தலோஜா சிறை : ஸ்டான் சுவாமி மரணம் குறித்து உடனிருந்த கைதி ஒருவரின் கடிதம்
செல்வாக்குமிக்க மற்றும் பணக்கார கைதிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு நீதிமன்ற உத்தரவின்றி அழைத்து செல்லும் சிறை அதிகாரிகள் ஸ்டான் சுவாமிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கவில்லை.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியுடன் மும்பை புறநகரில் உள்ள தலோஜா மத்திய சிறையில் ஓராண்டு இருந்த கைதி ஒருவர் அவரது இறப்பைப் பற்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த மார்ச் 2019-ல் கைது செய்யப்பட்ட இக்லாக் ரஹும் ஷேக், ஸ்டான் சுவாமி சிறையில் இருந்தபோது அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதை சிறை நிர்வாகம் புறக்கணிப்பதாகவும், மோசமடைந்து வந்த உடலுக்கு தேவையான அறுவை சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டி 14 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தலோஜா சிறையில் உள்ள ஓர் கைதி மூலம் இந்தக் கடிதம் ‘த வயர்’ இணையதளத்திற்கு கிடைத்துள்ளது.
“ஸ்டான் சுவாமியின் இருதயம் மற்றும் முதுகெலும்பு பிரச்சினைகள் இறுதி நாட்களில் தீவிரமடைந்தது. அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை அப்போதைய கண்காணிப்பாளர் கௌஸ்துப் குர்லேகர் மற்றும் சிறை மருத்துவர் சுனில் காலே ஆகியோர் நிராகரித்தனர்” என்று ஷேக் கடிதத்தில் கூறியுள்ளார்.
ஸ்டான் ஸ்வாமி, அக்டோபர் 8, 2020 அன்று கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் 15 மனித உரிமைப் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணையை மேற்கொண்டது தேசிய புலனாய்வு அமைப்பு. அக்டோபர் 9 அன்று சுவாமியையும், மற்றவர்களையும் “நகர்ப்புற நக்சல்கள்”, “மாவோயிஸ்ட்கள்” என்று கூறி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு உடல் நடுக்கத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க ஒரு ஸ்ட்ராவை (உறிஞ்சு குழாய்) கேட்டார். அவரது கோரிக்கை சிறை அதிகாரிகளால் மறுக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு நவம்பர் 26 அன்று ஸ்டான் சுவாமி ஸ்ட்ராவிற்காக மும்பை உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருந்தது.
ஷேக் கூறுகையில், ஸ்டான்சுவாமி சிறையில் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்தையே உலுக்கும் விதமாக இருந்தது. “செல்வாக்குமிக்க மற்றும் பணக்கார கைதிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும் சிறை அதிகாரிகள், ஸ்டான் சுவாமிக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கவில்லை. அவர் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட கொரோனா தடுப்பூசி அவருக்கு போடப்படவில்லை. இறுதியில் அவரது உடல் மிகவும் மோசமடைந்ததால் பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்” என்று அவர் எழுதியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஸ்டான் சுவாமிக்காக வழக்காடிய மூத்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், NIA மற்றும் சிறை அதிகாரிகள் “அக்கறையின்மை; அலட்சியம்; மருத்துவ வசதிகள் இல்லாமை” ஆகியவையே அவரது இறப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
ஸ்டான் சுவாமி சிறையில் இருக்கும் காலத்தில் பல கோடி ரூபாய் வங்கி மோசடி செய்தவர்கள், போதைப்பொருள் அதிபர்கள் போன்ற பல விஐபி கைதிகளை சிறைச்சாலை சந்தித்ததாக ஷேக் கூறினார். அவர்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டலும் நீதிமன்ற உத்தரவின்றி மருத்துவனையில் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், மற்ற கைதிகளுக்கு மருத்துவம் மறுக்கப்படுகிறது.
சிறைக் கைதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்குக் கூட சிறை அதிகாரிகள் அவர்களது உறவினர்களிடம் அதிக அளவில் பணம் பறித்து வருவதாகவும், அடிப்படை வசதிகள் கூட தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் ஷேக் குற்றம் சாட்டுகிறார்.
வெளியே அழைத்துச் செல்லும் வசதிகள் இல்லை எனக்கூறி வழக்கமான வாய்தாவிற்கு கூட பல கைதிகள் நீதிமன்றம் அழைத்து செல்லப்படுவதில்லை. தீவிரமாக நோய்வாய்ப்பட்ட கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் அதே காரணத்தை சிறை அதிகாரிகள் கூறுகிறார்கள். சிறை மருத்துவர் மற்றும் அதிகாரிகளிடம் யாராவது உடல்நலம் சரியில்லை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கெஞ்சும்போது, வெளியில் உள்ள அரசு மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகள் நிரம்பியுள்ளனர். அங்கு சென்றால் உங்கள் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டுவிடலாம் என்று கூறி கைதிகளை பீதியில் வைத்திருப்பார்கள். கைதிகள் இத்தைகைய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள் என்று எழுதியுள்ளார் ஷேக்.
தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகள்படி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1800 கைதிகள் (பெரும்பாலும் விசாரணைக் கைதிகள்) சிறையில் இருக்கும்போதே உயிரிழக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 1887 கைதிகள் இறந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 60 சிறைகளில் மட்டும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இவை பெரும்பாலும் இயற்கை மரணங்கள் என்று கூறி கைதிகள் உயிரிழந்ததன் காரணங்களை மறைக்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.
ஷேக்கின் கடிதம், இந்த மனிதத் தன்மையற்ற செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. “போதுமான மருத்துவ உதவி, சரியான நேரத்தில் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் மரணம் இயற்கையானது எனக் கூற முடியாது” என கூறுகிறார் ஷேக்.
சிறை அதிகாரிகள், கைதிகளை மோசமான முறையில் நடத்துவதாக தனது கடிதத்தில் மேற்கோள்காட்டும் ஷேக், அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் மனநிலைக்கு கைதிகள் தள்ளப்படுகிறார்கள் என்கிறார். மேலும், சிறை அதிகாரிகள் தொடந்து கைதிகள் மீது பாலியல் ரீதியான வன்முறைகளை ஏவுகிறார்கள், அவர்களின் பாலியல் வக்கிரத்திற்கு தன்னை பலியிட்டதாகவும் ஷேக் குற்றம்சாட்டியுள்ளார்.
வேறு ஒரு சிறையிலிருந்து இச்சிறைக்கு ஒரு கைதி மாற்றப்பட்டால், அவர் கடுமையாக சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு, மோசமாக நடத்தப்படுவார். அதர்வாடி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டு தலோஜா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் பொது இடங்களில் தாக்கப்பட்டு, நிர்வாணப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சிறைக்குள் 8-10 நாட்களாக சாப்பிடவில்லை ஆனாலும் சிறை அதிகாரிகள் அவரை கண்டுகொள்ளவில்லை என்று ஷேக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண விசாரணைக் கைதிகள் தலோஜா சிறையின் கொட்டடிகளில் கொல்லப்படுவதை திரைகிழித்து காட்டுகிறது இக்கடிதம். அதிகார வர்க்கம் என்றும் மனிதத் தன்மை அற்றது என்பதையும், மக்களை ஒடுக்குவதற்கான கருவியே இந்த அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளும் என்பதும் ஸ்டான் சுவாமியின் மரணம் குறித்த இந்தக் கடிதத்திலிருந்து நிரூபணம் ஆகிறது.