க்சல் இயக்கத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக கொக்கரிக்கிறார், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பட்டீல். கட்சிரோலி மாவட்டத்தின் வனப்பகுதியில் 26 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதை, எப்போதையும் விட மிகப் பெரிய நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான க்யாராபட்டி காடுகளில் கடந்த சனிக்கிழமை (13-11-2021) காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 26 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவரான, தோழர் மிலிந்த் தெல்தும்டே கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு செய்திகள் கூறுகின்றன. தெல்தும்டேவின் மரணத்தைத் தான் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாகக் கூறி கொக்கரிக்கிறார், மராட்டிய உள்துறை அமைச்சர்

மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்காக தீனி போட்டு வளர்க்கப்படும் ஏவல்படையான சி.60 கமாண்டோ பிரிவினர் மற்றும் கட்சிரோலி போலீசு இணைந்து நடத்திய கூட்டு தாக்குதல் நடவடிக்கையில் தான் 26 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

படிக்க :

சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !

இந்த திட்டமிட்ட பச்சைப் படுகொலைகளை நிகழ்த்துவதற்கு 500-க்கும் மேற்பட்ட போலீசு மற்றும் சி.60 கமாண்டோ படைப் பிரிவை குவித்ததாகச் சொல்கிறது மஹாராஷ்டிரா போலீசு. ஒடுக்கப்படும் பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளை கொல்வதற்கு இவ்வளவு படைகளையும் செலவையும் அரசு செய்வதற்கான அடிப்படை நோக்கம், இந்திய வனப்பகுதிளிலும், மலைகளிலும் உள்ள பழங்குடியின மக்களை விரட்டிவிட்டு, அப்பகுதிகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது தான்.

தோழர் மிலிந்த் தெல்தும்ப்டே

“பசுமை வேட்டை ” என்ற பெயரில் மத்திய இந்தியாவில் உள்ள நியாம்கிரி மலை மற்றும் அதன் சுற்றுவட்டார தாண்டேவாடா வனப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு பூமிக்கடியில் குவிந்து கிடக்கும் பல இலட்சம் கோடி கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் பணியை 2008-ம் ஆண்டே தீவிரமாக்கியது அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு. அதற்கு உடந்தையாக வெறி கொண்டு செயல்பட்டது சட்டீஸ்கர் மாநில அன்றைய ராமன்சிங் அரசு.

அச்சமயத்தில் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களது குடிசைகளை எரித்து, பொருட்களைச் சூறையாடி, பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி நரவேட்டையாடின, துணை இராணுவப் படைகள். அவற்றை எதிர்த்துப் போராடி தாண்டேவாடா வனப்பகுதி மக்களைக் காத்து நின்றது மாவோயிஸ்ட்டுகள் தான்.

அன்றிலிருந்து சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீஹார், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணி என்ற பெயரில் அவ்வனப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் வாழும் மக்களை துன்புறுத்தியும் கொன்றொழித்தும் வருகின்றன, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஏவல்படைகள்.

உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படும் மக்களின் பக்கபலமாக நின்று போராடிவருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மக்களுக்காக போராடியவர்கள் 26 பேரைக் கொன்று விட்டதாக இன்று குதூகலிக்கிறது கார்ப்பரேட்டுகளின் ஏவல்படை. இவர்கள் ஒரு மிலிந்த் தெல்தும்டேவை கொன்று விடலாம். 26 பேரைக் கொன்றதை குதூகலிக்கலாம். மூலதனத்தின் ஒடுக்குமுறை நீடிக்கும் வரை அது தன்னை ஒழித்துக் கட்டுவதற்கானவர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் வரலாறு !

கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க