ரூ.22,842 கோடி வங்கி மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில், ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர்கள் ரிஷி கமலேஷ் அகர்வால், சந்தானம் முத்தசாமி, அஷ்வனி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நெவெடியா, ஏபிஜி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் சில வங்கி அதிகாரிகள் மீது, 28 வங்கிகளில் ரூ. 22,842 கோடி மோசடி செய்ததாக இந்திய தண்டனை சட்டம் (IPC) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் (APGSL) என்பது ஏபிஜி குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். இது கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
லாயிட்ஸ், அமெரிக்கன் பீரோ ஆஃப் ஷிப்பிங், Bureau Veritas (சான்றிதழ் நிறுவனம்), உள்நாட்டு வருவாய் சேவை (Internal Revenue Service – IRS), பதிவாளர் மற்றும் வகைப்படுத்தல் சங்கம் (DNV) போன்ற அனைத்து சர்வதேச சங்கங்களின் அங்கிகாரத்தை பெற்றுள்ளது ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம். இந்தியாவில் பிபாவாவ் கப்பல் கட்டும் தளத்திற்குப் பிறகு அனுமதி பெற்ற இரண்டாவது தனியார் கப்பல் கட்டும் தளம் இதுவாகும்.
APGSL இந்திய கப்பல் கட்டும் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஷிப்யார்டுகளில் இருந்து குஜராத்தில் உள்ள சூரத் கப்பல் கட்டும் தளம் 18,000 டெட் வெயிட் டன் (DWT) மற்றும் தஹேஜ் கப்பல் கட்டும் தளம் 1,20,000 டெட் வெயிட் டன் (DWT) கப்பல்களை உருவாக்கும் திறன் கொண்டவை.
இந்நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 கப்பல்களை (ஏற்றுமதி சந்தைக்கான 46 உட்பட) நிர்மாணித்துள்ளது. இதில் செய்தித்தாள் கேரியர்கள், கிரேனை தன்னகத்தே கொண்டு பொருட்களை ஏற்றி இறக்கும் கேரியர்கள், மொத்த சிமெண்ட் கேரியர்கள், மிதக்கும் கிரேன்கள் போன்ற சிறப்பு கப்பல்களும் அடங்கும்.
சரக்கு தேவை மற்றும் விலை வீழ்ச்சி மற்றும் சரக்கு தேவையில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகளாவிய நெருக்கடி கப்பல் துறையையும் பாதித்தது. இதனால் பாதுகாப்பு உத்தரவுகள் இல்லாமல் மேலும் மோசமடைந்து தான் திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் அட்டவணையை கூட பராமரிக்க முடியாத நிலைக்கு ஏஜிபி கப்பல் கட்டும் நிறுவனம் சென்றதாக கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, தன் சொந்த துணை நிறுவனங்களுக்கு நிதியைத் திருப்புவது, முன்னுரிமை பரிவர்த்தனைகள், மோசமான முதலீடுகள் மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தவறான வர்த்தகம் ஆகியவையே ஏஜிபி நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகும்.
முதலில் நவம்பர் 8, 2019 அன்று கடன் கொடுத்த வங்கி புகார் அளித்தது. அதில் சிபிஐ மார்ச் 12, 2020 அன்று சில விளக்கங்களைக் கோரியது. அதன் பின் ஆகஸ்ட் மாதம் 2020-ல் வங்கி ஒரு புதிய புகாரை பதிவு செய்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்த பின்னர் பிப்ரவரி 7-ம் தேதி முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட புகாரின் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தது.
எர்ன்ஸ்ட் அண்ட் யங் (ernst and young) நடத்திய தடயவியல் தணிக்கை 2012-17க்கும் இடையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்றிணைந்து நிதியைத் திருப்புதல் முறைகேடு மற்றும் குற்றவியல் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
“ஏபிஜி-ன் 13 அலுவலகங்களில் பிப்ரவரி 12 அன்று சோதனை நடத்தப்பட்டது. அதில் குற்றச்சாட்டிற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
ஏபிஜி கப்பல் கட்டும் தளம் எஸ்.பி.ஐ.-க்கு ரூ.2,925 கோடியும், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.7,089 கோடியும், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு ரூ.3,634 கோடியும், பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ரூ.1,614 கோடியும், பி.என்.பி-க்கு ரூ.1,244 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.1,228 கோடியும், மற்ற 22 வங்கிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது.
மிகவும் குறைந்த தொகையான சாதாரண கல்வி கடன், விவசாய கடன் பெற உழைக்கும் மக்கள் அல்லாடுவது, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்வது மிகவும் சர்வசாதாரணமாக நிகழும் இந்நாட்டில், வங்கிகளில் இருக்கும் நாட்டு மக்களின் பணத்தை பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மோசடி செய்து தப்பிச்செல்வது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது.
ஏற்கனவே வங்கி மோசடி செய்து ஓடிப்போன பல கார்ப்பரேட் முதலாளிகளின் வரி ஏய்ப்பு, வங்கி மோசடி தொகைகள் எப்படி வாரா கடன் என்று மோடி அரசு ஊத்தி மூடியாதோ அதேபோல் இந்த ஏஜிபி கப்பல் கட்டும் நிறுவனத்தின் வங்கி மோசடியும் கடலில் கரைந்த பெருங்காயங்களாக மற்றப்பட்டு வங்கிகளின் கடன் சுமையை மக்கள் தலையில்தான் மீண்டும் திணிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.