மதுரை : காளாங்கரை ஆக்கிரமிப்பு – பெரும் துயரத்தில் மக்கள் | வீடியோ

காளாங்கரை ஆக்கிரமிப்பு, காளாங்கரையை முறையாகத் தூர்வாராமல் கண்டுகொள்ளாமல் விட்டது, அதில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி கழிவுநீரைக் கலப்பது என நீர் நிலை ஆக்கிரமிப்பு சர்வசாதாரணமாக நடந்துள்ளது.

துரை அனுப்பானடி சிந்தாமணி 56-வது வார்டு இந்திரா காலனி பகுதியில் தொடர் மழையின் காரணமாக காளாங்கரை நிறைந்து குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீர் அதிகமாக தேங்கியதால் அப்பகுதி சிறுவர்கள் பள்ளிக்குக் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
மின்கம்பங்கள் சாய்ந்து காளாங்கரையிலேயே விழுந்து கிடக்கின்றன. இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் பொருட்டு மாநகராட்சிக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்தனர் இந்திரா காலனி பகுதி மக்கள். ஆனால், மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 30/11/2021 அன்று வீட்டின் அருகே தேங்கியிருந்த சாக்கடை கலந்த மழைநீரில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து மயிரிழையில் உயிர் தப்பியது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள், சிந்தாமணி பகுதியில் 01/12/2021 அன்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசு அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தது. ஆனால், ”மாவட்ட ஆட்சியர் நேரில் வந்தால்தான் நாங்கள் கலைந்து செல்வோம்” என அப்பகுதி மக்கள் விடாப்பிடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசுத்துறை அதிகாரிகள் “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரச் சொல்கிறேன்” என்று வாக்குறுதி அளித்த பிறகே மக்கள் கலைந்து சென்றனர்.
படிக்க :
ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !
அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
ஆனால், மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களின் கோரிக்கையை கேட்க வரவில்லை; மாறாக ஆர்.டி.ஓ., தாசில்தார் மட்டுமே நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது, குடியிருப்பு பகுதியில் இவ்வளவு தண்ணீர் வருவதற்கு கால்வாய் ஆக்கிரமிப்பும், காளாங்கரை சிதிலமடைந்து இருப்பதும் தான் காரணம் என சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் பகுதி மக்கள். ஆனால், அதிகாரிகள் எவரும் இவற்றை காதில் வாங்கவில்லை என்கின்றனர் இந்திரா காலனி மக்கள்.
பாதிப்பை பார்வையிடச் சென்ற அரசு ஊழியர்கள் சக ஊழியரிடம் “சாக்கடை தெருவிற்கு வாருங்கள்” என அடையாளக் குறியாக கூறுமளவிற்கு அந்த பகுதி இருக்கிறது என்பதோடு, அப்பகுதியையும் மக்களையும் இழிவாகக் கருதுகிறார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதி என்பதினால் அப்போது 56 குடும்பங்களை உள்ளடக்கிய இப்பகுதியை இந்திரா காலனி என பெயரிடப்பட்டது. இங்கு தற்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன.
அப்பகுதியை ஒட்டியுள்ள காளாங்கரை 30 அடி அகலமும் இருபக்கம் சாலையையும் கொண்டது. இது மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஆரம்பித்து கமுதி வரை செல்கிறது. இந்த காளாங்கரை, சுமார் 40 வருடங்களுக்கு முன் விவசாயத்திற்கான நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
அப்படிப்பட்ட காளாங்கரை தற்போது வேலாயுதம் வாத்தியார் என்பவரின் ஆக்கிரமிக்கப்பட்டு 10 அடியாக சுருக்கப்பட்டு உள்ளது என்கின்றனர் பகுதி மக்கள். இந்த வேலாயுதம் வாத்தியார் என்பவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழிலுக்காக காளாங்கரை கரைப்பகுதியை மூடி காளாங்கரை உட்பகுதி வரைக்கும் ஆக்கிரமிப்பு செய்து பிளாட் போட்டு விற்றுள்ளார். இதனால் 30 அடியாக இருந்த காளாங்கரை தற்போது 5 அடி முதல் 10 அடியாக மிகவும் சுருங்கிக் காணப்படுகிறது.

இதன் காரணமாக பெருமழை பெய்தால், மழைநீர் சரிவர காளாங்கரை வழியே வெளியேறாமால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றினாலே மழைநீர் ஊருக்குள் வராது என்று ஊர்ப் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் கழிவு நீரும் இந்த காளாங்கரையில் தான் கலக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் சாக்கடையும் மழை நீரும் கலந்து எங்கள் குடியிருப்பு பகுதியை சூழ்வதினால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகக் கூறுகின்றனர், பகுதி மக்கள்.
இதனை விவரித்த முதியவர் ஒருவர், “இந்த காளாங்கரை புலியூர் என்னும் கிராமத்தையும் இணைத்துச் செல்கிறது. எனக்குத் தெரிந்து 40 வருடங்களுக்கு முன் அப்பகுதியில் விவசாயம் மிகச் செழிப்பாக இருந்தது. காளாங்கரை ஆக்கிரமிப்பாலும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாராதாலும், பராமரிப்பு இல்லாததாலும், மேலும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் கழிவுகளை கலக்க விடுவதாலும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதியில் இன்று விவசாயமே இல்லாமல் போனது” என கூறினார்.
விவசாயமும், விவசாயிகளும் அழிவதற்கு இதுமாதிரியான ஆக்கிரமிப்பாளர்களும் காரணமாக உள்ளது, என்பது இந்த பெரியவரின் குமுறலில் இருந்து தெரிகிறது. தான் வாழும் பகுதிக்கு அப்பால் உள்ள சக உழைப்பாளிகளை நேசிக்கும் சமூக உணர்வும், அக்கறையும் உழைக்கும் மக்களிடையே இயல்பாக இருக்கும் ஓர் பண்பு.
ஆனால், மக்களுக்காகவே வேலை செய்கிறோம் என்று வாய்ச் சவடால் அடிக்கும் அரசு அதிகாரிகளிடமோ இம்மாதிரியான சமூக அக்கறை துளியும் இருந்ததில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
படிக்க :
மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை
மக்களின் அன்றாட பிரச்சினைகளை, கோரிக்கைகளை குறைந்தபட்சம் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்லக் கூட மக்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் வருவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களேதான், தன் பகுதி பிரச்சனைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது. அதனடிப்படையில்தான் மதுரை, இந்திரா காலனி மக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்திரா காலனி குடியிருப்பு பொதுமக்களின் கோரிக்கைகளான :
தமிழக அரசே!, மதுரை மாநகராட்சி நிர்வாகமே!
30 அடி காளாங்கரையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்று!
காளாங்கரையை முறையாக தூர்வாரி சிமெண்ட் தளம் அமைத்திடு!
சாக்கடை, குடிநீர் தொட்டி, சாலைகள் மற்றும் கழிப்பறைகளை உடனே அமைத்திடு !
ஆக்கிரமிப்பு என்பது வலிமையுள்ளவன் வலிமை குன்றியவனிடம் உள்ள உடமைகளை சுரண்டுவது; இது எங்கும் எந்த இடத்திலும் நடைபெறலாம். இன்று இவர்களுக்கு நாளை நமக்கு என்பதை நாம் உணர வேண்டும். எங்கோ ஒரு மூலையில் சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் வழக்கத்தை பொதுவானதாக மாற்றும்போதுதான், சுரண்டலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க