பத்திரிகை செய்தி
08.03.2022
கோகுல்ராஜ் கொலை வழக்கு
ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் உள்ளிட்டோருக்கு சாகும்வரை சிறை !
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதுடன் உறுதியான நெஞ்சுரத்தோடு இறுதிவரை போராடிய கோகுல்ராஜின் தாய், வாதாடிய வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் உள்ளிட்டோருக்கு மக்கள் அதிகாரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி காணாமல் போனார்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடலானது நாக்கு துண்டிக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பேசிக் கொண்டிருந்ததால் நடத்தப்பட்ட கொலை இது.
இந்த கொலையை சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிவெறி அமைப்பின் நிறுவனரான யுவராஜ் தலைமையிலான சாதிவெறிக் கும்பல் நடத்தியது என்பது அடுத்தடுத்த நாட்களில் வெளிச்சத்துக்கு வந்தது, என்றாலும் யுவராஜை போலீசால் நெருங்கவே முடியவில்லை.
படிக்க :
சர்வதேச அளவில் இழிவுபடுத்தப்படும் ‘பறையா’ எனும் சொல் || வி.இ.குகநாதன்
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
சுமார் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தபடியே யுவராஜ் ஒட்டுமொத்த போலீசு துறையையே மிரட்டிக் கொண்டிருந்தான். இவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணு ப்ரியாவையும் மிரட்டினான். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தந்தை எவ்வளவு தூரம் போராடியும் தன்னுடைய மகளின் சாவுக்கு அவரால் இறுதிவரை நீதியைப் பெறவே முடிய இல்லை.
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, போலீசில் யுவராஜ் சரணடைந்தான். உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்களின் சட்டையைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்து கைது செய்யும் போலீஸ், ஆதிக்க சாதி வெறியன் ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் சரண்டருக்காக காத்துக்கிடந்தது.
யுவராஜை கைது செய்த பிறகும் கூட கோகுல்ராஜின் தோழியான சுவாதி உட்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள். இதனால் கோகுல்ராஜின் தாய், இப்பகுதியில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்தால் நேர்மையாக இருக்காது என்பதால் வேறு பகுதிக்கு மாற்றக் கோரினார் . மேலும் அரசு வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதால் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அவரின் மனுவை தூக்கி கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு, வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களை இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீதிமன்றம் நியமித்தது .
அதன்படி இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டு 10 பேர் குற்றவாளிகள் என்று கடந்த ஐந்தாம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணைக்குப் பின் நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று (08-03-2022) அறிவித்தார்.
ஆதிக்க சாதி வெறி வெறியனும் – தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவருமான யுவராஜ் மற்றும் அவனது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனையுடன் சாகும்வரை சிறையில் இருக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரும் சாகும் வரை சிறையில் இருக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
யுவராஜ் உள்ளிட்ட ஆணவக்கொலை குற்றவாளிகள்- சாதிவெறியர்கள் மேல்முறையீடு செய்து தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாயிருக்கிறது .
பரப்பன அக்ரகார நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து ஊழல் குற்றவாளி ஜெயலலிதா தன்னைத்தானே விடுதலை செய்து கொண்டார். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கருணையால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்கள்.
தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவர்களை எரித்துக் கொன்ற அதிமுக கொலைகாரர்களும் கூட ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிக்காமல் தப்பித்து வெளியே வந்தனர்.
ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் ஊழல் குற்றவாளிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் ஆதரவாக இந்த ஒட்டுமொத்த அரசுத் துறையும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் யுவராஜுக்கு தண்டனை கிடைத்து இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தண்டனையும் தானாக இந்த அரசின் நீதித்துறையில் கருணையால் வந்தது அல்ல.
இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. இருந்தபோதும் உறுதியாக வழக்கறிஞர்கள் போராடினார்கள்.
மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் போராடியதால் கிடைத்த தீர்ப்பு இது.
அரசு வழக்கறிஞராக செயல்பட்ட ப.பா. மோகன், இத்தனை ஆண்டுகளில் இதுவரை தனக்கு அரசு வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கூட இந்த அரசு வழங்கவில்லை என்றும் இவ்வழக்கிற்காக ஒவ்வொருமுறை வந்து செல்லும் செலவை கூட தானே ஏற்று செயல்படுவதாகவும் கூறியுள்ளார். ஒரு அரசு வழக்கறிஞருக்கு டோல்கேட்டில் வந்து செல்வதற்கான இலவச பாஸைக் கூட கொடுக்காமல் இந்த அரசு எவ்வளவு ஏளனப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
கோயிலில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு பட்டியலின பொறியியல் பட்டதாரி காணாமல் போனது – சில நாட்களில் தலை துண்டாகவும் நாக்கு அறுபட்ட நிலையில் அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டது – நான்தான் கொலை செய்தேன் என்று யுவராஜ் பகிரங்கமாக தெரிவித்த பிறகு நூறு நாட்களாகியும் அவனை கைது செய்யாமல் சரண்டர் ஆக மேற்கொள்ளப்பட்ட போலீஸின் முயற்சிகள் – கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு சிறையில் கொடுக்கப்பட்ட ராஜமரியாதை – நீதிமன்றங்களில் யுவராஜ் ஆஜர் படுத்தும்போது அவனுடைய ஆணவமான பேச்சு – சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாறிப்போனது – அரசு வழக்கறிஞராக ப.பா மோகனை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உதாசீனப்படுத்தியது – நீதிமன்றம் மூலம் அவர் நியமிக்கப்பட்டார். இப்படி பல்வேறு தடைகளையும் மீறி அல்லவா இந்த தீர்ப்பு வந்திருக்கிறது!
படிக்க :
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
சாதி ஆணவக் கொலைகள் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. எனினும் இந்த வழக்கில் இருந்து குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்டோர் மேல்முறையீட்டின் மூலம் தப்பிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் ஏற்படின் அதற்கு எதிராகவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, வன்னியர் சங்கம், முக்குலத்தோர் சங்கம் போன்ற ஆதிக்க சாதி வெறி அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்தினை மக்களிடம் பரப்பி ஆணவக் கொலைகளையும் சாதிவெறி தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. உடுமலை சங்கரை கொலை செய்த கௌசல்யாவின் குடும்பத்தினருக்கு ஆதிக்க சாதி அமைப்புகள் நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது .
இது போன்ற ஆதிக்க சாதி வெறி அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது. மேலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிரான, ஆதிக்க சாதி சிந்தனைக்கு எதிரான பண்பாட்டுத் தளத்தில் பரந்து விரிந்த பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஜனநாயக – முற்போக்கு- பெரியாரிய- கம்யூனிச இயக்கங்களுக்கு உள்ளது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

1 மறுமொழி

  1. இவ்வாறான சாதிவெறி கொலைகளை கேட்கும்போது மனம் வேதனைக்குள்ளாகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க