மீப காலமாக உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இந்துக்களின் ‘புனிதமாக’ கருதப்படும் கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கான பிணங்கள் புதைக்கப்படுவதும், நதியில் பிணங்கள் மிதந்து வருவதும் வாடிக்கையான செய்தியாகியுள்ளது. இந்நிலையில் உத்திரகாண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டத்தில் சரயு நதிக்கரையில் சில பிணங்கள் கரை ஒதுங்கியிருப்பது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன
♦ அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்த சரயு நதிக்கரைதான் ராமன் நீராடி விளையாடிய மற்றும் ஜலசமாதி அடைந்த இடமாக நம்பப்படுகிறது, இந்த ‘புனித’ நதிக்கரையில்தான், உலகின் மிகப்பெரிய ராமர் சிலையை அமைப்பதும், மேலும் ராமன் பிறந்ததாக சொல்லப்படும் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்தியை பிரபலமான சர்வதேச ஆன்மீகச் சுற்றுலா நகரமாக மாற்றுவதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காவி கும்பலின் கனவு திட்டமாக இருக்கிறது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியும், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகியும் இந்தக் கனவுத்திட்டத்தை நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளனர் என்று சங்கிகள் பூரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அது உண்மையும் கூட. பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின் சங்கிகளின் ஆரவாரத்தோடு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியும் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்து மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கான மத்திய அரசின் “ஹ்ருதய திட்டம்” மற்றும் நகர்ப்புற உள்கட்டைமைப்புகளுக்கான “அம்ருத் திட்டம்” ஆகியவற்றில் அயோத்தி இணைக்கப்பட்டு அயோத்தியை ஒரு ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இந்தத் திட்டங்களுக்காக கடந்த 2020-ம் ஆண்டு பட்ஜெட்டிலேயே விமான நிலையம் அமைக்க 500 கோடி, அயோத்தி நகர உட்கட்டமைப்புக்காக 85 கோடி, காசி விஸ்வநாதர் கோவில் கட்டுமானத்துக்கு 180 கோடி, வேத விஞ்ஞான கேந்திராவுக்கு 18 கோடி, யாத்திரை செல்பவர்களுக்கு 8 கோடி, உத்திரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கு 50 கோடி என ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டதும், இந்த புதிய நகர உருவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தீவிரப்படுத்துமாறு அயோத்தி பயணத்தின்போதே அதிகாரிகளுக்கு யோகி உத்தரவிட்டதும் அறிவோம்.

இப்படி அயோத்தி மட்டுமின்றி பிரயாக்ராஜ், வாராணாசி, லக்னோ, கோராக்பூர் ஆகிய பகுதிகளிலும் புதிய கட்டுமானங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக உழைக்கும் மக்களிடம் இருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும் பெருமளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

சரயு நதிக்கரை

158 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு சர்வதேச விமான நிலையம், ரூபாய் 100 கோடி செலவில் ரயில் நிலையம், சரயு நதிக்கரையில் சொகுசான க்ரூஸ் கப்பல் பயணம், நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், நகரத்தோடு எல்லா பகுதிகளையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலைகள் என இப்படி 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் புதிய நகரம் வணிக நோக்கத்திற்காகவும், கார்ப்பரேட் முதலைகள் இலாப வேட்டையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பெருந்தொற்றுச் சூழலிலும் அதற்கு முன்னும் வெளிவரும் செய்திகள் உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பும், மக்களின் வாழ்வாதாரமும் படுமோசமாக இருப்பதை படம்பிடித்து நமக்கு காட்டியது.

மக்களின் பொது சுகாதாரத்தை கங்கையில் மிதக்கவிடப்படும் பிணம் போல கைகழுவி விட்டு, கார்ப்பரேட் ராமன்களின் பாதங்களுக்கு பணத்தால் பூஜை செய்யும் பணியை செய்து கொண்டிருக்கிறது யோகி அரசு. ராமன் ஓடி ஆடிய நதியில் பிணங்கள் மிதந்தோடுவதைப் பற்றி ”இந்து மதக் காவலர்களாகிய” ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பல் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரையில் ராமனே ஒரு காலாவதியான பொருள்தான் !!


பூபாலன்
செய்தி ஆதாரம் : Hindutamil, Zeenews.india

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க