விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு, தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மோ(ச)டி அரசானது குரல் வாக்கெடுப்பு மூலம் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இச்சட்டங்களை நிறைவேற்றியது போல, திரும்பப் பெறும்போதும் எவ்வித விவாதத்தையும் அனுமதிக்காமல் திரும்பப் பெற்றுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில், போராடிய விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கித் தாக்குதல், கண்ணீர்ப் புகை, தடியடி, கைது, அமைதியாக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றது என எண்ணற்ற தாக்குதல்களைத் தொடுத்தது மோடி அரசு. பாசிச அரசின் கொடும் ஒடுக்குமுறைக்கும் தாக்குதல்களுக்கும் சுமார் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 19 அன்று திடீரென தொலைக்காட்சி முன் தோன்றி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற விதத்தில், விவசாயிகளுக்கு சிறப்புவாய்ந்த வேளாண் சட்டங்களைத் தம்மால் புரியவைக்க முடியவில்லை என்றும் தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் போராட்டக் களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் தங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் மோடி அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆறு அம்சங்களை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் அறிக்கை வெளியிடனர்.
அதே சமயத்தில், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எதிர் கட்சிகள், திரும்பப் பெறப்படும் வேளாண் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
குறிப்பாக, விவசாயிகளின் பிற கோரிக்கைகளான, MS சுவாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரையின்படி சாகுபடி செலவுகள், குடும்ப உழைப்பு – நில வாடகை, கடனுக்கான வட்டி ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு, 50 சதவீதம் கூடுதல் விலையை உள்ளடக்கிய வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணையிப்பது, மின் மசோதாவைத் திரும்பப் பெறுவது, போராட்டங்களின் போது, அரசுப்படைகளால் நடந்தப்பட்ட அடக்குமுறைகளின் காரணமாகக் கொல்லப்பட்ட 700 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையையும் அரசு உடனடியாக வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தினர். இது குறித்து நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் அடாவடித்தனமாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை விவாதத்திற்கு உட்படுத்தாமலேயே வலுக்கட்டாயமாகத் திணித்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிவிட்டது பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்.
‘இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் – மாண்பின் இலட்சணம்’
படிக்க :
♦ மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
♦ அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
வாபஸ் பெறும் மசோதா மீது விவாதம் நடத்துவதை மறுத்ததையொட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியவாறு நாடாளுமன்ற மையப் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையும் உதாசீனப்படுத்தியதோடு மசோதாவை விவாதத்திற்கு உட்படுத்தாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்து வந்ததோடு, எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருக்கையில் இருந்து எழுந்து ஓடிவிட்டார்.
மாநிலங்களவையில், நாடாளுமன்ற மைய பகுதிக்கு வந்து ஆர்பாட்டம் நடத்துவது, முழுக்கங்கள் போடுவது போன்ற வழக்கமான நடைமுறையில், எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதை அவையின் மாண்பைக் கெடுத்துவிட்டதாகக் கூறி எதிர்கட்சி எம்.பி-க்கள் 12 பேரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடியும்வரை இடை நீக்கம் செய்துள்ளார் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா .
‘விவாதம் நடத்த துப்பில்லாமல்’ ஓடிப்போன மக்களவை சபாநாயகர்; 12 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்த மாநிலங்களவைத் தலைவர்; இதுதான் இந்திய நாடாளுமன்றத்தின் மாண்பும் இங்கு நிரம்பி வடியும் ஜனநாயகமும்.
இதுவரை நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற மக்கள் விரோதச் சட்டங்கள் – மசோதாக்கள் எந்தவித விவாதங்களும் இன்றி நிறைவேறின என்பதுதான் மோடியின் நாடாளுமன்ற வரலாறு. இத்தகைய ‘ஜனநாயகத்தில்’, மோடி விவாதம் நடத்துவார் என்று எதிர் கட்சிகள் எதிர்பார்ப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
நாடாளுமன்றத்தில் நிறைவேறும் மசோதாக்கள் –சட்டங்கள் எம்.பி.க்களின் விவாதத்திற்கு உட்படுத்தாமல் நிறைவேறியது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதியே வேதனையுடன் கருத்துத் தெரிவித்ததை உலகே அறியும்.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் மீதான விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருந்த போது 30-க்கும் மேற்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றியது மோடி அரசு. அதற்கு எதிரான எவ்வித சத்தத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. ஏனெனில் அந்தச் சட்டங்களில் பலவும் கார்ப்ப்ரேட் ஆதரவுச் சட்டங்கள் தான்
இன்று மோடி அரசு இந்த மசோதாவை வாபஸ் பெறுவது என்பது கூட ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகும் தேர்தல் குறித்த அச்சமும், இம்மாநிலங்களில் அடித்தட்டு மக்கள் மத்தியில் சாதிவெறி – மதவெறியைக் கிளப்பி குளிர்காய்வதில் ஆதாயம் தேடுவதில் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பாதிப்பும் தான் மசோதா வாபஸ் பெறுவதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், இதற்கும் அடிப்படையாக இருப்பது விவசாயிகளின் – அவர்கள் குடுமபங்களின் – மற்ற ஜனநாயக சக்திகளின் மக்கள் திரள் போராட்டங்களே பிரதானம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
படிக்க :
♦ வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
♦ மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!
வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறப்போவதாக மோடி அறிவித்தவுடன்,. வேளாண் சட்டங்களை இந்த அரசு வாபஸ் பெறும் என இதற்கு முன்னர் ராகுல்காந்தி கூறியதை முன்வைத்து, அன்றே சொன்னார் ராகுல்காந்தி எனவும் சில லிபரல் ஊடகங்கள் ஒளிவட்டம் சூட்டின.
வேளாண் சட்டங்கள், சொல்லிக்கொள்ளப்படும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை’ குழி தோண்டி புதைத்துவிட்டுத்தான் இயற்றப்பட்டன. நீக்கப்பட்டதும் எவ்விதத்திலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களினாலும் அல்ல. சட்டம் நீக்கப்பட்டதற்கு, முழுக்க முழுக்க விவசாயிகளின் வர்க்கரீதியாக அணிதிரட்டப்பட்ட களப்போராட்டங்கள் தான் காரணம்.
இத்தகைய போராட்டங்கள்தான் இனி விவசாயிகள் கேட்கும் பிற கோரிக்கைகளை நிறைவேற்றுமே தவிர, எதிர்க்கட்சிகள் கோரும் வகையில் வேளாண் சட்டம் திரும்பப் பெறுவதன் போது நடத்தப்படும் விவாதம் அல்ல. பாசிஸ்ட்டுகளின் ஆட்சியில் நாடாளுமன்றங்கள் தமது அதிகாரத்தை இழந்து விடுகின்றன. மக்களின் பேரெழுச்சிகள் தான் பாசிஸ்ட்டுகளை பணியச் செய்கின்றன !