ம்மந்தம், சம்மந்தி போன்ற சொற்கள் அதிகளவில் தமிழர்களால் பயன்படுத்தப்படும் வட மொழிச் சொற்களாகும். இவை தமிழ்ச் சொற்கள் அல்ல என்பன மட்டுமல்லாமல், பண்பாட்டு முறையில் இழிவான சொற்களுமாகும். பொதுவாக அச் சொற்கள் சம்மந்தம், சம்மந்தி எனத் திரிபடைந்த நிலையிலேயே இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைக் கிருபானந்த வாரியார் கூடத் தனது சொற்பொழிவுகளில் ஏளனம் செய்திருப்பார்; `சம்மந்தி` என்ற சொல்லில் `சம்` என்றால் `நல்ல` என்ற பொருள், `மந்தி` என்றால் குரங்கு என்ற பொருள், எனவே `நல்ல குரங்கு` என்பதே அதன் பொருள், அது சம்மந்தியல்ல `சம்பந்தி` என வாரியார் விளக்குவார். இத்தகைய திருந்திய வடிவமான சம்பந்தி, சம்பந்தம் என்பன கூட இழிவான சொற்களேயாகும். சம்பந்தம் ( Sambandham) என்ற சொல்லின் பண்பாட்டுப் பின்புலத்தினை விளங்கிக் கொள்ள நாம் கேரளாவுக்குத்தான் சென்று வர வேண்டும்.

“சம்பந்தம்” என்ற இச் சொல்லானது கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்னர்கள் ஏற்படுத்திய “தரவாடு” குடும்ப முறையுடன் தொடர்புடைய சொல்லாகும். கேரளா என்பது பழந் தமிழர்களின் நாடான சேர நாடேயாகும். சோழர்- பாண்டியர்களுக்குக் கூட இல்லாமல், சேரர்களை மட்டுமே பாடுவதற்காகப் “பதிற்றுப்பத்து” எனும் எட்டுத்தொகை நூலான ஒரு சங்க இலக்கியத் தொகுப்பு நூலொன்று கூட உண்டு.

படிக்க :
♦ தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
♦ தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்

முசிறிப் பட்டின அகழ்வாய்வும் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலுக்குச் சான்றாகும். அதே போல அசோகர் கல்வெட்டுகள் கூட, அக் கால சேர நாட்டின் இருப்புக்குச் சான்றாகவுள்ளது. இவ்வளவு வரலாறுகள் இருந்த போதும், புராணங்களோ பரசுராமர் கோடரியினை எறிந்து, நிலத்தைப் பிரித்து கேரளாவினை உருவாக்கியதாகவும், அதனை நம்பூதிரிப் பார்ப்பனர்களிடம் (பிராமணர்களிடம்) கொடுத்ததாகவும் சொல்லுகின்றன.

பத்தாம் நூற்றாண்டுக்குப் (CE 10th century) பின்னரே நம்பூதிரிகளின் பரவலான குடியேற்றம் சேர நாட்டில் இடம் பெறுகின்றது. அதற்கும் பின்னரே மலையாள மொழி பேசுபவர்களாகச் சேர நாட்டினர் மாறுகின்றனர். அதுவரை இந்த “சம்பந்தம்” என்ற உறவு முறை சேர நாட்டிலிருந்திருக்கவில்லை. குடியேறிய பார்ப்பனர்கள் திட்டமிட்ட வகையில் தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து, படிப்படியாக அங்கிருந்த தமிழினை “மலையாளம்” என வேறொரு மொழியாக மாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு தமிழிலிருந்து மலையாளத்தினைப் பிரித்தெடுத்தனை உருவகப்படுத்தியே  “பரசுராமர் கோடரி எறிந்து பிளந்த புராணக்கதை” தோற்றுவிக்கப்பட்டது. அதற்குப் பின்னரே நம்பூதிரிகள் ஆதிக்க சாதியாக உருவெடுத்தார்கள்.

“அந்தர்ஜன” நம்பூதிரி பெண்கள்

நம்பூதிரிகள் கேரளாவில் குடியேறும் போதே, இரண்டு திட்டங்களுடனேயே வந்திருந்தார்கள்; ஒன்று அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளல், இரண்டாவதாக அங்குள்ள ஏனையோரினை தமக்குக் கீழ் கொண்டுவருதல். அதற்காக நம்பூதிரிகளில் குடும்பத்தில் மூத்தவன் மட்டுமே திருமணம் செய்து கொள்வான் எனவும் ஏனையோர் அரசனுக்குச் சேவை செய்வதற்காகத் தமது குடும்ப வாழ்வினை துறப்பார்கள் எனவும் கூறி, அதனை நடைமுறைப்படுத்தி, அரசனின் நற்பெயரினைப் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்ததாக, அரசனின் படை வீரர்களாகவிருந்த நாயர்களைக் குறி வைத்தார்கள். படை வீரர்கள் குடும்பத்தவர்களாகவிருந்தால், அவர்கள் எவ்வாறு பற்றுறுதியுடன் போரிடுவார்கள், குடும்பம் என்று ஒன்றில்லாவிடில் துணிவுடன் போரிடுவார்கள், எனச் சொல்லி அரசனின் மனதினை மாற்றி, நாயர்களின் திருமணம் செய்யும் உரிமையினைப் பறித்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உறவுமுறையே  “சம்பந்தம்”, அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வீட்டு முறையே “தரவாடு”.

நாயர் சாதி ஆண்களின் மண உரிமை பறிக்கப்பட்டதால் , நாயர் பெண்கள் துணையின்றியிருந்தார்கள். ஏற்கெனவே நம்பூதிரிச் சாதியில் மூத்த மகனுக்கு மட்டுமே நம்பூதிரிப் பெண்களை மணக்கும் உரிமையிருக்கின்றது எனப் பார்த்தோம். ஏனைய நம்பூதிரி ஆண்களுக்கு இப்போது இணையின்றியிருந்த நாயர்ப் பெண்களை முதலில் மணந்து உறவு கொள்வார்கள். அவ்வாறு நம்பூதிரிகளால் உறவு கொள்ளப்பட்ட பெண்களையே பின்பு நாயர் ஆண்கள் உறவு கொள்ள முடியும். இத்தகைய நாயர் பெண்களுடன் நம்பூதிரிப் பார்ப்பான்களுக்குச் செய்யப்படும் மணமே “சம்பந்தம்” எனவும், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு முறையே “தரவாடு” எனவும் அழைக்கப்பட்டது.

நம்பூதிரி பெண்களின் ஒடுக்கப்பட்ட வாழ்நிலையை விளக்கும் அந்தர்ஜனம் நூல்

இத்தகைய “சம்பந்தம்” மூலம் இணையும் நாயர் பெண்கள் இரவில் மட்டுமே நம்பூதிரிக் கணவர்களுக்கருகில் செல்ல முடியும், பகலில் ஆறடி தள்ளி நின்றே பணிவிடை செய்ய வேண்டும். இங்கு பிறக்கும் குழந்தைகளும் சூத்திரர்களாகவே பார்ப்பனரால் கருதப்படுவார்கள். பார்ப்பனர் இவ்வாறு கருதினாலும் இவர்களோ தம்மைத் தாமே `ஆண்ட சாதி` எனவோ அல்லது `சத்திரியர்` எனவோ எண்ணிச் செயற்படுவார்கள்.

இங்குதான் மற்றொரு புராணக்கதையினையும் நினைவிற் கொள்ள வேண்டும். பரசுராமர் என்ற பார்ப்பனர் சத்திரியர்கள் எல்லோரையும் அழித்ததாகவும், பின்பு சத்திரியப் பெண்கள் துணையின்றிப் பார்ப்பனர்களுடன் புணர்ந்தே, அவர்களது தலைமுறை பெருகியது என்றும் செல்கின்றது அப் புராணக்கதை. அப் புராணக்கதையினை இங்கே பொருத்திப் பார்ப்பது நல்லது.

மேற்கூறியவாறு நம்பூதிரிகள் தரவாடு வீட்டு முறையில் நாயர்ப் பெண்களுடன் கொள்ளும் உறவுமுறையே “சம்பந்தம்” எனப்பட்டது. அதாவது நாயர் சாதிப் பெண்கள் நாயர் சாதி ஆண்களுடன் உறவு கொள்வதற்கு முன் நம்பூதிரிப் பார்ப்பானுடன் கொள்ளும் உறவே “சம்பந்தம்” எனப்பட்டது.

இந்த முறை பார்ப்பனப் பெண்களுக்குக் கூட கேடாகவே அமைந்தது; ஏனெனில் மூத்த பார்ப்பன ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக இருந்தமையால், பார்ப்பனப் பெண்கள் பல மனைவியரில் ஒருவராகவும் மூப்படைந்த பார்ப்பனர்களையே மணம் செய்ய வேண்டிய நிலையுள்ளவராகவும், காணப்பட்டார்கள். இங்கு பார்ப்பனப் பெண்கள் `அந்தர்ஜனம்` என்ற முறையில் வீட்டில் அடைபட்டே வாழ்ந்தார்கள். இது பற்றி எழுத்தாளர் தேவகி ( Devaki Nilayamgode ) எழுதிய “Antharjanam”  எனும் நூல் பல செய்திகளைத் தரும்.

இந்த இடத்தில்  “சம்பந்தம்” எனும் உறவு முறையின் உருவகப்படுத்தலாகவே திருமணங்களின் போது சொல்லப்படும் வடமொழி மந்திரம் ஒன்றினைக் கூட ஒப்பிட்டுப் பார்க்கலாம்; அந்த மந்திரம் “ஸோம: ப்ரதமோ…”(மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க).

இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாகப் பல தேவர்களுடன் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதி வருகின்றார்கள். இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள்.

இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினைப் பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். அந்த நடைமுறைப்படுத்தல்தான் “சம்பந்தம்” எனும் உறவு முறையாகும். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்” எனப்படும். (கெட்டு கல்யாணம் என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்).

கேரளாவிற்கு ஏன் போகவேண்டும்! தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்தகாலத்தில் ` இயற்பகை நாயனார்` என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர். சிலர், சிவனே பிராமணவேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள்.

இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்ந்த ஏனையோரினைச் சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

கேரளாவில் நடைமுறையிலிருந்த “சம்பந்தம்”, “கெட்டு கல்யாணம்” என்பனவற்றில் தமது பெண்களை நம்பூதிரிகளுக்கு முதலில் உறவு வைக்கக் கொடுப்பதனைப் பெருமையாக அக் காலத்தில் கருதியவர்களுண்டு. அதைப் பெரும் விழாவாகக் கொண்டாடியவர்களுமுண்டு. அந்தளவுக்கு மதம் அவர்களின் மூளையினை மயக்கியிருந்தது.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்
♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இம் முறைகள் முடிவுக் கொண்டு வரப்பட்டன. எனினும் வடமொழியிலான திருமண மந்திரங்களும், “சம்பந்தம்” போன்ற சொல்லாடல்களும் அந்த கேட்டின் எச்சங்களாக இன்றும் தொடர்கின்றன.

எனவே வடமொழி மந்திரங்கள் ஓதித் திருமணங்கள் செய்வதனைத் தவிர்த்து, தமிழ் முறைப்படி மண விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழில் வழிபாடு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழில் மண விழாக்களையும் நடாத்த மானமுள்ள தமிழர்கள் முன்வர வேண்டும்.

“சம்பந்தம்”, “சம்பந்தி” என்பதற்கான தமிழ்ச் சொற்கள் :

“சம்பந்தம்” என்பதைத் திருமணம்/ மண விழா/ இணையேற்பு விழா எனத் தமிழில் அழைக்கலாம். அதே போன்று “சம்பந்தி” என்பதனைத் தமிழில் “உறவாடி” என அழைக்கலாம். அதே போன்று கொண்டான்/ கொடுத்தான் என்ற சொற்களுமுண்டு.

“சம்பந்தம்”,  “சம்பந்தி” போன்ற சொற்களைத் தமிழாக்குவதன் மூலம் எமது மொழி வளர்ச்சியடைவது மட்டுமன்றி; எம் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டுக் கேடுகளையும் நீக்கிக் கொள்ளலாம். ஈழத்தில் ஒரு பழமொழி ஒன்றுண்டு: “தனக்கு எட்டாத சிங்களம், தன் பிடரிக்குச் சேதம்” என, அது வடமொழிக்கும் பொருந்தும். ஒரு கூடாத உறவு முறையினைக் குறித்த “சம்பந்தம்” எனும் சொல்லினை “நல்ல உறவு” என எம் மீது திணித்து விட்டார்களே !

வி.இ.குகநாதன்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க