தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?
இன்றுவரை தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் போட்டியே அதிகரித்திருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தெரிவு செய்யப்பட்டதை ஒட்டி திராவிடர் கழத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன் ஆகியோர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் சரண்ஜித் சிங் சன்னியை தாழ்த்தப்பட்டவர் என்றும் துப்புரவுத் தொழிலாளி என்றும் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதும் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தவர் என்பதும் (அவர் துப்புரவுத் தொழிலாளியா இல்லையா என்பது பற்றிய விவாதம் தனியே நடந்து கொண்டு இருக்கின்றது) எப்படி ஒருவரை சிறுமைப்படுத்தும்? இத்தகைய வாதங்களின் அடிநாதம், “ஆண்ட பரம்பரையை” எப்படி அவ்வாறு தாழ்த்தப்பட்டவர் என்று கூறலாம் என்பதே ஆகும்.
தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது மாறாக அட்டவணை (பட்டியல்) சாதியினர் என்பதையே பயன்படுத்த வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். தாழ்த்தப்பட்டவர் என்று கூறுவது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்றும் விளக்கம் கொடுக்கின்றனர்.
பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லாடல்களுக்கு பின்னால் இருப்பது பார்ப்பன எதிர்ப்பு அரசியல். இந்த வார்த்தைகளிலேயே அவர்கள் வேறு சிலரால் பிற்படுத்தப்பட்டனர் எனபதும் வேறு சிலரால் தாழ்த்தப்பட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் அனைவரும் பார்ப்பனிய – சனாதன தர்மத்தால் தாழ்த்தப்பட்டவர்களாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டனர்.
ஆங்கிலத்தில் இப்பிரிவினரைக் குறிக்கையில் Backward Class (பிற்பட்ட) , Most Backward Class (மிகவும் பிற்பட்ட),Scheduled Class (பட்டியலிடப்பட்ட) என்று எழுதப்படுகிறது. இந்த வார்த்தைகள் அம்மக்கள் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்டதையும், தாழ்த்தப்பட்டதையும் எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை. தாழ்ந்தவர் என்று குறிப்பிடுவதற்கும் தாழ்த்தப்பட்டவர் என்று குறிப்பிடுவதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.
2018-ம் ஆண்டு ஒன்றிய தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது, ஊடகங்களில் இனி தலித் என்ற வார்த்தைக்கு பதில் அட்டவணை சாதிகள் என்றே குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியது.(“Scheduled Castes” in place of word “Dalit”)
தற்போது தமிழகத்தில் தலித் அடையாள அரசியல் பேசும் பலரும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லக்கூடாது அது அம்மக்களை இழிவு படுத்துவதாகவும் அட்டவணை சாதியினர் என்றே அழைக்க வேண்டும் என்ற காரசாரமான விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ராஜராஜ சோழன் தங்களுடைய சாதியைச் சேர்ந்தவன் என்று பல ஆதிக்க சாதிகளின் சுவரொட்டிகளுக்கு போட்டியாக பள்ளர் சாதியைச் சேர்ந்தவர்தான் என்று சில ஆண்டுகளாகவே பதில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. நாங்களும் சாம்பவார் குலம் என்ற முழக்கங்கள் கிளம்புகின்றன. ஏன் தலித்துகள் மன்னர்களாக இருந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மன்னர்களாக இருந்தார்களா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. ஆண்ட பெருமை பேசுவதுதான் பிரச்சினை. அதுதான் சாதிய இறுக்கத்தைக் கட்டிக் காக்கிறது. அதுதான் தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடமும் தமக்குக் கீழே மற்றொரு சாதியை ஒடுக்கும் மனநிலையை வளர்க்கிறது.
நாமும் ஆண்ட பரம்பரை தான். நம்மை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நம்முடைய வரலாற்றை அழிக்கப்பார்க்கிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பள்ளி சேர்க்கைப் படிவத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று குறிப்பிடப்பட்டதை எதிர்த்து பல கண்டனக் குரல்கள் எழுந்ததை அடுத்து அப்படிவத்தில் அட்டவணைச் சாதியினர் என்று மாற்றப்பட்டது. இது குறித்து ஊடகத்தில் பேட்டியளித்த தலித் முரசு இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் “தாழ்த்தப்பட்டவர்” என்று கூறுவது தவறல்ல என்றதற்கு புனித பாண்டியனை சாதி வெறியன் என்று கடுமையாகச் சாடினர்.
தலித்துகள் ஜமீன்களாகவும், குறுநில மன்னர்களாகவும் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கத்தில் இருந்ததாகவும், கடந்த 50 – 60 ஆண்டுகளில்தான் பின்தள்ளப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதனால்தான் தாழ்த்தப்பட்டவர் என்று கூறக் கூடாது என்கின்றனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறக் கூடாது என்பது ஜனநாயக் கோரிக்கையா?
பிரம்மனின் தலை, நெற்றி, தோள், தொடை என எப்பகுதியிலும் பிறக்காதவர்களே தீண்டத்தகாதவர்கள் என்கிறது மனுதர்மம். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது காந்தியோ தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜன்(பெருமாளின் புதல்வர்கள்) என்றழைத்தார்.
தலித் என்பது சமஸ்கிருத சொல். அச்சொல்லுக்கு பொருள் வர்ணாசிரம தர்மத்தின் படி, divided, spilt, broken, scattered. தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்ட மக்களுக்கு பார்ப்பனியம் அழைத்த பெயர் தலித். அவ்வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோன சூழலில் 1880-களில் சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா பூலே அவர்கள் மீண்டும் பயன்படுத்தியுள்ளார். வடஇந்தியாவுக்கு அது பொருந்தலாம்.
தமிழகத்தின் திராவிடர், ஆதி திராவிடர் ஆகிய சொல்லாடல்கள் ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பார்ப்பனியத்தை அடையாளமான ஆரியர்களுக்கு எதிரான கலகச் சொல்லாக அது இருந்தது.
1932-ல் முதன்முறையாக தலித் என்ற வார்த்தை பூனா ஒப்பந்தத்தில் பயன்படுத்தபட்டதாகவும் தலித் என்றால் உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற பொருளில் அவ்வொப்பந்தத்தில் பொருள் கொள்ளப்பட்டதாகவும் சுக்தோ தோரட் என்ற எழுத்தாளர் தெரிவிக்கிறார்.
பூனா ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பொருள் கொள்ளும்படி பார்த்தால் ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட என்ற சொல் சரியாகத்தானே இருக்கிறது. பின்னர் எதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லக் கூடாது?
குறிப்பாக ஆங்கிலேயர்களால் Depressed Class என்று குறிப்பிடப்பட்ட வார்த்தை மொழியாக்கத்தில் ஒடுக்கப்பட்ட என்றானது. அது காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட என்று மாற்றம் பெறுகிறது.
ஒவ்வொரு இனக்குழுவும் தங்களை எப்படி வகைப்படுத்தி, எப்படி அழைக்க வேண்டும் என்று கோருவதில் உள்ள ஜனநாயக உரிமையை ஏன் மறுக்கிறீர்கள்? என்கின்றனர் சிலர். பள்ளர், வாதிரியான் உள்ளிட்ட 7 சாதிப் பிரிவுகள் இனி தேவேந்திரர் என்று அழைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது. இது ஒட்டு மொத்தமாக அம்மக்களில் பெரும்பான்மையினரின் கோரிக்கையா என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை.
பள்ளர் சாதி சங்கங்கள் பலவும் பார்ப்பனியமயமாகியிருப்பதால், ஏற்கெனவே, ஆண்ட பெருமை பேசும் காரணத்தாலும் அட்டவணையிலிருந்து வெளியேற்றம் என்ற கோரிக்கையை அச்சமூகத்தில் உள்ள பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவினர் முன்வைத்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக தேவேந்திரர் என்ற பெயர் மாற்றம் நடைபெற்றுள்ளது.
நாங்கள் ஆண்ட பரம்பரை; அடிமைகள் எல்ல என்பதே அவர்கள் கூறும் வாதத்தின் மையம். “எங்களைப் போன்ற ஆண்ட பரம்பரைகளை ’அடிமைச்’ சாதிகளோடு ஒரே பட்டியலில் வைத்திருக்காதே” என்பதுதான் மறைமுகமாக அவர்கள் வைக்கும் கோரிக்கை. வாதிரியான் சாதியினர் தங்களை தேவேந்திரர் பிரிவில் சேர்க்கக் கூடாது என்று போராட்டம் செய்ததாக செய்தி வெளியானது. சாதிவாரிக் கணக்கெடுப்பு விரிவாக எதுவும் நடத்தாமல் வைக்கப்படும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை எந்த வர்க்கத்தின் நலனுக்கானது?
அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல், தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட சாதியினரில் படித்து பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினர், தாங்கள் பிறந்த சாதியினரை பார்ப்பனியத்தில் இருந்து விடுதலை செய்வதை அவர்களின் கடமையாகக் கருதுவதில்லை.
மாறாக, தங்களை பார்ப்பனர்களாக்கிக் கொள்வதிலும் ஆண்ட சாதி பெருமை பேசுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட வர்க்க மாறிகளால்’ சாதி ரீதியாக இழிவுப்படுத்தப்பட்டு பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை உணர முடியாது.
ஒரு தனிமனிதன் பொருளாதார ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்வதில் குறிப்பிட்ட அளவு வரை எவ்விதத் தடையும் இல்லை. இருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி பொருளாதார ரீதியாக வளரலாம். ஆனால் சமூக ரீதியாக, ஒரு மனிதன் தான் நினைத்தாலே சாதியிலிருந்து வெளியேறி முன்னேறிய சாதியாக ஆகிவிட முடியுமா?
பட்டியலில் இருந்து விடுதலையை கேட்போர் அதே அளவுள்ள இடஒதுக்கீட்டு உள்ள பிரிவை அல்லவா எதிர் பார்க்கின்றனர். பட்டியலில் இருந்து விடுதலை என்பதே ஆண்ட சாதி பெருமையில் தொடங்கி தலித் சமூகத்தில் ஒரு பிளவுக்கு கொண்டு போய்விட்டுள்ளது. ஆண்ட சாதி பெருமை பேசும் பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களை காலங்காலமாக ஒடுக்கிய பார்ப்பனியத்திற்கு சேவை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்று வரையிலும் தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களே அவற்றின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், ஆதிக்க சாதிவெறி அதிகரித்திருக்கும் சமீப காலகட்டத்தில் அதைப்பற்றிய வாதங்களோ, அதற்கு எதிரான போராட்டங்களோ இல்லாமல் தம்மை மேல் சாதியாக காட்டிக் கொள்வதற்கான பேரங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நடைமுறைகள் இந்த சாதிய சமூகத்தை – பார்ப்பனிய கட்டமைப்பை – பாதுகாப்பதற்கே உதவி செய்யும்.
தாழ்த்தப்பட்டவர் / பஞ்சமர் / அரிஜன் / அட்டவணை சாதியினர்… இன்னும் எத்தனை பெயர் மாற்றம் நடைபெற்றாலும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் சாதியப் பிரிவினையும், பாகுபாடும் இட ஒதுக்கீட்டுக்கான சட்டக் காகிதங்களில் குடியிருக்கவில்லை. இந்தச் சமூகத்தில் சர்வமுமாக வியாபித்திருக்கிறது.
உண்மையான எதிரியான பார்ப்பனியத்துக்கு எதிராக அணி திரளக்கூடாதென்பதற்காக பொய்யான கௌவரத்தை உருவாக்கி அதன் மீது மக்களை பலி கொடுக்கிறார்கள்.
தலித் மக்கள் ஒருமித்த பார்ப்பன எதிர்ப்பு சிந்தனை கொண்டிருப்பதுதான் பார்ப்பனியத்துக்கு பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக வடஇந்தியாவைப் போல தலித் சாதியினர் பெரும்பான்மையாக தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கு / செல்வாக்கிற்கு உட்படவில்லை. அதைத் தகர்ப்பதற்கே ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடையே ஆண்டசாதிப் பெருமை விதைக்கப்படுகிறது.
அதுவே தூண்டிவிடப்பட்டு பள்ளர், பறையர், அருந்ததியர், வள்ளுவர் என உட்பிரிவு முரண்பாடுகளை தூண்டிவிடுகிறது. மோடி எவ்வித ஆதாயமுமின்றியா தேவேந்திரகுல சாதிப் பெருமையை பேசினார். சீமானும் பறையர் சாதிப் பெருமையை தூக்கிப் பிடிப்பதில் காரணமில்லாமல் இல்லை.
தமிழகத்தை பல கூறுகளாக்குவது காவி கும்பலுக்கு மட்டுமல்ல கார்ப்பரேட்டுகளுக்கும் மிகுந்த தேவையானதாக இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் பற்றிப் பரவுவதற்கே வர்க்க ஒற்றுமை அடிப்படையாக இருக்கிறது. சாதியரீதியாக மக்களைப் பிரித்து ஆதாயம் பெறுவதில் பார்ப்பனியத்திற்குச் சளைத்தது அல்ல கார்ப்பரேட் ஒடுக்குமுறை.
பார்ப்பனிய மற்றும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடையாக இருக்கப்போவது ஆண்ட சாதி கருத்துக்களும், அதற்குத் துணைபோகும் சாதி அமைப்புக்களும் அதன் கருத்துக்களுமே.