மிழகத்தில் 27.10.2021 அன்று ரூ.200 கோடி மதிப்பீட்டில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் நோக்கமாக கூறப்படுவது கொரோனா நோய் தொற்றினால் பள்ளிக் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்யவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான் – SSA) சார்பில் தன்னார்வலர்களைக் கொண்டு மாலை 5 முதல் 7 மணிக்குள் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவற்றின் மூலம் கல்வி கற்றுக் கொடுப்பது என்று அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் முதல் கட்டமாக விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமாரி ஆகிய 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 6 மாத காலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 86,550 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பித்துள்ளார்கள். மேலும், தன்னார்வலர்களாக பணிபுரிய வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 தருவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தமிழக அரசின் சாதனையாக அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் காட்டப்படும் அதே சமயத்தில் கணிசமான அளவில் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து இது புதிய கல்விக் கொள்கையிலிருக்கும் அம்சங்களில் ஒன்று என்றும், அரசு பள்ளிகளை பலவீனபடுத்தக் கூடியது என்றும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மேலும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் இது ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்விக் கொள்கையை பரப்புவதே என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
படிக்க :
கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !
இது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக இருக்கும் திட்டம் தான் என்ற குற்றச்சாட்டுக்கு, திமுக-வின் செய்தித் தொடர்பாளர் இராஜீவ் காந்தி வியக்கத்தகு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசுதான் ரூ. 200 கோடி செலவழிக்க இருப்பதாகவும், ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி, அதனடிப்படையில் இது புதிய கல்விக் கொள்கையின் அம்சம் அல்ல என்று விளக்கமளிக்கிறார்.
புதியக் கல்விக் கொள்கையின் அங்கமா இல்லையா என்பதை, பணம் யாரிடமிருந்து செலவழிக்கப்படுகிறது என்பதிலிருந்து முடிவு செய்ய முடியும்? திட்டத்தின் மூலக் கருத்து புதிய கல்விக் கொள்கையோடு ஒத்துப் போகிறது என்பதிலிருந்துதானே முடிவு செய்ய முடியும். இதற்கான பதிலை சொல்லாமல் மழுப்புகிறது, திமுக. இல்லம் தேடி  வரும் கல்வி எனும் இத்திட்டமே ஆர்.எஸ்.எஸ்.-ன் நிகழ்ச்சிநிரல் தான் என்பது குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக இதைச் செய்ததாக திமுக முன் வைக்கும் வாதத்திற்கு பதிலளித்து விடுவோம்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மாநில அரசின் நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதன் மூலம் தாம் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் காட்டிக் கொள்கிறது திமுக அரசு. உண்மையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலைமை என்ன, என்பதிலிருந்து திமுக, அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தான்  இதைச் செய்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 37,579 அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் வெறும் 12,382 தனியார் பள்ளிகளில், 64,15,398 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஒப்பீட்டில் இருந்து அரசு பள்ளிகளின் மோசமான நிலைமையை புரிந்து கொள்ள முடியும். (இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்கப்படவில்லை)
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்.
அரசுப் பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே மாணவர்களுக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், அதற்குப் பணம் செலவழிக்காமல், புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சத்தை மட்டும் நடைமுறைப்படுத்த ரூ. 200 கோடி மாநில அரசு நிதியை ஒதுக்கியிருப்பது மிகப்பெரிய துரோகம். 
மேலும்  ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து முடித்து வேலைக்காக காத்துக்கிடக்கும் பல இலட்சம் இளைஞர்களுக்கு இனி அரசு ஆசிரியர் பணி கிடையாது என்பதையே இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நமக்குத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே, புதிய கல்விக்கொள்கை 2019-ன் வரைவிறிக்கையில்  ஆசிரியர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில்தான் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருப்பதை நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
இது தவிர கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவின் காரணமாக, ஏழை மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு மாணவர்களை எவ்வாறு பள்ளிக்கு மீண்டும் கொண்டுவருவது குறித்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிதாக இணைந்துள்ள மாணவர்களை தக்கவைக்கவும், கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களை தடுத்து நிறுத்தவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து புதிய நியமனங்களையும் செய்திருக்க வேண்டும்.
ஆனால், திமுக அரசோ, ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருசேர வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்திருக்கிறது. வகுப்பறைக்கு வெளியில் மாணவர்களை தள்ளி ஆசிரியர்கள் இடத்தில் தன்னார்வலர்களை நிரப்புகிறது. பள்ளிக் கல்வியின் அறிவியல் அடிப்படையை இது தகர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கையின் நோக்கமும் அதுதான்.
முறையாக பி.எட், எம்.எட், ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்கள்  மாணவர்களுக்கு பாடம் எடுத்தே கற்றல் குறைபாடு நிகழ்கிறது எனில், இத்திட்டதின் படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12 வகுப்பு படித்தவர் போதுமென்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருந்தால் போதும் என்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனும்போது கற்றல் குறைபாட்டை இது அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைக்காது.
மேலும், தன்னார்வலர்களை எவ்வாறு அளவிடுகிறீர்கள், அவர்கள் என்ன கற்றுத் தருகிறார்கள் என்று எவ்வாறு கண்காணிப்பீர்கள்..? பள்ளிக்கு வெளியே நிகழும் கல்வி மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும், ஒரு சில மணிநேரத்தில் என்ன கற்றுக்கொடுப்பீர்கள் ? ஆகிய கேள்விகளுக்குத் தெளிவான பதில் எதுவும் திமுக-விடம் இல்லை.
அகஸ்தியா நிறுவன தலைவர்
ஆர்.எஸ்.எஸ். கும்பல் தன்னார்வளர்களாக மக்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் போய்ச் சேர இது வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலும் கேலிக் கூத்தானதாகவே திமுக தரப்பிடமிருந்து வருகிறது. பெரும்பாலும் பெண்களைச் சேர்த்துள்ளார்களாம். மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்களாம். இதெல்லாம் ஒரு பதில் என்று கூறுகிறார்கள். திருடனை எப்படிக் கண்டுபிடிப்பாய் என்ற கேட்டால், முகத்தில் மருவும், கீறலும் இல்லாதவன் திருடன் இல்லை என முடிவு செய்வேன் என்று பதிலளிக்கிறது திமுக.
அரசு கல்வி நிறுவனங்களை ஒழித்துக் கட்டி கல்வியை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் வகையிலும், அதேசமயம் தனது இந்துராஷ்டிர கனவிற்கேற்ப இந்துத்துவ நஞ்சை விதைத்து மறுவார்ப்பு செய்யும் வகையிலும் காவி – கார்ப்பரேட்-ன் வீரிய ஒட்டுரகமாகத்தான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளது.
தமிழகத்தில் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் இக்கல்விக் கொள்கையின் அம்சங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட Agastya International Foundation என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு 12 மாவட்டங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இதை எதிர்த்தது.
தேர்தலுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த ‘திராவிட ஸ்டாலின்’ அரசு ஆட்சிக்கு வந்தபின் செப்டம்பரில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில்  நடத்த அனுமதி வழங்கியதோடு, அந்நிறுனத்திற்கு “ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சுற்றறிக்கையும் அனுப்பியது. மேலும், 18 மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்கவும் அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்தது.
அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய இந்த ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
மோடி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை – 2020-ல் குறிப்பிடப்பட்டிருக்கும், பள்ளிக் கல்வி குறித்தான கருத்துக்களில் பக்கம் 8-ல் உள்ள (தமிழ் – பக்கம் 13) “அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் : கற்றலுக்கு தேவையான அவசர மற்றும் அவசியமான முன் நிபந்தனைகள்” என்னும் தலைப்பு மற்றும் பக்கம் 10-ல் உள்ள (தமிழ் – பக்கம் 15) “இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் மற்றும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்தல்” ஆகிய தலைப்புகளின் கீழ் இந்தப் பிரச்சனைகளை கலைவதற்கான வழிமுறைகளாக சொல்லப்பட்டவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழக அரசின் “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் நோக்கமும் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமும் இதுதான் என்பது அப்பட்டமாகத் தெரியவரும்.
இதையே, பயிற்சி பெற்ற உள்ளூர் சமூக தன்னார்வலர்கள் பங்கேற்பதை எளிமைப்படுத்துவதன் மூலம் கற்றல் குறிபாட்டை சரி செய்ய இயலும் என்பதாகக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ் கல்விக் கொள்கை அறிக்கை. ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கை –> புதிய கல்விக் கொள்கை –> வீடு தேடிவரும் கல்வி என்ற கோட்பாடு இங்கு தெளிவாகிறது. 
இத்திட்டங்களில் குறிப்பிடப்படும் தன்னார்வலர்கள் என்பவர்கள் யார்? அந்த தன்னார்வலர்களாக நியமிக்கப்படுவார்கள் அவர்கள் என்ன கற்றுத் தருவார்கள்? மேற்குறிப்பிட்ட அகஸ்தியா இண்டர்நேசனல் போல தயார் மாநிலம் முழுவதும் தயார்நிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சேவை அமைப்புகளும், அதனைச் சேர்ந்த ஸ்வயம்சேவக்குகளும் அதிகாரப் பூர்வமாக இளம் பிஞ்சுகளைச் சென்றடைவார்கள். 
இதைத் தான் திராவிட மாடல் கல்வி என்கிறார் ஸ்டாலின். இதை குலக்கல்வி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
ஏற்கனவே, தமிழகத்திற்கென புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கு புதிய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் என சட்டப்பேர்வையில் திமுக தெரிவித்திருந்தது.  தற்போதைய இல்லம் தேடி வரும் கல்வி முறையைப் பார்க்கும் போதே, அமைக்கப்படப்போகும் குழுவின் இலட்சணம் தெரிந்துவிடும். அவை வழங்கப் போகும் பரிந்துரைகளை ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்விக்கொள்கைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். .
ஏன் அவ்வாறு கூறுகிறோம் எனில், கடந்த மே மாதம் அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ‘கலந்து கொள்ளாதது குறித்து பேசிய பள்ளிக் கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இது புறக்கணிப்பல்ல” “கலந்து கொள்ளாமைதான்” “இதை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, அவர்களுடன் நாங்கள் சண்டையிட விரும்பவில்லை” புதிய கல்விக் கொள்கையில் “திருத்தம் வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
தேர்தலுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்ட தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்பு அதில் திருத்தம் வேண்டும் என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது மட்டுமல்லாமல் அதை அமல்படுத்தியும் வருகிறது.
அகஸ்தியா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பியபோது அன்பில் மகேஷ் பொய்யாமொழி “மாணவர்களிடத்தில் அவர்கள் கொள்கையை திணிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று தி.மு.க. தொண்டனும் காறி உமிழத்தக்க வகையிலான பதிலைக் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு மேல் அதிகாரம் கொண்டவராக ஆணையர் என்ற பதவியில் ஐ‌.ஏ‌.எஸ். அதிகாரிகளை நியமித்தது. ஆர்.எஸ்.எஸ் கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சங்களில் இதுவும் ஒன்று. ஆசிரியர்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளி கல்வி ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு செல்வதை இது குறிக்கிறது.
ஆனால், ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலினோ, எடப்பாடி செய்ததற்கு ஒருபடி மேலே சென்று பள்ளிக் கல்வி இயக்குனர் என்ற பதவியையே காலிசெய்து அனைத்து அதிகாரங்களையும் பள்ளி கல்வித்துறை ஆணையர் கைகளில் குவித்து இந்துராஷ்டிரத்திற்கு சிவப்புக் கம்பளத்தை விரித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில் சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் “கலா உத்சவ்” என்ற பெயரில் பார்ப்பனிய பண்பாட்டை குழந்தைகளிடம் விதைக்கும் போட்டிகளை நடத்த ஆணையிட்டுள்ளது.
படிக்க :
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
அடுத்து புதிய கல்விக் கொள்கையின் படி 3,5,8,10 ஆகிய வகுப்புகளுக்கு நவம்பர் 12-ல் அடைவுத் தேர்வு (NAS Exam – National Achievement Survey) வைப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் கல்விக் கொள்கையில் பிரிவு 4.41-ல், “நாட்டில் கற்றல் விளைவுகளின் சாதனைகளை கண்காணித்தல் மற்றும் பள்ளி வாரியங்களை மதிப்பீட்டு முறைகளை மாற்ற ஊக்குவித்து உதவுதல், மாணவர்களுக்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதலை அமைப்பதற்கான அடிப்படை நோக்கங்களை பூர்த்தி செய்கிறது”  என NAS பற்றி புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சி‌.பி‌.எஸ்‌.இ.-ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைகளால் வடிக்கப்பட்டு ஒன்றிய பாசிச அரசால் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை அந்தப் பெயரை மட்டும் எடுத்துவிட்டு வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தி வருகிறது திமுக. வெட்கமில்லாமல், திராவிட மாடல் என்றும் இதனைப் பீற்றிக் கொள்கிறது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிட்டு, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஏஜெண்டாக பொறுப்பேற்று புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.
ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் தி.மு.க பல்வேறு தளங்களில் சமரசமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானவை மட்டுமல்ல அபாயகரமானவையும் தான், பள்ளிக் கல்வித்துறையில் அரங்கேறி வரும் இந்த மாற்றங்கள் !

தேவா
செய்தி ஆதாரம்: Hindu Tamil

2 மறுமொழிகள்

  1. இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையின் அங்கமே என பு.க.கொ. அறிக்கையிலிருந்தே மேற்கோள் காட்டி எழுதியிப்பது சிறப்பு..!
    திமுக-வின் கொண்டை வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.

  2. # ரூ. 200 கோடி செலவழிக்க இருப்பதாகவும், ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி, அதனடிப்படையில் இது புதிய கல்விக் கொள்கையின் அம்சம் அல்ல என்று விளக்கமளிக்கிறார்#

    இதுக்கு பேர்தான் உங்க விரலை வைத்தே உங்கள் கண்ணை குத்துவது என்பது

Leave a Reply to ashak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க