ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியாநத்தல் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி எனும் இளம்பெண் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அவரது வீட்டின் அருகே கழுத்து நெறிபட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார்.

இந்த மரணம் தொடர்பாக விசாரித்த போலீசு, அதே ஊரைச் சேர்ந்த ரெங்கசாமி, ரவீந்திரன், கிருஷ்ணசாமி ஆகிய மூன்று தலித் இளைஞர்களை கொலைக் குற்றத்தில் கைது செய்திருக்கிறது.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சரஸ்வதியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரெங்கசாமியும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் பார்த்த பையனையே சரஸ்வதி திருமணம் செய்துகொள்ளப் போவதை அறிந்த ரெங்கசாமி, சரஸ்வதியை தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகத் தெரிவிக்கின்றன.

படிக்க :
♦ மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !
♦ வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

சமூக வலைத்தளங்களில் பா.ம.க மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இதனை ஒருதலைக் காதல் என்றும் தனது காதலை சரஸ்வதி ஏற்கவில்லை என்பதற்காக சரஸ்வதியை ரெங்கசாமி கொலை செய்துள்ளான் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கொலை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடந்த நிலையில், விசாரணையின் முடிவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீசு கைது செய்துவிட்டது. இந்தக் கொலையைத் தாங்கள்தான் செய்ததாக அந்த மூவரும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகுதான், #JusticeForSaraswathi எனும் ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அதாவது, குற்றவாளிகளைக் கைதுசெய்த பின்னர் தான் #JusticeForSaraswathi என்ற ஹேஷ்டேக் பரபரப்பாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண், காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கும் அல்லது ஏற்கெனவே காதலித்த ஒருவனை விட்டுப் பிரிவதற்கும் அனைத்து உரிமையும் அப்பெண்ணிற்கு உண்டு. சரஸ்வதி, ரெங்கசாமியை முன்னரே காதலித்திருந்தால் பின்னர் ரெங்கசாமியை விட்டுப் பிரிவதற்கும், ஒருவேளை அது ரெங்கசாமியின் ஒருதலைக் காதலாக இருந்திருந்தால் அதை மறுப்பதற்கும் சரஸ்வதிக்கு அனைத்து உரிமையும் உண்டு.

தனது காதலை சரஸ்வதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயகமற்ற ஆணாதிக்க மனநிலையில் இந்தக் கொலையை, ‘காதல்’ என்ற பெயரில் அரங்கேற்றியிருக்கிறான் ரெங்கசாமி. இந்தக் கொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒருபுறத்தில், பெண்களை அழகுப் பதுமைகளாகவும், சுய அறிவு அற்றவர்களாகவும், தனக்கென்று ஒர் நிலைப்பாடுகளற்றவர்களாகவும் உருவகப்படுத்தி வரும் சினிமா கழிசடைத்தனங்கள் இத்தகைய கொடூரங்கள் நிகழ காரணமாக இருக்கின்றன. மறுபக்கத்தில், சமூக நடைமுறைகளிலும் குடும்பங்களிலும் எதார்த்தமாக நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் இத்தகைய வன்கொலைகள் தொடரக் காரணமாக இருக்கின்றன.

இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கையில், குற்றம் இழைத்தவர்களின் சமூகப் பின்னணிதான் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை துவங்கி வழக்காடு மன்றங்கள் வரை பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க வேண்டிய நீதியின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருந்து குற்றம் இழைத்தவர்கள் மிகவும் பலமானவர்களாக இருக்கையில் முதல் தகவல் அறிக்கைகள் கூட பதியப்படாமல் பிரச்சினைகள் நிர்மூலமாக்கப் பட்டிருக்கின்றன.

அத்தகைய சமூகச் செல்வாக்கு கொண்டோருக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்டோருக்கு எதிராகவும் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கங்கள் செயல்படும்போது மட்டுமே ஜனநாயகவாதிகள் மற்றும் முற்போக்காளர்கள் களத்தில் இறங்கி குரல் கொடுக்கின்றனர். அதிகாரத்துவத்தின் குடுமியைப் பிடித்து உலுக்குகின்றனர். அச்சமயங்களில் சமூக வலைத்தளங்களில் #JusticeFor என்ற ஹேஷ்டேக்குகளில் வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் நீதிகேட்டு போராடுகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக விரிவான பரப்புரை செய்கின்றனர்.

தற்போது சரஸ்வதி படுகொலையை ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் #JusticeForSaraswathi எனும் ஹேஷ்டேக் பற்றி பார்க்கலாம். இங்கு கொலையில் ஈடுபட்டதாக போலீசு கைது செய்திருக்கும் மூன்று தலித் இளைஞர்களும் தப்பிச் செல்லவில்லை. இவர்களுக்கு போலீசும் ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. இதுவரையில் அனைத்தும் சட்டப்படி சரியாக நடந்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில், #JusticeForSaraswathi டிரெண்டிங் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன ?

முகநூலில் தேடிப் பார்த்தால் #JusticeForSaraswathi எனும் ட்ரெண்டிங்கை முன் நின்று நடத்துவது, பாமக, பாஜக, அதிமுக மற்றும் சில சீமானிச தமிழ்த் தேசியவாதிகள் தான். சுருக்கமாகச் சொன்னால் சாதிவெறியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்க்கும் கூட்டம்தான் இதனை செய்து வருகிறது. பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரத்திலிருந்து திடீரென தலையைத் தூக்கி, “இது நாடகக் காதல் கும்பலின் வெறியாட்டம்” என அறிக்கை விட்டிருக்கிறார். அவரது அடிபொடிகள் அனைவரும் திருமாவளவனை குறிவைத்துத் தாக்கத் துவங்கியிருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இதை டிரெண்டிங் செய்து தொடர்பவர்களின் முதல் இலக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் தான். நாடகக் காதலை ஊக்குவிப்பவர் என்பதாகவும், அவரது தூண்டுதலால்தான் இளைஞர்கள் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டு, சரஸ்வதி படுகொலையை நாடகக் காதலோடு இணைத்திருக்கிறது சாதிவெறிக் கும்பல்.

பாலியல் ஜல்சா கட்சி என அழைக்கப்படும் பா.ஜ.கவை சேர்ந்த ஒரு இழிபிறவி ஒருபடி மேலே போய், சரஸ்வதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எழுதியிருக்கிறது.

கொல்லப்பட்ட இளம்பெண் சரஸ்வதி

ந்த ஹேஷ்டேக்ஐ டிரெண்டிங் செய்வது நிச்சயமாக சரஸ்வதி மரணத்திற்கு நீதி பெற்றுத் தரும் நோக்கத்திற்கு இல்லை என்பது ராமதாஸ் மற்றும் சங்க பரிவாரக் கும்பல்களின் பதிவுகளில் இருந்தே பளீரெனத் தெரிகிறது. சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது இந்த சாதிவெறிக் கும்பல்.

இவர்களது அடுத்த இலக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துவரும் ஜனநாயக சக்திகள் மற்றும் முற்போக்காளர்கள் தான்.

இதுவே ஒரு தலித் பெண் இறந்திருந்தால் கொந்தளித்து எழும் இந்த முற்போக்காளர்கள், ஒரு வன்னிய சாதிப் பெண்ணை தலித் இளைஞன் கொன்றதற்கு வாய் திறக்க மாட்டார்கள்” என்று சமூகச் செயற்பாட்டாளர்களை அவர்களது விழுமியங்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர் சாதி வெறியர்கள். இந்தக் கும்பலின் இந்த “மாரல் (Moral) மிரட்டலுக்கு” முகம் கொடுக்கும் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்களும், #JusticeForSaraswathi என ஹேஷ்டேக் போட்டு தமது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இவர்கள் கூறுவதைப் போல ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் சாதியின் அடிப்படையில் மட்டுமா இவ்வளவு காலமும் பொது வெளியிலும் இணைய வெளியிலும் குரல் கொடுத்தார்கள் ?

சமூகத்தில் யார் யாருக்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்து வந்துள்ளனர். எங்கெல்லாம் பலவீனமானவர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அக்கெல்லாம் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

சாத்தான் குளத்தில் போலீசால் கொல்லப்பட்ட தந்தை மகனுடைய வழக்குகள் போலீசு அதிகாரத்தால் முடக்கப்பட்ட போது அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பலநூறு பெண்களை சீரழித்த கிரிமினல்களை அடிமை எடப்பாடி அரசு காப்பாற்ற முயற்சிக்கையில் அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இங்கு யாரும் சாதி பார்க்கவில்லையே !

..டி போன்ற உயர் கல்வி நிலைய அக்ரஹாரங்களில், பாத்திமா லத்தீஃப்களும், ரோஹித் வெமுலாக்களும் நஜீபுகளும் சனாதனக் கும்பலால் கொல்லப்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தார்கள்.

இப்படி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் சூழல்களில்தான் தமிழக முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் குரல் கொடுத்து வந்தனர். சரஸ்வதி கொலை என்பது முழுக்க முழுக்க ஆணாதிக்கத் திமிரினால் நிகழ்த்தப்பட்ட கொலை. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்புவிக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆகவே இங்கு நீதி மறுக்கப்படும் பிரச்சனை எதுவுமே எழவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தவறிழைக்கையில் அவர்களை உடனடியாக கைது செய்கிறது போலீசு. அது சரியானதுதான். ஆனால் அதே தவறை ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது நடைமுறைப்படுத்துகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறது. ஆதிக்கச் சாதியினரை தப்பிக்கச் செய்கிறது.

இது சாதி ஆதிக்கம் என்பதில் மட்டுமல்ல. ஆதிக்க சாதி எதிர் தலித், இந்து மதம் எதிர் இஸ்லாம், ஆண் எதிர் பெண், அதிகார வர்க்கம் எதிர் சாமானியர்கள், முதலாளிகள் எதிர் தொழிலாளர்கள் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகார வர்க்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக எழுப்பப்படும் குரல் தான் #JusticeFor எனும் ஹேஷ்டேக்.

படிக்க :
♦ கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !
♦ ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

சரஸ்வதி படுகொலை விவகாரத்தில், ஆதிக்கச் சாதி ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் பா.ம.க கும்பல் இந்த ஹேஷ்டேக்ஐ அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறது. சமூக விடுதலைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த ஹேஷ்டேக், நாடகக் காதல் எனும் கட்டுக்கதையோடு இணைத்து தலித்துகளுக்கு எதிரான வெறுப்பையும் ஒடுக்குமுறையையும் வளர்ப்பதற்கு பயன்படுத்துகிறது.

ஆதிக்கத்தை செலுத்துவதற்காக #JusticeFor எனும் ஹேஷ்டேக்சாதிவெறி, மதவெறிக் கும்பல்கள் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதுதான் ஆண் ஆதிக்கத்தால் கொல்லப்பட்ட சரஸ்வதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


சரண்