ந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து நெதர்லாந்தில் இயங்கும் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளியிடும் Rode Morgen மாதாந்த சஞ்சிகையில் பெப்ரவரி மாத இதழில் வந்த கட்டுரையை இங்கே தமிழில் மொழிபெயர்த்து தருகிறேன்.

இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான சமத்துவமின்மை அதை விட மிக வேகமாக வளர்கின்றது. ஏழைகளை மென்மேலும் ஏழைகளாக்கி கோடீஸ்வரர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். மோடி அரசாங்கம் பெரும் வணிக நிறுவனங்கள் சுரண்டலை நடத்துவதற்கு உதவுகின்றது.

2016-ம் ஆண்டு வங்கிகளுக்கு உதவும் நோக்கில், மோடி 1000, 500 ரூபாய் தாள்களை செல்லாததாக்கினார். அதே நேரம் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கும் இல்லை, வங்கி அட்டையும் இல்லை. பதினெட்டு மில்லியன் இந்தியர்கள் அதை எதிர்த்து போராடினார்கள்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

2019ம் ஆண்டு, முஸ்லிம்களை பாகுபடுத்தி பிளவை அதிகரிக்கும் புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து பாசிச மோடி பெரிய அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கி உழைக்கும் வர்க்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். வேலை நேரம் அதிகரிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும், ஜனநாயக உரிமைகளும் குறைக்கப் பட்டன.

4 செப்டம்பர் 2020 நான்கு தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டன. அவற்றில் தொழில்முனைவோருக்கு நன்மையாகவும் தொழிலாளர்களுக்கு தீமையாகவும் பல அம்சங்கள் இருந்தன. நிரந்தர தொழில்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழில்கள் அனுமதிக்கப்பட்டன. நினைத்தபடி பணி நீக்கம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது. நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை ஆலோசிக்காமல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம். சட்டரீதியான வேலைநிறுத்தங்கள் சாத்தியமில்லை. ஒரு கம்பனி ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கான எல்லை 20 இலிருந்து 50 ஆக அதிகரிக்கப்பட்டது.

பாசிச மோடி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்த அதே காலத்தில் இந்திய சனத்தொகையில் ஐம்பது சதவீதத்தை கொண்ட உழவர்களுக்கு எதிராகவும் மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அரிசி, தானியங்களை ஒரு நிச்சயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி வந்ததை நிறுத்தி விடும். நிலம் குத்தகைக்கு கொடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் நீக்கப்பட்டன.

இதன் மூலம் விவசாயிகள் தமது விளைபொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்பதற்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று அரசாங்கம் கூறுகின்றது. எழுபது சதவீதமான விவசாயிகள் ஒரு ஹெக்டேயரை விடக் குறைவான நிலத்தையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இந்த விவசாயிகள் உலகில் பெரிய தானிய வர்த்தகர்களுடன் பேரம் பேச முடியுமா?

Cargill, Walmart போன்ற பெரிய நிறுவனங்கள் தாம் விரும்பியவாறு விலையை குறைத்து விடலாம். அதனால் விவசாயிகள் தாம் செலவிட்ட பணத்தை கூட திரும்பப் பெற முடியாது. பெரும் நிறுவனங்களின் இலாபவேட்டையில் உழவர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரங்களில் சேரிகளை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

26 நவம்பர் 2020 அன்று, அரசு சட்டங்களுக்கு எதிராக 250 மில்லியன் அளவிலான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அது மனிதகுல வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டம். ஆனால் நெதர்லாந்தில் அதைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை.

27 நவம்பர் இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானாவில் இருந்து விவசாயிகள் கால்நடையாகவும், டிராக்டர்கள், பேருந்து வண்டிகளிலும் தலைநகர் டெல்லியை நோக்கிச் சென்றனர். அவர்களது எண்ணிக்கை அரை மில்லியனாக வளர்ந்தது. நவம்பர் கடைசியில் இருந்து கடும் குளிரிலும், மழையிலும் நெடுஞ்சாலைகளை மறித்து நின்றனர். இந்த மறியல் போராட்டத்தின் போது 500 உழவர் அமைப்புகள் தற்காலிக சமையல் கூடங்களையும், மருத்துவ நிலையங்களையும், ஒரு பத்திரிகையும் கூட நடத்தினார்கள்.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!
♦ தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

ICOR சர்வதேச அமைப்பில் நெதர்லாந்து Rode Morgen கட்சியுடன் அங்கம் வகிக்கும், CPI (ML) Red star மற்றும் பல மார்க்சிய லெனினிச அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்துள்ளன. போலிஸ் தடையரண்கள் போட்டு, கலவரத் தடுப்பு காவலர்களையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், வேறு பல தாக்குதல் உபகரணங்களையும் பயன்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்தியப் பிரதமர் மோடி பிற்போக்குவாத சட்டங்களை அமுல்படுத்த முடிந்தது. ஆனால் தற்போது அவரது அரசாங்கம் எதிர்க்க முடியாத விவசாயிகளுக்கு முகம் கொடுக்கிறது. அவர்கள் இதுவரை எட்டு தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 20 ஜனவரி நடந்த பேச்சுவார்த்தையில் அரசு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை 18 மாதங்கள் பின்போடவும் ஓர் ஆணைக்குழு அமைக்கவும் சம்மதித்தது. உழவர் அமைப்புகள் அதை நிராகரித்ததுடன் சட்டங்களை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென கோரின.

குடியரசு தினமான ஜனவரி 26 எப்போதும் பெரிய அணிவகுப்புகள் நடக்கும். இந்த வருடம் மில்லியன் கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் தமது அணிவகுப்பை நடத்தினார்கள். தடையை மீறி தலைநகருக்குள் நுழைந்தனர். அதற்கு ஆயத்தப் படுத்துவதற்காக 23 ஜனவரி மாநிலத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்தன. இந்து தேசியவாத பாஜக ஆதரவு தொழிற்சங்கம் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. பல்லாயிரக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் பங்குபற்றி உள்ளனர். உழைக்கும் வர்க்க மக்களின் வர்க்க உணர்வானது மோடியின் பாஜக அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது.

கலையரசன்
கலையகம்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க