ருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் மலைகளை ஒட்டி அமைந்துள்ளன கிருஷ்ணாபுரம், பூனைக்குண்டு, காட்டுக்கொள்ளை, போடூர் உள்ளிட்ட கிராமங்கள். அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கூடை பின்னும் கைத்தொழில்தான் அம்மக்களின் வாழ்வாதாரம்.

அவ்வாறு பின்னப்படும் கூடைகளை தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால், இன்றைக்கு கொரோனா ஊரடங்கு மற்றும் பிளாஸ்டிக் கூடை பயன்பாட்டால் இத்தொழில் சரிந்துவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

படிக்க :
♦ சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !
♦ என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !

மூங்கிலை பயன்படுத்தி ஆடு, மாடு வளர்ப்புக்கான பட்டி, கோழி வளர்ப்பு, காய்கறி கூடைகள், தானிய விதைப்பு கூடை, மீன் பிடிப்பதற்கான கூடைகள் என பல்வேறு கைவண்ணங்களில் கூடைகளை பின்னுகின்றனர் இந்த கைத்தொழில் கலைஞர்கள்.

இந்த கைத்தொழில் கலைஞர்களின் பின்னால் உள்ள வாழ்க்கை எத்தனை பேருக்கு தெரியும்? அதிகாலை 5 மணிக்கு மலைக்கு செல்லும் மக்கள் அந்தி பொழுதில்தான் வீடு திரும்புகின்றனர். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலையை கடப்பதற்கு சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் கடந்து ஒரு கட்டு மூங்கிலை தலையில் சுமந்துபடி பென்னாகரத்தில் ரூ.500-க்கு விற்பனை செய்கின்றனர்.

“வரும் வழியில் வனத்துறையினரின் கண்களில் மாட்டிவிட்டால் ரூ.200 அபராதம் போட்டு கத்தியும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். யானை கண்ணில் மாட்டிவிட்டால் உயிரும் மிஞ்சாது. தினமும் பயந்து பயந்துதான் காட்டுக்குள் செல்வோம்” என்று வேதனையோடு கூறுகிறார் சரோஜா. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் இந்த தருவாயில் ஒருவர் மட்டும் சென்றால் வாழ முடியாது என்ற நிலையில் பெண்களும் இந்த காட்டிற்குள் சென்று வருகிறார்கள்.

இந்த கூடைகளின் பயன்பாடு என்பது விவசாயத்தோடும், சிறுதொழிலோடும் பாரம்பரியத்தோடும் காலம்காலமாக பின்னிபிணைந்ததாக இருக்கிறது.

இயற்கை முறையில் தயார்செய்யப்படும் மூங்கில் குச்சிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்காமல் பிளாஸ்டிக்கை அனுமதித்தன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது.

This slideshow requires JavaScript.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பேன் என்று மாறி மாறி வரும் கட்சிகள் அறிவித்தாலும் பிளாஸ்டிக்கை ஒழிக்காமல், காடுகளை நம்பி பிழைப்பை நடத்தும் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டுகிறது.

காய்ந்த மூங்கில் குச்சிகளை வெட்டி பிழைப்பு நடத்தும் மக்களிடம் காடுகளை அழிக்கிறார்கள் என்று கூறி அபராதம் வசூலிக்கும் அரசு, ஈஷா யோகா நடத்தும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் சுமார் 2,000 ஏக்கர் வனப்பகுதியை வளைத்துப்போட்டு காடுகளை அழித்தால் அது கடவுள் பக்தி என்று வேடிக்கை பார்க்கிறது.

காடுகளை அழித்து கனிமவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்தால் அதற்கு பெயர் நாட்டின் வளர்ச்சி, என்கிறார்கள். என்ன ஒரு ஜனநாயகம்? இதுதான் இன்றைய சுதந்திர இந்தியா? அடித்தட்டு மக்களுக்கு விடிவில்லாமல் சுதந்திரம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது.

பு.ஜ செய்தியாளர், தருமபுரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க