முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் சென்ற விமானம் குன்னூர் அருகே வெடித்து அவர் மரணித்ததை ஒட்டி, அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பலரும் அறிக்கை வெளியிட்டனர். பிபின் ராவத்தை விமர்சித்து பதிவிட்ட வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி, பால்ராஜ் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட புகாரை ஒட்டி, அவர்கள் இருவருக்கும் முன் பிணை வழங்கி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமது இந்து ராஷ்டிரக் கனவுக்காக முப்படைகளின் தலைமை தளபதி எனும் புதிய பதவியை உருவாக்கியது மோடி கும்பல். அச்சமயத்தில் இந்திய தரைப்படை இராணுவத்தின் தளபதியாக இருந்த பிபின் ராவத்தை அந்தப் பதவியில் நியமித்தது மோடி அரசு. தரைப்படைத் தளபதியாக இருந்த காலம் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாகவே இறந்த காலம் வரையில் பல்வேறு தருணங்களின் தமது வரம்பை மீறியும், மனித தன்மையற்ற விதத்திலும் பல்வேறுமுறை பேசியிருக்கிறார், பிபின் ராவத்.
உதாரணமாக, காஷ்மீரிகள் இராணுவத்தினரை கல்லால் அடிப்பதைவிட துப்பாக்கியால் சுட்டால், திரும்பச்சுட வசதியாக இருக்கும் என்றெல்லாம் பேசியிருக்கிறார் பிபின் ராவத். அரசியல் விவகாரமான சி.ஏ.ஏ. – என்.ஆர்.சி குறித்து அரசுக்கு ஆதரவாகவும் போராடும் மக்களுக்கு எதிராகவும் தனது வரம்பை மீறி பேசியிருக்கிறார். இவையெல்லாம் சிறு பகுதி மட்டுமே !
படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின்னர், அவனது கடந்த காலச் செயல்கள்தான் அந்த மரணத்தின் தாக்கத்தை உணரச் செய்யும். பிபின் ராவத்தின் மரணத்தின்போது, அவரது கடந்தகால மக்கள் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதமாக, நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி மற்றும் பால்ராஜ் அகிய இருவரும் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
அதில் ஒரு பதிவில், “பாசிஸ்ட்டுகளின் கைக்கூலி சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்” என்று தலைப்பிட்டு ஒரு மீம் வடிவிலான படத்தைப் பகிர்ந்திருந்தனர்.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர், இரு வழக்கறிஞர்கள் மீதும் அருகாமை போலீசு நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனையொட்டி இரண்டு வழக்கறிஞர்களின் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு, 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இரு சமூகப் பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டுவது, பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதுதான் இந்தப் பிரிவுகளின் உள்ளடக்கம்.
முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தின் பேரில் போடப்பட்ட இந்த வழக்கிற்காக கைது செய்யப்படும் அபாயம் இருக்கும் சூழலில், வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதியும், பால்ராஜும் முன் பிணை கோரி வழக்கு தாக்கல் செய்தனர்.
நாகர்கோவில் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பிரிவுகளின் கீழ் குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி, இருவருக்கும் நிபந்தனை முன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
“பாசிஸ்ட்டுகளின் கைக்கூலி சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்” என்ற பிரச்சினைக்குரிய வாசகத்தில், கூறப்படும் பாசிஸ்ட்டு, சர்வாதிகாரி ஆகிய சொற்களின் பொருளை “மரியம் – வெப்ஸ்டர்” ஆங்கில அகராதியில் இருந்து எடுத்துக்காட்டி அந்தச் சொற்களை பயன்படுத்துவது எவ்விதத்திலும் பிரிவு 153, 504, 505(2) ஆகியவற்றின் கீழ் குற்றமல்ல என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்” என்று குறிப்பிட்டிருப்பது அரசியல்சாசனத்தின் பிரிவு 19 வழங்கும் கருத்துரிமையின் கீழ் குடிமக்கள் தெரிவிப்பதற்கு உரிமை இருக்கிறது என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்று முன் பிணை வழங்கியுள்ளார்.
மேலும் தனது தீர்ப்பில், பிபின் ராவத் விவகாரத்தில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பில் இருந்தே மேற்கோள் காட்டி பிரிவு 504, 153, 505(2) ஆகியவை செல்லுபடியாகாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதுதான் சிறப்பு.
தீர்ப்பு அறிக்கையை பெற இங்கே அழுத்தவும்

மாரிதாஸ் வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பிலிருந்து குறிப்பான பகுதியை சுட்டிக்காட்டி, பிரச்சினைக்குரியதாக சொல்லப்படும் சமூக வலைத்தளப் பதிவு, வழக்கு தொடுத்தவருக்கு நேரடியாக அனுப்பப்பட்ட செய்தி அல்ல என்பதையும் ஒருவர் தனது கருத்தை பொதுவாக வெளிப்படுத்திய செய்திதான் என்பதையும் குறிப்பிட்டு பிரிவு 504 செல்லுபடியாகாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதே மாரிதாஸ் வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் சொல்லப்பட்ட கருத்து எந்த வகையிலும் மதம், இனம், பிறந்த இடம், தங்குமிடம், மொழி, சாதி அல்லது சமூகம் என எந்த இரண்டு பிரிவினருக்கும் இடையேயான விவகாரமாக இல்லாத காரணத்தால், பிரிவு 505(2), பிரிவு 153 ஆகியவை செல்லுபடியாவதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி நிபந்தனை முன் பிணையை இருவருக்கும் வழங்கினார் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி.
படிக்க :
தைவான் : அமெரிக்க, சீன உலக மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய மையம் !
நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!
ஊடகங்களால் புனிதராக காட்டப்பட்ட பிபின் ராவத்தின் மரண விவகாரத்தை வைத்து பெரும் அரசியலை தமிழ்நாட்டில் செய்ய நினைத்த சங்கிகளுக்கு மாரிதாஸ் கைது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உண்மையில் மாரிதாசின் நீக்கப்பட்ட அந்த பதிவில், சிறுபான்மையினரை பிபின் ராவத் மரணத்திற்குக் காரணமாக சித்தரித்து அதற்கு தமிழ்நாடு அரசு துணை போயிருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அது தான் உண்மையில் மக்களின் இரு பிரிவினரை – அதாவது மதச் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையிலான பிரச்சினையை தூண்டி விடும் நோக்கம் கொண்ட பதிவு அது.
சரியான காரணத்துக்காக போடப்பட்ட பிரிவுகளை இல்லை என்று கூறி தீர்ப்பெழுதினார் நீதிபதி சுவாமிநாதன் அவர்கள். அந்த தீர்ப்பு வந்ததும் அவரது ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர் வரலாற்றை சமூக வலைத்தளங்களில் அனைவரும் அம்பலப்படுத்தினார்கள் என்பது வேறு விசயம். அந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டியே தவறான நோக்கத்தில் போடப்பட்ட வழக்கிற்கு சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்ணன்