‘கொடுமை மட்டுமே தினசரி நிதர்சனம் என்ற சமூகத்தில் தொடர்ந்து வாழும் நிலை வந்தால் ஒன்று போராடுவது அல்லது அந்தக் கொடுமைக்கு வீழ்வது, இந்த இரண்டு தவிர மக்களுக்கு வேறு என்ன சாத்தியங்கள் இருக்கின்றன?’ என்று கேட்டார் ஏங்கெல்ஸ்.

இந்தியா இப்போது ஒரு பேரழிவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சிகிச்சை கிடைக்காமல் தன் உறவினர் இறந்து விட்டார் என்று ஒரு குடிமகன் மருத்துவமனை ஊழியரைத் தாக்குகிறான். இன்னொரு குடிமகன் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். பல்வேறு நிலைகளில் நம்மைத் தாக்கும் அழிவு காலம் இது.

படிக்க :
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

இப்படி சிஸ்டம் மற்றும் அரசாங்கம் தோல்வி அடைந்து இருப்பதை விட, நம்மைப் பெரிதும் கவலையுற செய்வது ‘இது எதற்கும் மத்திய அரசு பொறுப்பில்லை’ என அரசின் ஆதரவாளர்கள் சொல்வதுதான்: அதுவும் இந்தியாவின் மாபெரும் இருண்ட காலங்களில் ஒன்றில் வாழ்ந்து கொண்டு அப்படி சொல்வது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்படி அரசுக்குத் தரும் ஆதரவு நமது ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கப் போகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்சாலைகளில் பணியிடங்கள் கொடுமையானக் கதியில் இருந்தன. சாமானிய வாழ்வாதாரத்துக்குக் கூட லாயக்கற்ற சூழ்நிலையில் அவை இயங்கிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சூழலை உருவாக்கியது ஆங்கிலேய மேட்டுக்குடிகளும் அரசும்தான் என்று ஏங்கெல்ஸ் குற்றம் சாட்டுகிறார். அப்படிப்பட்ட சூழலில் பணிபுரியும், வாழும் ஊழியர்கள் நோயுற்று விரைவிலேயே அகால மரணத்தைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டு இருப்பதை ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டி ‘அது ஒரு சமூகப் படுகொலை’ என்று வர்ணிக்கிறார். என்ன, அங்கே அது கொலையாகத் தெரியவில்லை. காரணம்,  அங்கே கொலைகாரன் என்று யாரும் இருப்பதில்லை. அந்த சாவு இயற்கையான சாவாகவே தோற்றம் அளிக்கிறது.

இப்போது இந்தியாவில் நாம் காண்பது அதே போன்றதொரு சமூகப் படுகொலைதான். அதனால்தான் அரசை இதில் பொறுப்பாக்கத் தயங்குகிறோம். ஒரே வித்தியாசம், 1840-ல் ஏங்கெல்ஸ் வாழ்ந்த இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கம் மட்டுமே கொள்ளை நோய்களால் பாதிப்புற்றது. இன்றைய இந்தியாவில் கொள்ளை நோய் எல்லாரையுமே தாக்குகிறது.

முதல் அலையின் பொழுது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் படும் கொடுமைகள் நமக்குத் தெரியவில்லை. அதுவும் சமூகப் படுகொலைதான். அப்போதும் நாம் அரசைக் குறை சொல்லத் தயங்கினோம். அந்தத் தொழிலாளர்கள் ‘தாமாகத்தானே’ போய்க் கொண்டு இருக்கிறார்கள். யாராவது அவர்களைத் துரத்தினார்களா என்ன? அதேபோல, இப்போதும் இந்த இரண்டாம் அலைக்கு மக்களைத்தான் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நகைமுரண் என்னவெனில் ஃபிப்ரவரி மாதம் கோவிட்டை முறியடித்ததை பா.ஜ.க கொண்டாடிய பொழுது, அந்த வெற்றிக்கானப் பெருமையை பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கொடுத்தார்கள், மக்களுக்கு அல்ல.

சாமானிய மக்களிடம் நிபுணர் கமிட்டி கிடையாது. கொள்ளை நோய் ஆரூட வடிவங்கள் கிடையாது. ஆனாலும் தவறுக்கு அவர்களைப் பொறுப்பேற்க சொல்கிறோம். ஆனால், தேர்தல் கமிஷன் போன்ற அதிகாரம் மிகுந்த ஒரு அமைப்பு எட்டுக் கட்டத் தேர்தலை அறிவிக்கிறது. உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?

இந்த அலைக்கானப் பொறுப்பில் இருந்து அரசை விடுவிப்பதன் மூலம் நாமும் இந்த சமூகப் படுகொலையில் பங்கு கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். சுடுகாடுகளில் உடல்கள் எரிபடுபவதை ஊடகங்களில் காட்டக் கூடாது. அவை இந்துக்களுக்குப் புனிதமான விஷயங்கள் என்று வாதிடுவதும் இதன் பகுதிதான். இதற்கு முன்பு நிறைய இந்துக்களின் தகனங்கள் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன, நேரடி ஒளிபரப்பும் நடந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் விட்டு விடுவோம். நாம் கேட்க வேண்டிய கேள்விகள் இவைதான்: ஆக்சிஜன் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொண்டிருந்திருப்பதன் மூலம் எத்தனை சாவுகளை இந்தியா தடுத்திருந்திருக்க முடியும்?  மக்கள் ஏன் தங்கள் உற்றார் உறவினர்களை பிளாட்பாரங்களில், பார்க்கிங் இடங்களில் வைத்து தகனம் செய்யும் நிலை வந்திருக்கிறது? இவையெல்லாம் நமக்கு அவமானமாக இல்லை, ஆனால் இவற்றை ஊடகங்கள் பதிவு செய்வது மட்டும்தான் அவமானமா?

கொள்ளை நோயின் பிரச்சினைகளை மறைப்பது அந்த நோயை அடுத்த கட்டப் பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் – இது எல்லாக் கொள்ளை நோய் நிபுணர்களும் ஒருமித்து எச்சரிக்கும் விஷயம். 2019-ல் கொரோனா தொற்றுத் துவங்கியப் பொழுது, ஆரம்பத்திலேயே சீனா அதனை மறைக்க முயற்சிக்காமல் இருந்திருந்தால் உலகம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது. அதனால்தான் நோய்த் தாக்கம் மிகுந்து சாவு எண்ணிக்கைகள் அதிகரித்த இதர நாடுகளில் ஊடகங்கள் முழு உத்வேகத்துடன் செயல்பட்டு முடிந்த வரை வெளிப்படையாக இயங்கின: இத்தாலி, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், பெரு, போன்றவை உதாரணங்கள். ஆனால், இந்தியா மட்டும் இதில் கலாச்சார ரீதியாக தனித்துவம் கொண்டதாக இயங்க முயல்வது பெரும் சோகம்.

மாபெரும் தந்தை பிம்பம் கொண்ட ஒருவர் கலாச்சார ரீதியாக புனிதப் பூச்சு பெற்று எந்தக் கேள்வியும் இல்லாமல் ஆட்சி செய்வதை ‘தந்தையாட்சி’ என்று சொல்வார்கள். (Patrimonialism) சமூகவியல் அறிஞர் மேக்ஸ் வெபர் உருவாக்கிய இந்தப் பதம் ஜனநாயகத்துக்கு எதிர்ப்பதமாக சில நேரங்களில் பயன்படுகிறது. கடந்த ஏழு வருடங்களாக இந்தியா அப்படிப்பட்ட ஒரு தந்தையாட்சியாகத்தான் செயல்பட்டு வருகிறது. என்ன, வழக்கமாக இந்த ஆட்சி முறை ஒரு குடும்பம், வாரிசு என்று செயல்படும். மாறாக இங்கே மதப்பெரும்பான்மைவாதக் கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. போலவே, தேர்தல் வெற்றிகள் மட்டுமே கட்டற்ற அதிகாரத்துக்கு ஆதாரமாக முன்வைக்கப் படுகிறது. குடிமக்களின் கடமைகள் மற்றும் தேசபக்தி போன்றவை முக்கிய வாதங்களாக முன்னெடுக்கப் படுகின்றன. இதே போன்ற வாதங்கள் பணநீக்க நேரத்திலும் எழுந்தன.

இதில் நகைமுரண் என்னவெனில் அப்படிப்பட்ட அரசில் புனிதம் பெற்ற தந்தைக்கு எல்லாமே தெரியும், அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், சரி செய்து விடுவார் என்று ஒரு புறம் பேசுகிறார்கள். ஆனால், குடிமக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை, ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை, பெட் கிடைக்கவில்லை. தந்தையோ சும்மா இருக்கிறார். கிடைக்காத எல்லாவற்றையும் அவர்களேதான் தேடித் தேடி பிடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சக்தியும் வசதியும் இருப்பவர்கள் தேடிப் பிடித்துக் கொள்கிறார்கள். இல்லாதவர்கள் நிலை? இங்கே சமூக டார்வினிய தியரியான ‘வல்லவன் மட்டுமே பிழைப்பான்’ என்பது நிதர்சனமாகி விட்டது.

படிக்க :
♦ இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

மத்திய சுகாதார அமைச்சர் ‘ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லை’ என்று சொல்கிறார். ஆக்சிஜன் கேட்டுப் பதிவு இடுபவர்கள் மேல் உ.பி அரசு வழக்குப் பதிகிறது. ‘இறந்தவர்கள் திரும்பியா வரப் போகிறார்கள், எதற்கு அனாவசியமாக இறப்பு எண்ணிக்கை பற்றிப் பேச வேண்டும்’ என்று ஹரியானா முதல்வர் பேசுகிறார்.

கொரோனா எனும் கொள்ளை நோய் இந்த அரசாங்கத்திடம் இருந்த ‘புனிதத் தந்தை’ எனும் மேற்பூச்சை அரித்து உண்மை நிலையைக் காட்டி விட்டது.

(குறிப்பு : நிஸ்ஸிம் மன்னத்துக்கரன் கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு வளர்ச்சி ஆய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராக பணி புரிகிறார்.  இந்தியாவில் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் கொரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு அணுகும் விதம் குறித்து நேற்றைய ஹிண்டுவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதனை அவரது உரிய அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்து இருக்கிறேன். )

கட்டுரையாளர் : நிஸ்ஸிம் மன்னதுக்காரன்
தமிழாக்கம் : ஸ்ரீதர் சுப்பிரமணியம்
செய்தி ஆதாரம் : The Hindu
முகநூலில் : Sridhar Subramaniam

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க