ண்டைக்காடு கலவரங்களின் மூலம் தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் தான் உள்ளே நுழைந்ததற்கான அடையாளத்தை 1980-களில் பதித்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அமைதியாக இருந்த தமிழகத்தில் கலவரங்களையும் வன்முறைகளையும் தொடர்ந்து நடத்தியது.

கோவையில் இரண்டு முறை கலவரங்கள், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் சிறு சிறு கலவரங்கள் என வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் எல்லாம் கலவரங்களின் மூலமும் வன்முறையின் மூலமும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற உதிரிக் கும்பல்களை வளர்த்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அடிமைக் கும்பலின் தயவால் 4 இடங்களில் எம்.எல்.. பதவியைப் பெற்ற பின்னர், மீண்டும் கலவர அரசியலைக் கையில் எடுத்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கிரி வலப் பாதையில் கடந்த 30 ஆண்டுகளாக இமானுவேல் ஜெப வீடு எனும் தேவாலயம் செயல்பட்டுவந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அப்பகுதியில் நடந்த சாலை விரிவாக்கப் பணிகளை முன்னிட்டு அந்த தேவாலயத்தின் கூரை அகற்றப்பட்டது.

அதன் பின்னர் சென்ற மாதம் சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர், தேவாலயத்தின் நிர்வாகிகள் கட்டுடத்தை கட்டத் துவங்கினர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி கும்பல், அந்த தேவாலயத்தில் இருந்து தமது கலவர அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டது.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதியன்று அதிகாலை 3 மணியளவில் அந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள இடத்தில் திடீரென ஒரு விநாயகர் சிலையை வைத்து அதற்கு மாலை போட்டு அலங்காரப்படுத்தி அதனைச் சுற்றி ஓலைக் கீற்று கூடாரமும் அமைத்தது இந்துத்துவக் கும்பல்.

அயோத்தியில் பாபர் மசூதி கட்டிடத்திற்குள் இரவோடு இரவாக நுழைந்து குழந்தை இராமன் சிலையை வைத்துவிட்டு வந்த திருட்டுக் கும்பல் அல்லவா இது. அதே வழிமுறையில் இங்கும் பிள்ளையார் சிலையை வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து உள்ளூர் போலீசில் தேவாலய நிர்வாகிகள் புகார் அளித்தனர். ஆனால் போலீசோ கண்டு கொள்ளவில்லை. இந்து முன்னணி கும்பல் அங்கு வர மோதல் போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து உள்ளூர் போலீசு அங்கு வந்தது.

புகார் அளித்த தேவாலய நிர்வாகிகள் தங்களிடம் அந்த நிலத்துக்கான ஆவணங்கள் இருப்பதைக் காட்டிய நிலையிலும், அது பற்றி அக்கறை செலுத்தாமல், இந்துத்துவக் கும்பலின் வாதத்தையே பேசியது போலீசு.

இது அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் தொல்லை செய்யக் கூடாது” என தேவாலய நிர்வாகிகளை மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது போலீசு.

போலீசும் இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாகப் பேசுவதை அடுத்து தேவாலய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை அழைத்து பிரச்சினை குறித்து விவரித்தனர். பத்திரிகையாளர்கள் வந்த நிலையில் தான் அது குறித்து மிரண்டு போன அதிகார வர்க்கம், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.

உடனடியாக ஆர்.டி.ஓ இளவரசி சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கிறார். கிருத்தவ தேவாலய நிர்வாகிகள் கொடுத்த ஆவணங்களை வாங்கிக் கொண்டு, அந்த இடத்திலிருந்து விநாயகர் சிலையை எடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அங்கு இந்துத்துவக் கும்பல் அதிகமாகத் திரண்டு கலவர சூழலை ஏற்படுத்தியிது.

இதனைத் தொடந்து அங்கு ஆயுதப்படை போலீசு அதிக அளவில் குவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 4-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சிலை அங்கிருந்து எடுக்கப்பட்டது. தகராறு செய்த இந்துத்துவ குண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்துப் போராட்டம் செய்யவிருப்பதாக இந்து முன்னணி கும்பல் அறிவித்துள்ளது.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
♦ அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது விவகாரத்திலும் தேவாலய நிலம் குறித்து இந்துத்துவக் கும்பல் உருவாக்கிய பிரச்சினையும், அதற்கு ஆதரவாக அப்பகுதி போலீசும் நிர்வாகமும் நடந்து கொண்டது தான் அடிப்படை காரணமாக இருந்தது.

இங்கும் பகுதி போலீசு முழுக்க முழுக்க இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது. இதை அவ்வளவு சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சங்க பரிவாரக் கும்பல் நடத்திய கலவரங்களும், அவ்வளவு ஏன்.. சமீபத்தில் பிரியாணி அண்டா இழிபுகழ் கோவைக் கலவரங்களிலும் போலீசின் ஒத்துழைப்போடுதான் நடந்திருக்கிறது.

நடந்த இந்த நிகழ்வில், பிள்ளையார் சிலை எடுக்கப்பட்டுவிட்டது என்பது வெற்றியல்ல. கட்டப் பஞ்சாயத்து செய்த போலீசின் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்துத்துவக் கும்பலோடு ஊடாடிக் கொண்டிருக்கும் போலீசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜார்ஜ் பொன்னையா கைதுக்கு அடிப்படையான தேவாலய விவகாரத்திலும், திருச்செங்கோடு விவகாரத்திலும் இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசின் மீது நடவடிக்கை எடுக்காமல் அங்கீகரித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

கர்ணன்
நன்றி
: பிபிசி

1 மறுமொழி

  1. இந்து மதவெறிக் கும்பலுக்குத் துணை நிற்கும் போலீசு மற்றும் அதிகாரிகள் மீது திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு வாய்ச்சவடால் அடிக்கும் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்குமா?

    ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக்கு எதிராக களத்தில் நின்று மக்கள் போராடத் தொடங்கினால், ஒருவேளை நடவடிக்கை எடுக்கலாம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க