுக்கு ஓடிவிட்டனர்.

வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.

இந்த நூற்றாண்டில் வங்கத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சி, அரச பயங்கரவாதத்தால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆற்று வெள்ளம் போல் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ பிரதிநிதியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக்கும் இரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கு பல்லக்குத் தூக்கினர்.

எளிய மக்களின் உரிமை வாழ்வுக்காக தங்களது இளமை காலத்தை அர்ப்பணித்த தியாக சீலர்கள் மக்களை அணிதிரட்ட எத்தகைய இன்னல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றும்போது கடுமையான சோதனைகளை எதிர் கொண்டார்கள் .

போராட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் சுசில்சென்  பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “சில நேரங்களில் ஏராளமான பன்றிகள் மத்தியில் நாங்கள் இரவை கழிக்க நேர்ந்தது உண்டு. சில நேரங்களில் மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் மெத்தைகளில் ஆடு மாடுகள் ஆகியவற்றின் அருகில் துங்க நேர்ந்தது. விவசாயிகள் உண்டுவந்த உணவே நாங்களும் பங்கிட்டுக் கொண்டோம். அப்போது விவசாயிகள் உண்டுவந்த உணவு என்பது சணல் இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி மட்டுமே. அவர்களுக்கு சாப்பிட கிடைக்காத நாட்களில் நாங்களும் பட்டினி இருந்தோம். அடக்குமுறை, அநீதி ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகவும் அவர்களை அணிதிரட்டி வந்தோம். இதற்குக் காரணம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்ற உண்மையை ஒவ்வொரு நொடியும் நாங்கள் உணர்ந்து இருந்தோம்”

விடுதலைப் போராட்ட சூறைக்காற்று சுழன்றடித்த அந்த காலகட்டத்தில் அனைத்து வங்காள மாணவர் சங்கமானது (All Bengal Students Association) அனுசீலன் சமதியின் மாணவரணியாகவும் ஆதரவு அமைப்பாகவும் இருந்தது. தீவிரமான கனவுகளால் தூண்டப்பட்ட ஒரு இளைஞன், தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது எப்படி என்ற உணர்ச்சி மிகுந்த வரலாறு, இந்த நேர்காணலின் வழியிலேயே நம்மால் உணர முடிகிறது.

“ஒருநாள் விடுதியிலிருந்து கிராமத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்திருந்தேன். நான் ஒரு திட்டம் வைத்திருந்தேன், சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். கடைசியாக அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் மதியம் என் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். எங்கள் குடும்ப நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? அலமாரியின் சாவி எங்கே இருக்கும், அந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு பூணூல் சடங்கு நடந்தபோது அணிவிக்கப்பட்ட மோதிரத்தை தங்க நாணயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வது என்றுதான் முதலில் முடிவு செய்து இருந்தேன். அதை எடுக்கத் தொடங்கியபோது ஏன் என்னுடையது மட்டும் எடுக்க வேண்டும். என் அம்மா மற்றும் சகோதரிகளின்  நகைகளையும் ஏன் எடுக்க கூடாது? தாய் நாட்டின் விடுதலை என்ற புனித லட்சியத்திற்கு தானே இதை செய்கிறோம், ஆகவே எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன்.

என் அப்பாவின் தலையணையின் கீழ் ஒரு கடிதத்தை மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தேன். நாட்டு விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்காக இவை அனைத்தையும் செலவு செய்யப்படும் என்று”

அனுசீலன் சமதியின் ஆயுதக் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்காக, தேசவிடுதலைப் புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வாங்குவதற்கு தேவையான நிதி இல்லாத சூழ்நிலையில், இளம் மாணவரான அபானி லகரி அவர்கள் இதை செய்தார். தன் சகோதரிகளின் திருமணத்திற்காக, எளிய நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட அவருடைய தந்தை சிறுக சிறுக சேமித்த நகைகளை தேச விடுதலைப் போராட்டத்திற்காக எடுத்துச் செல்கிறார்.

தாய் நாட்டின் விடுதலைக்காக, சர்வ பரி தியாகம் செய்யத் தயாராக இருந்த அந்த இளம் புரட்சியாளரின் செயல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் குடும்ப உறவுகளை விட தேச விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்ட மாவீரர்களின் தியாக உணர்வை எண்ணிப்பார்க்கையில், அத்தகைய வாழ்க்கையை  ஒப்பிடும்போது, குற்ற உணர்வு நம்மை வாட்டுகிறது.

வங்காள விவசாயிகளின் போராட்ட எழுச்சியை நேரில் பார்த்த கவிஞரும், எழுத்தாளருமான குலாம் குத்தூஸ் அவர்கள் “தலைமையிடம் இருந்து ஊக்கமும் அனுமதியும் கிடைத்திருந்தால் விவசாய போராளிகளால் நிச்சயம் ஒரு சில ஏனான்-களை (சீனாவின் ஏனான் பிரதேச விவசாயிகள் எழுச்சி) உருவாக்கி இருக்க முடியும்” என்று கூறுகிறார் .

“மாக்சிய சமூக அறிவியல் வழிப்பட்ட பாதையில் நடைபோடுவது ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உள்ள ஒரே வழி என்று நான் நம்புகிறேன். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சறுக்கல் பாதையை நம் வளர்ச்சியை தடுத்துவிட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். சொத்து சேர்ப்பதற்கும், அதிகாரத்திற்குமான ஆசைதான் கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி உள்ளதா, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை நிர்மாணிக்க வேண்டும் என்ற கருத்தியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள், சுயநலமிகள் மத்தியில் காணாமல் போய் விட்டார்களா?

வெளிப்படையான எளிய வாழ்க்கை முறையும், தங்கள் தத்துவத்தின் மீது கொண்டிருந்த ஆழமான பற்றுறுதி, ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளை நோக்கி மக்களை ஈர்த்து வந்தது. வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல பேருக்கு இந்த கேள்வி முக்கியமான ஒன்றாகும். என் மூச்சு இருக்கும் வரையிலும் ஒரு புதிய பாதைக்கான தேடலில் நாங்களும் சக பயணிகளாக தொடர்ந்து வருவோம் என என் சார்பிலும் நீண்ட நெடுங்காலமாக என்னுடன் இருக்கும் என் தோழர்கள் சார்பிலும் நான் உறுதி கூறுகிறேன்” என்று தனது நேர்காணலில் முத்தாய்ப்பாக தோழர் அபனி லஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்.

அடிபணியாத தீரத்தோடும் சுய நம்பிக்கையோடும் ஒரு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு தலைமையை வரலாறு நிச்சயம் உருவாக்கும். வரலாறு என்பது உருவாக்கப்படுவது; ஆனால் அது சுயமாக உருவாகாது; அதற்கு மனித தலையீடு மிக அவசியமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்ற மாபெரும்  விவசாயிகளுடைய போராட்டம் கடந்த 58 நாட்களாக டெல்லி தலைநகரில் நடைபெற்று வருகிறது. கடும் குளிரும் உறையவைக்கும் பனிப்பொழிவும் அவர்களது போராட்ட உணர்வை அசைத்துப் பார்க்க முடியவில்லை. போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் மோடி வித்தைகள் செல்லுபடியாகவில்லை.

சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் இந்த பேரெழுச்சி இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்க திறவுகோலாக இருக்கும். மாபெரும் வங்காள உழவர் போராட்ட வரலாற்றுப் படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது இன்றைய வரலாற்றின் தேவை ஆகும்.

சமதர்ம லட்சியத்திற்காக போராடும் அனைவரும் இந்தப் போர்க்குணமிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வர்க்க அடித்தளத்தில் ஊன்றி நின்று, போர்க் குணத்தோடு சமத்துவ பயணத்தில் பீடுநடை போட தோழர் அபானி லஹரி அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு ஊக்கத்தையும் , உற்சாகத்தையும் தரும்.

 

நூல் : “தெபாகா எழுச்சி”
வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம் 1946-1950

நுல் ஆசிரியர் : அபானி லகரி
பக்கங்கள் : 280
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 250.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer