பாரிசில் உள்ள உலக ஏற்றத்தாழ்வுகள் ஆய்வகம்1 உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளைக் குறித்த புள்ளிவிவரங்களுக்கு முதன்மையான ஊற்றாகத் திகழ்கிறது. உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் தரவுகளைக் கவனமாகத் தொகுத்துத் தருகிறது அந்த ஆய்வகம்.
உலகம், நாடு, நாட்டுக்குள் வெவ்வேறு பகுதிகள் ஆகிய பல்வேறு மட்டங்களில் வருமானம், சொத்து ஆகிய இரண்டு வகையான ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய தகவல்கள் அந்த ஆய்வகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
அண்மைக் காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு உயர்ந்திருப்பதை நம்மில் பலர் ஏற்கெனவே அறிவோம். இருப்பினும் அண்மையில் வெளியான உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை-2022 2 பல புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய வல்லரசுகளின் ஆளுகையில் உலகின் பெரும்பகுதி இருந்தபோது உலகில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒப்பான அளவு இப்போது மீண்டும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதை மேற்படி அறிக்கை காட்டுகிறது. இந்த நிலைமை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிற்று; கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் வெகுவேகமாக வளர்ந்தது.
படிக்க :
இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
வருமானம், சொத்து ஆகிய இரண்டிலும் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றைப் பொருத்தவரை இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு வெளியிடும் தரவுகளின் தரம் மிகமோசமாக உள்ளது; ஆகவே அண்மைக் காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் எப்படி மாறியுள்ளன என்பதைக் கணிப்பது சிக்கலான செயலாக உள்ளது; இருப்பினும், ஏற்றத்தாழ்வுகள் மிகமோசமாக இருப்பதால் அவை நன்கு புலப்படுகின்றன.
இக்கட்டான தகவல்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை மறைக்க இந்திய அரசு முனைகிறது; தரவுகளை முறைகேடான வகையில் மாற்றத் தலைப்படுகிறது. 2017-18 ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் செலவுகள் குறித்த அளவையின்3 முடிவுகளை வெளியிட அரசு மறுக்கிறது.
முறைசார் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உண்மை நிலையை விட அதிகமாக இருப்பதைப் போலக் காட்டுவதற்கென அது தொடர்பான இயல் வரையறைகளைத் (definitions) தன் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்கிறது.
அரசின் இப்படிப்பட்ட முயற்சிகளையும் மீறிச் சில பொருளாதாரப் போக்குகள் தவிர்க்க முடியாமல் வெளிப்படுகின்றன: 2020-இல் இந்திய மக்களில் [பொருளாதாரத்தில்] கீழ் நிலையில் உள்ள பாதிப் பேரின் வருமானம் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 13 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது; நாட்டின் மொத்த வருமானத்தில் 57 விழுக்காடு மேல் நிலையில் உள்ள பத்து விழுக்காட்டினருக்குக் கிடைத்தது. மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் [கொழுத்த பணக்காரர்கள்] மட்டும் நாட்டின் மொத்த வருமானத்தில் 22 விழுக்காட்டினைக் கைப்பற்றிக்கொண்டனர்.
சொத்துப் பங்கீடு [மேற்கண்ட] வருமானப் பங்கீட்டை விட மோசமாக உள்ளது. உலகளவில் கடந்த சில பத்தாண்டுகளில் நிலைமை மோசமாகியுள்ளதை நாம் ஏற்கெனவே அறிவோம்: உலகச் சொத்து வளர்ச்சியில் ஏறக்குறைய நாற்பது விழுக்காட்டினை மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் கைப்பற்றிக் கொண்டார்கள்.
1995 – 2001 காலக்கட்டத்தில் உலகளவில் முதல் 52 பணக்காரர்களின் சொத்து ஆண்டுதோறும் சுமார் பத்து விழுக்காடு உயர்ந்தது. அந்த 52 பேரில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரும் உள்ளனர்.
சொத்து ஏற்றத்தாழ்வு இந்தியாவில் [உலக அளவை விட] இன்னும் கடுமையாக உள்ளது: கீழ்நிலையிலுள்ள பாதி இந்தியர்களின் மொத்தச் சொத்து வெறும் ஆறு விழுக்காடாகவும் மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினரின் சொத்து நாட்டின் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகவும் உள்ளன. நாட்டின் மொத்தச் சொத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மேல்நிலையிலுள்ள பத்து விழுக்காட்டு இந்தியரிடம் சேர்ந்துள்ளது.
பெருந்தொற்று உலகை முடக்கியுள்ள கடந்த இரண்டு ஆண்டுகள் உலகின் கொழுத்த பணக்காரர்களுக்கு மிக மகிழ்ச்சியான காலமாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் குறித்து ஆக்ச்பாம்4 என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இதைக் காட்டுகிறது.
உலகளவில் மேல்நிலையிலுள்ள பத்துப் பணக்காரர்களின் சொத்து இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மீதி 99 விழுக்காட்டு மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது. மிக, மிக அதிகமாகச் சொத்துச் சேர்த்தவர்களில் கௌதம் அதானி முன்னணியில் உள்ளார்: பெருந்தொற்றுக் காலத்தில் அவருடைய சொத்து எட்டு மடங்கு உயர்ந்தது!
இந்தியாவின் துறைமுகங்களை நிர்வகித்தல், அனல் மின்னுற்பத்தி, மின் பகிர்மானச் சந்தையைக் கட்டுப்படுத்துதல், எரிவளி வழங்கல், தனியார் வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட பல முனைகளில் அதானியின் நிறுவனங்கள் மிகப் பெரியவையாக வளர்ந்துள்ளன. அதானிக்கு அரசுடன் உள்ள தொடர்புகள் இதற்கு உறுதுணையாக விளங்குகின்றன.
மேற்கண்ட கட்டுமானங்கள் அவற்றின் முதன்மை காரணமாக ஒரு காலத்தில் பொதுத் துறையாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
தனிச் சொத்து உயர உயர பொதுச் சொத்துகள் அருகுகின்றன. பொதுச் சொத்துகளின் இயக்கத்தில் கிடைக்கும் வருமானத்தை மக்கள் நலனுக்குச் செலவிட விரும்பும் அரசுகளுக்கு இது கசப்பான நிலைமை.
இந்தியாவைப் பொருத்தவரை, நாட்டின் வருமானத்தில் தனியார் பங்கு 1980-இல் 290 விழுக்காடாக இருந்தது; 2020-இல் அது 555 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. உலகளவில் வரலாறு கண்டிராத வேகங்களில் இதுவும் ஒன்று!
வேறு பல குறியீடுகளிலும் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் மோசமாகி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்கு 18 விழுக்காடாக உள்ளது; உலகச் சராசரி இதைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது; இருப்பினும் இந்தியப் பெண்களின் நிலைமை மிகமோசமாக இருப்பதை அறிந்தவர்களுக்கு மேற்கண்ட புள்ளிவிவரம் வியப்பளிக்காது.
இயற்கைச் சூழலைக் கெடுக்கும் செயற்பாடுகளிலும் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. சூழல் கேட்டினை அளக்கும் குறியீடுகளில் ஒன்று கரிய வெளியீடு (carbon emissions). இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 2,200 கிலோ கரியத்தை வெளியிடுகிறோம்.
ஆனால், மக்கள் தொகையும் ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்த இந்தியாவில் இத்தகைய சராசரிகள் உண்மையை மறைக்கின்றன: பொருளாதாரத்தில் கீழ்நிலையிலுள்ள பாதி இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 1,000 கிலோ கரியத்தை வெளியிடுகின்றனர்.
மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 32,000 கிலோ கரிய வெளியீட்டுக்குக் காரணிகளாக உள்ளார்கள்; இது அமெரிக்க மக்களில் கீழ்நிலையிலுள்ள பாதிப் பேருடைய வெளியீட்டை விட மூன்று மடங்கும். ஐரோப்பியரில் கீழ்நிலையிலுள்ள பாதிப் பேருடைய கரிய வெளியீட்டை விட ஆறு மடங்கும் அதிகம்!
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
இந்தியத் திட்டக் கொள்கைகளை வகுப்போர் கரிய ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துப் பேசுவதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ஏற்றத்தாழ்வுகள் மக்களைக் கொல்வதோடு நில்லாமல் இயற்கையையும் அழித்தொழிக்கின்றன.
ஏற்றத்தாழ்வுகள் பல முனைகளில் நிலவுகின்றன: பாலினப் பாகுபாடுகள் (பெண்களுடைய நிலைமை மிக மோசமாக இருத்தல்), சாதி – மதப் பாகுபாடுகள் போன்றவை வறுமையின் கொடுமைகளை மேலும் மோசமாக்குகின்றன.
அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் உழலும் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இத்தகைய நாடுகள் உண்மையான வளர்ச்சி அடைவதில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.
ஆகவே, உண்மையான வளர்ச்சி வேண்டுமெனில் அரசின் திட்டக் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் தேவை.
மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:
1. Paris-based World Inequality Lab
2. World Inequality Report 2022
3. national consumer expenditure survey
4. Oxfam

கட்டுரையாளர் : ஜெயதி கோஷ் (மேம்பாட்டுக்கான பொருளாதார வல்லுநர்)
தமிழாக்கம் : இராமகிருட்டிணன்
மூலக் கட்டுரை : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க