புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாயிகளின் மகா பஞ்சாயத்துக்களை நாடு முழுவதும் கூட்டப் போவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான “சம்யுக்தா கிசான் மோர்ச்சா” அமைப்பு தெரிவித்துள்ளது.

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படவிருந்த டிராக்டர் பேரணியை சீர்குலைத்து வன்முறைக் களமாக மாற்றியது மத்திய மோடி அரசு.

இதனையே காரணமாக வைத்து விவசாயிகளை வன்முறையாளர்களாகவும் அவர்களை தேச விரோதிகளாகவும் சித்தரித்து அவர்களை தனிமைப்படுத்தி விடலாம் எனக் கனவு கண்டிருந்தது மோடி அரசு. ஆனால் அரசின் அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளும் அதற்கே எதிரானதாக மாறியது. போதாத குறைக்கு ரிஹானா போன்ற பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த நிலையில், உலகளாவிய ஆதரவு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்தது.

படிக்க :
♦ பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
♦ மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!

இதனை ஒட்டி தங்கள்து அடுத்தகட்ட போராட்ட நகர்வு குறித்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த புதன் கிழமை அன்று ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் இந்தியா முழுவதும் எதிர்வரும் பிப்ரவரி 18-ம் தேதியன்று, நான்கு மணிநேர ரயில் மறியலை அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (11-02-2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் விவசாயிகளின் மகா பஞ்சாயத்தை கூட்டப் போவதாகவும் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல், இந்தப் போராட்டங்களை முடித்துக் கொள்வதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர். இந்தியா முழுவதும் கிராமப் பகுதிகளில் விவசாயிகள் மகா பஞ்சாயத்தைக் கூட்டுவதன் மூலம், பெருவாரியான மக்களின் ஆதரவை தங்களது போராட்டத்திற்குத் திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி

முதல்கட்டமாக, உத்தரப் பிரதேசத்தின் மொவதாபாத்தில் 12-02-2021 அன்றும், அரியானாவின் பகதூர்கர் பைபாசில் பிப்ரவரி 13-ம் தேதியும், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் பிப்ரவரி 18-ம் தேதியும், ராஜஸ்தானின் அனுமன்கர் பகுதியில் பிப்ரவரி 19-ம் தேதியும் ராஜஸ்தானின் சில்கர் பகுதியில் பிப்ரவரி 23-ம் தேதியும் நடைபெற்றது.

மேலும் சிங்கு எல்லையில் மீண்டும் இணையம் நிறுத்தப்பட்டால், நவீன கண்ணாடி இழை தடம் மூலமாக இணையம் பெறப்பட இருப்பதாகவும், வெளியிலிருந்து வந்து குழப்பம் விளைவிப்போரைக் கண்காணிக்க 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவிருப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மோடி அரசு மற்றும் சங்க பரிவாரக் கும்பலால் முன்னெடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து விவசாயிகள் அடுத்த கட்ட போராட்ட வழிமுறைகளை நோக்கிச் செல்கின்றனர். அதற்கு முக்கியக் காரணம், இந்தக் கும்பலின் அவதூறுகளை புறந்தள்ளி விவாசாயிகள் போராட்டத்திற்கு இந்திய அளவிலும் வெளிநாடுகளிலும் கிடைத்துள்ள ஆதரவுதான்.

விவசாயிகள் போராட்டத்தை வெறும் விவசாயிகளின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் தமது வருங்கால உணவுப் பிரச்சினையாக பெரும்பான்மை மக்கள் உணரும் போது இந்தச் சட்டங்களும் கார்ப்பரேட் ஆதரவு அரசும் குப்பைக்கூளத்தில் தூக்கியெறியப்படும்.

ரகுராம்
செய்தி ஆதாரம் : The Wire