இந்திய சுயசார்பு அறிவியல்/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள்: எதார்த்தமும் வாய்ஜாலங்களும்
பாகம் – 1
பிரதமர் மோடி, கடந்த சில வருடங்களாக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூரில் புதிதாக கட்டப்படவுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கண்டுபிடிப்புகளில் புதுமை (innovation), நேர்மை, மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்குதல் முதலானவை தான் சுயசார்பு இந்தியாவை உருவாக்க உதவுபவையாகும்” [1] என்று கூறினார். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லையெனினும், இதை நடைமுறைபடுத்த ஆளும் பாஜக அரசு என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளது என்பதை பரிசீலித்தால் பிரதமரின் பேச்சுக்கள் வெறும் வெற்று சவடால்கள் என்பது எளிதில் புலப்படும்.
இதுமட்டுமல்ல, இதே போல் பல தருணங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், சுயசார்பு இந்தியாவை (ஆத்மநிர்பார்) கட்டியெழுப்ப வேண்டும் என்றும் மோடி பேசியுள்ளார். தேசியக் கல்விக்கொள்கையை(NEP) ஆதரிக்கும் பாஜக ஆதரவாளர்கள், பேராசிரியர்கள், முதலாளிகள் உள்ளிட்ட பலர், NEP ஆராய்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்துவதை உள்ளடக்கமாக கொண்டுள்ளதாகவும் NEP-ன் முடிவுகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தினால் 5 ட்ரிலியன் பொருளாதாரத்தை நாம் எட்ட முடியும் என்றும் கதையளக்கின்றனர்.
இது போன்ற ‘மங்கிபாத்’ சவடால்கள், நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைகள் மோடியின் ஆதரவாளர்களை திருப்தியடைய செய்யலாமே ஒழிய, பல ஆண்டுகள் உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு கல்வி பெற்று எப்படியேனும் சமூகத்தில் முன்னேறி விடலாம் என்று கனவுகளோடு காத்திருக்கும் (முதல் தலைமுறை) பட்டதாரிகளுக்கும் சமூக-பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய பிரிவினருக்கும் இது போன்ற சவடால்களால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.

படிக்க :

சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் வெளிவரும் மாணவர்கள் இனி தொழில் முனைவோர்களாக ஆகப்போகிறார்கள் என்று துணைவேந்தர்கள் பேசுகின்றனர். ஆராய்ச்சியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டு, NIRF மற்றும் QS தரவரிசையில் முன்னிலை என்று தனியார் கல்லூரிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்.
மத்திய அமைச்சரோ, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் உள்ளது, ஏராளமான அந்நிய முதலீடு வருகிறது, Global innovation index-ல் இந்தியா முன்னேறியுள்ளது என்று பேசுகிறார். முதலாளிகளோ green energy, electrical vehicle, Robotics/Automation ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்போகிறோம் என்கின்றனர். இவர்களின் பேச்சுகளை கேட்டும் ஒரு கல்லூரி மாணவருக்கு, இன்னும் ஒருசில வருடங்களில் இந்தியா அறிவியல்/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் முன்னணியான நாடாக வளர்ந்துவிடும் என்ற தோற்றத்தை என்ற பிம்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் உண்மையோ இவர்கள் பேசுவதற்கு நேரெதிராக உள்ளது.
இந்தியாவினுடைய சுயசார்பு தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலையின் குறுக்குவெட்டு தோற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்ட இரண்டு உதாரணங்களை(துவக்கநிலை நிறுவனங்கள் (startups) மற்றும் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் (5G technology)) மட்டும் இம்முதல் பாகத்தில் தருகிறோம்.
துவக்கநிலை நிறுவனங்கள் குறித்து
சமீபகாலமாக துவக்கநிலை நிறுவனங்கள் (startups) குறித்து பலரும் பேசக் கேட்டிருப்போம். தொலைக்காட்சி விவாதங்கள், வணிக பத்திரிக்கைகள், மற்றும் பல்கலைக்கழக கருத்தரங்களில் பல நேரங்களில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுவதும் துவக்கநிலை நிறுவனங்கள் பற்றியதாக தான் இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி, “துவக்கநிலை நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகளை எட்டியுள்ளது. அவைகள் நம் நாட்டின் புது வகையான நிதி திரட்டும் அமைப்புகள். அவைகள் தங்களுக்கே உரித்தான பாணியில் தங்களுக்கான திட்டங்களை தாங்களே வகுத்து முன்னேறுகின்றன. இனி வரும் பத்து ஆண்டுகளில் துவக்கநிலை நிறுவனங்களுக்கு ஏற்ற சிறந்த சூழலை இந்தியா ஏற்படுத்தி கொடுக்க பாடுபடும்” [2].
மேலும், Startup India திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்கவிழாவில் பேசிய மோடி “இந்திய வளர்ச்சிக்கான முதுகெலும்பே துவக்கநிலை தொழில்கள்தான்” என்றும் பேசினார். ஆனால் துவக்கநிலை தொழில்களின் தற்போதைய நிலை குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்: நம்மிடம் ஏகப்பட்ட செயலிகள் (startup apps) உள்ளன, அனால் இந்திய ஒன்றியத்திற்கென்று சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும்படியான புதிய கண்டுபிடிப்புகள் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை.
எதார்த்தத்தில், இந்த செயலிகள் பலகோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்திய சில்லறை வர்த்தக சந்தையை (மருந்து விற்பனை, உணவு விற்பனை, தங்கும் விடுதிகள், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மளிகை பொருட்கள்) வெளிநாட்டு நிதி நிறுவனங்களினால் வளர்க்கப்படும் ஒரு சில துவக்கநிலை நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டவை.
இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் கூட ஏகாதிபத்திய நாடுகளின் தயவுகளிலிருந்து கிடைப்பவை தான். துவக்கநிலை தொழில்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அந்நிய முதலீடுகள் (2021 ஆம் ஆண்டில் மட்டும் 28 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் இரண்டு லட்சம் கோடி ருபாய்) இந்தியாவிற்குள் வந்தது உண்மைதான் [3], ஆனால் அதன் நோக்கம் இந்தியாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோ, அக்கண்டுபிடிப்புகளை கொண்டு மக்களுக்கு பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதோ அல்ல. மாறாக, மிக குறுகிய காலத்தில் மிக அதிக லாபத்தை பங்குச் சந்தையிலிருந்து ஈட்டுவதும், இந்திய சில்லறை வர்த்தக சந்தையை தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒழுங்கமைப்பதும் தான்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒரு நாடு பெற்றிருக்கும் அறிவுசார் பலமே அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயம் செய்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தானியங்கி கார்களை ஆய்வுசெய்து நடைமுறைக்கு கொண்டுவருகிறார்கள், திறன் கைபேசியின் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ சேவை துறையிலிலுள்ள பழைய தொழில்களை செயலிகள் மூலம் புதிய வடிவத்தில் செய்கிறார்கள்.
உதாரணமாக, நாம் அனைவரும் ஓட்டலுக்கு சென்று உணவு உண்டோம், ஆனால் இப்போது சுவிக்கி, சொமோட்டோ போன்ற செயலிகள் மூலம் உணவை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து உண்ணுகிறோம். உண்மையில், இந்திய ஒன்றியம் தனது மனிதவளத்தை இது போன்ற செயலிகளை உருவாக்க செலவளிக்க வேண்டுமா அல்லது இந்தியாவிற்கான் சுயசார்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் செலவுசெய்ய வேண்டுமா?
இந்தியாவில் 5G தொழில்நுட்பம்
5G தொழில்நுட்பம் என்பது தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் ஏற்பட்ட ஐந்தாம் தலைமுறை (5th generation) தொழில்நுட்ப வளர்ச்சி ஆகும். இதை சுருக்கமாக 5G தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது நாம் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 4G தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பமாகும். உதாரணத்திற்கு, 4G தொழில்நுட்பத்தால் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 100 கோடி (1GB) தகவல்-துணுக்குகள் (byte) வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஆனால், 5G தொழில்நுட்பத்தால் ஒரு நொடியில் அதிகபட்சமாக 2000 கோடி (20 GB) தகவல்-துணுக்குகள் (byte) வரை பரிவர்த்தனை செய்ய இயலும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. இந்த தொழில்நுட்பத்தை இதுவரை 65 நாடுகளின் சேர்ந்த 1,662 நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 65 நாடுகளில் அதிகபட்சமாக சீனாவில் மட்டும் 376 நகரங்களில் 5G தொழில்நுட்பம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதையடுத்து அமெரிக்காவில் 284 நகரங்களிலும், பிலிபைன்ஸ் நாட்டில் 95 நகரங்களிலும் 5G சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது [4]. ஆனால் 140 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இதுவரை 5G தொழில்நுட்பம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை!
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஏகபோகமாக வளர்ந்துள்ள Jio, Airtel ம் 5G அலைவரிசைக்கு தேவையான தொழில் நுட்பத்தை சொந்தமாக வைத்துள்ளனரா? இதற்கான ஆராய்ச்சிக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான IIT மற்றும் IISc ன் பங்களிப்பு என்ன?

சுயசார்பு 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய தொழில்நுட்ப கழகங்களின் பங்களிப்பு
இந்தியாவில் 23 இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) உள்ளன. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் மனிதவள மேம்பாட்டு துறை (MHRD) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 1.18% மாணவர்கள் மட்டுமே ஐஐடிக்களில் பயிலுகின்றனர். ஒட்டுமொத்த உயல்கல்விக்கு ஒன்றிய அரசு செலவு செய்யும் தொகையில் 26.96% தொகையை இந்த சிறு விழுக்காடு (1.18%) மாணவர்களுக்கு மட்டுமே செலவு செய்கின்றது [5].
130 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் வெறும் ஒரு விழுக்காட்டிற்கு சற்று அதிகமான மாணவர்கள் மட்டுமே பயிலும் ஐஐடிக்களுக்கு செலவு செய்யும் தொகையானது இந்தியாவில் உயர்கல்வி பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கு செலவு செய்யும் தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாக இந்திய அரசு செலவு செய்கிறது எனும் பட்சத்தில் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவைகளின் பங்கு என்ன என்பது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் தவிர்க்கமுடியாத கேள்வியாகிறது. இந்த கேள்விக்கான பதிலை ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவின் சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்காலத்தை குறித்து வருத்தமே மிஞ்சுகிறது!
23 ஐஐடிக்களில் ஐஐடி சென்னை, ஐஐடி ஐதராபாத் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய மூன்று ஐஐடிக்கள் சேர்ந்து “5G சோதனை மேடை” (5G test bed) என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர் [6]. இந்த முன்னெடுப்புக்கான நிதியை 2018 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா [7]. மேலோட்டமாக பார்த்தால் இது சிறந்த முன்னெடுப்பு தான் என்று தோன்றலாம்.
ஆனால் பிற நாடுகளை சாராமல் முழுக்க முழுக்க இந்திய மனிதவளத்தை கொண்டு இந்திய ஒன்றியத்துக்கே உரித்தான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும், அவற்றை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவானதல்ல இந்த முன்னெடுப்பு. உலக அளவில் 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்போக்கை பார்த்தோமானால் இந்த தொழில்நுட்பம் குறித்து 2012-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையின் துணை நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union (ITU)) திட்டங்களை வகுத்துள்ளது [8].
இந்த திட்டங்களின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அதன் நாட்டிலுள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சர்ரே பல்கலைக்கழகத்திற்கு (University of Surrey) நிதி ஒதுக்கீடு செய்து 5G தொழில்நுட்பத்தை உருவாக்க ஊக்குவித்தது [9]. இதே போன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கான முன்னெடுப்புகளை துவங்கின. அனால் 2012-களில் 5G குறித்த எந்த விவாதங்களும் இந்திய அரசாலும், இந்திய தொழில்நுட்பக் கழகங்களாலும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் 5G தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலகம் முழுக்க சந்தைப்படுத்த தயாராக இருக்கும் தருணத்தில் இந்திய அரசும், இந்திய தொழில்நுட்ப கழகங்களும் 5G தொழில்நுட்பம் குறித்து கவலை கொள்ளுகின்றன! அப்படியானால் இந்திய தொழில்நுட்ப கழகங்களின் இந்த முன்னெடுப்பு வெறும் கண்துடைப்பு இல்லையா? 2012-இல் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொழில்நுட்பம் குறித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு நமது 23 ஐஐடிக்களில் வெறும் 3 ஐஐடிக்கள் தான் கவலை கொள்கின்றன என்றால் பெரும் நிதியை விழுங்கி ஏப்பம் விடும் இந்த இந்திய தொழில்நுட்ப கழகங்களின் இருப்பிற்கான தேவை தான் என்ன?
5G தொழில்நுட்பமும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களும்
5G தொழில்நுட்பம் குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலை கொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து சந்தைப்படுத்தும் முனைப்பும் இந்திய முதலாளி வர்க்கத்திடம் இல்லை. அப்படியான முனைப்பு இருந்திருந்திருக்குமானால் 5G தொழில்நுட்பம் குறித்து சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) விவாதிக்க துவங்கிய காலத்திலேயே இந்திய முதலாளிகளும் அரசும் அதற்குரிய ஆய்வுக்கான முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள்.
ஆனால் இந்திய முதலாளிகளுக்கோ இந்தியாவிற்கான சுயசார்பு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து சந்தைப்படுத்தவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய நலன்களுக்கு ஊழியம் செய்வது, அதன் மூலம் தங்கள் லாபத்தை பெருக்கிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். தற்போது 5G தொழில்நுட்பத்தினை சீனாவிடமிருந்து வாங்குவதா அல்லது அமெரிக்காவிடமிருந்து வாங்குவதா ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே போன்று, மின்சார வாகனங்கள் குறித்து முன்னேறிய நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரங்களில் இந்திய அரசும் ஆளும்வர்க்கமும் உயர்கல்வி நிறுவனங்களும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் மின்சார வாகன தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில் இந்திய ஒன்றிய அரசும், முதலாளிகளும், தொழில்நுட்ப கழகங்களும் தங்கள் கனவு நிலையிலிருந்து விழித்துக்கொண்டு இத்தொழில்நுட்பங்களைக் குறித்து பேசிவருகின்றனர்.

படிக்க :

6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !

பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?

உற்பத்தி துறையில் சமகாலத்தில் பரவலாக பேசப்படும் சூரிய மின்சாரம், மின்வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல (battery) உற்பத்தி, ஐந்தாம் தலைமுறை (5G) தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், திறன்-கைபேசிகள் (smart phones) உற்பத்தி, குறை-கடத்திகள் (semiconductor) சார்ந்த உற்பத்தி, மருந்துகளுக்கான மூல பொருட்கள் தயாரிப்பு, நான்காவது தொழில்புரட்சிக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பல்பொருள் இணையம் (Internet of Things) ஆகிய துறைகளுக்கு தேவையான இந்திய ஒன்றியத்திற்கே உரித்தான சுயசார்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மற்றும் அவை சார்ந்த துவக்கநிலை தொழில்களில் இந்திய ஆளும்வர்க்கம் செய்துள்ள முயற்ச்சிகள் என்ன?
உண்மையில், இதற்கான பதில் மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே உள்ளது. ஏனெனில், இந்தியா தனக்கான அறிவியல்/தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொள்ள போதுமான மனிதவளத்தை பெற்றிருந்தாலும் தனக்கான அறிவியல்/தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளையே நம்பியுள்ளது.
எதார்த்தம் இவ்வளவு கேலி கூத்தாக இருக்கும் பட்சத்தில் மோடி தனது உரைகளில் Make in India, சுயசார்பு இந்தியா போன்ற சவடால்களை அள்ளி வீசுகிறார். 5G அலைக்கற்றையோ, சூரியஒளி மின் உற்பத்தியோ (solar), மின்சார வாகன உற்பத்தியோ அல்லது துவக்க-நிலைத் தொழில்களோ, இவற்றுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான நிதி ஆகியவற்றுக்கு ஏகாதிபத்திய நாடுகளை இந்திய ஆளும்வர்க்கம் சார்ந்துள்ளது. இதனை அடுத்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தொடரும்
நாஞ்சில் திராவிடன்     ராஜன் (CCCE)
ஆதாரம் :
[1] Innovation, integrity, inclusion will help to build atmanirbhar bharat 
[2] Startups are the new wealth creators || Modi calls startups backbone of new india
[3] vc investments jump 4 times to hit record 28.8 billion in 2021
[4] 5g-services-have-reached-1-662-cities-worldwide
[5] IITs IIMs NITs have just 3% of total students but get 50% of government funds
[6] 5G Testbed at IIT Hyderabad
[7] Financial-grant-approved-for-5g-test-bed-project-by-iits-iisc
[8] 5G – Fifth generation mobile technologies
[9] Surrey university 5G research centre plans unveiled
 

1 மறுமொழி

Leave a Reply to தம்மவேல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க