ருங்கால வைப்பு நிதிக்கான கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும் மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் 12.3.2022 அன்று நடந்தது. அதில் 2021-2022 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 14.3.2022 அன்று நடந்த மக்களவை கூட்டத்தில் தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இப்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தபோதும் அவர்களுடைய எதிர்ப்பு எல்லாம் கண்டன அறிக்கைளை வெளியிடுவது, ட்விட்டரில் கருத்தை பதிவிடுவது, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது என்பதுடன் அடங்கி விடுகிறது. அதைத் தாண்டி செல்வதில்லை. தங்களுடைய கட்சியின் தொழிற்சங்கங்களை வைத்து அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை நடத்தி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று எல்லாம் இவர்கள் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இவர்களுக்கு கிடையாது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம் – ஒரு சுருக்கமான பார்வை
வருங்கால வைப்பு நிதி திட்டம் இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகி்றது. இத்திட்டத்தின்கீழ் ஊழியர்களின் மாத ஊதியத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமும் அதே 12 சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.
படிக்க :
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !
வருங்கால வைப்புநிதி மோசடி : அரசு – முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் !
ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 12 சதவீதவுடன் நிறுவனத்தின் பங்காக செலுத்தப்பட்ட 12 சதவீதத்தில் இருந்து 3.67 சதவீதம் சேர்த்து 15.67 சதவீதம் இபிஎப் என்னும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும்.
நிறுவனத்தின் பங்களிப்பாக அளிக்கப்பட்டதில் மீதம் உள்ள 8.33 சதவீதம் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்கப்படும். இந்த தொகை 58 வயதையை கடந்த பின்பே ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு கிடைக்கும்.
இபிஎப் என்னும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் சார்பாக செலுத்தப்பட்ட 15.67 சதவீதத்திற்கே வட்டி கணக்கிடப்படுகிறது.
பி.எப் ஆணையம் ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனத்தின்  மத்திய அறங்காவலர்கள் குழு கூடி வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கான வட்டியை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யும். மத்திய அரசின் நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்ட பிறகே வட்டியானது இறுதி செய்யப்படும்.
employees-provident-fund-epfவருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1952 – 1953 நிதியாண்டில் வட்டியானது 3 சதவீதம் அளிக்கப்பட்டது. 1989 – 1990 நிதியாண்டிலிருந்து 1999 – 2000 நிதியாண்டு வரை வட்டியானது 12 சதவீதம் அளிக்கப்பட்டது. தற்போதுதான் 2019 – 2020 நிதியாண்டில் அளிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டியானது 2021 – 2022 காலாண்டில் 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு மிகக் குறைந்த வட்டியாக 8 சதவீதம் 1977 – 1978 நிதியாண்டில் அளிக்கப்பட்டது. தற்போது 44 வருடம் கழித்து 8.1 சதவீதம் என்று மிகக் குறைந்த வட்டியை நிர்ணயம் செய்து இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஊழியர்கள் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகையானது, வருங்கால வைப்பு நிதியாக வட்டியோடு பரிணமிக்கும். பணிக்காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் மொத்த தொகையையும் வட்டியோடு பெற்றுக்கொள்ள முடியும். தொழிலாளர்கள் அவசர தேவை அடிப்படையில் மருத்துவ செலவு, சுப செலவுகளுக்கு கூட வருங்கால வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
கொரோனா காலத்தில் மத்திய அரசானது பி.எப் தொகையில் 75 சதவீதம் அல்லது 3 மாதங்களுக்குரிய அடிப்படை ஊதியம், அகவிலைப்படி இதில் எது குறைவோ அந்த அளவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
அதனடிப்படையில் ஏப்ரல் 17, 2020 புள்ளிவிவரப்படி, மத்திய அரசானது “கடந்த 15 நாட்களில் 946.41 கோடி பி.எப் பணத்தை பெற்ற 3.31 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தது.
2021 டிசம்பர் 31 நிலவரப்படி 14,310.21 கோடி மதிப்பிலான 56.79 இலட்சம் கோரிக்கைகளை தீர்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்திற்கு முன்பே 2018-ம் ஆண்டு மத்திய அரசானது, ஊழியர்கள் வேலையிலிருந்து நின்ற தேதியிலிருந்து இரண்டு மாதம் ஆன பிறகுதான் தங்களின் கணக்கிலிருந்து 75 சதவீதம் வரையிலும் பணத்தை எடுக்க முடியும் என்பதை தொழிலாளர்கள் அந்த இரண்டு மாதங்களில் கடன்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதால் ஒரு மாதமாக குறைத்தது.
இப்படி இந்த வருங்கால வைப்பு நிதியானது தொழிலாளர்கள் வேலையைவிட்டு நின்றவுடன் ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும், கொரோனா காலத்தில் தொழிலாளர்களின் மருத்துவ செலவுக்காகவும் பயன்பட்டது மேற்கூறிய புள்ளிவிவரங்களில் இருந்து பார்க்கும்போது தெரிய வருகிறது.
வருங்கால வைப்பு நிதி வாரியம், பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15 சதவீதம் வரை வருவாய் ஈட்டியுள்ளது. அத்தொகையிலிருந்து 8.5 சதவீதம் கூட வட்டி வழங்க மறுப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று தினகரன் நாளிதழ் 14.3.2022 அன்று தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது. இதே கருத்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, 2015 முதல் 2018 பிப்ரவரி வரை வருங்கால வைப்பு நிதியிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.44000 கோடியை பங்குச் சந்தையில் வர்த்தகப் பரிமாற்ற நிதித் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இதில் சுமார் ரூ.886 கோடி முதலீட்டை விற்ற வகையில் சுமார் ரூ.1054 கோடி வரையிலும் திரும்பக் கிடைத்துள்ளது.
மேற்கூறியதிலிருந்து பார்க்கும்போது, வருங்கால வைப்பு நிதி வாரியம் இலாபத்தில் இயங்குவது உறுதியாகிறது. ஆனால், அதிலிருந்து தொழிலாளர்களுக்கு பணத்தை கொடுக்கதான் அரசுக்கு விருப்பம் இல்லாமல் உள்ளது.
எந்த சேமிப்பும் இல்லாத தொழிலாளர்கள் தங்களுடைய மருத்துவ செலவுகள் போன்ற திடீர் செலவுகளுக்கு வருங்கால வைப்பு நிதியைதான் நம்பி உள்ளனர். ஆனால், அவர்களுடைய பணத்திலிருந்து வரும் வருவாயில் தன்னுடைய நிதி ஆதாரத்தை பெருக்கும் மத்திய அரசானது, பெரும் பணக்காரர்களான அம்பானி, அதானி போன்றவர்களுக்கு அரசின் நிதியை கார்ப்பரேட் சலுகை என்ற பெயரில் வாரிக் கொடுப்பதில் குறியாய் உள்ளது.
000
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு அரசு கொடுக்கும் எல்லாவித மானியங்களையும், சலுகைகளையும் படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகிறது. கேஸ் மானியம் குறைக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு.
2016 – 2017 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். 2016 ஏப்ரல் 1-க்கு பிறகு கணக்கில் சேரும் தொகையை திருப்பி எடுக்கும்போது 60 சதவீத தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால், வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு பதிலாக வேறுவழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அருண் ஜெட்லி அறிவித்த வேறுவழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் மோடி அரசு கையாண்டு வரும் படிப்படியாக வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைப்பது.
2014 – 2015 நிதியாண்டு – 8.5%
2015 – 2016 நிதியாண்டு – 8.8%
2016 – 2017 நிதியாண்டு – 8.65%
2017 – 2018 நிதியாண்டு – 8.55%
2018 – 2019 நிதியாண்டு – 8.65%
2019 – 2020 நிதியாண்டு – 8.5 %
2021 – 2022 நிதியாண்டு – 8.1%
2015 – 2016 நிதியாண்டில் 0.30% அதிகரித்தது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு நல்லது பண்ணுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி வாரியம்தான் 0.30% அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. மோடி அரசோ 0.30% அதிகரிக்க வேண்டாம், 0.20% அதிகரித்தாலே போதும் என்று போராடியது. மக்கள் மற்றும் தொழிற்சங்களின் தொடர் எதிர்ப்பால் 0.30% அதிகரிக்க மோடி அரசானது ஒத்துக் கொண்டது. 2018 – 2019 நிதியாண்டில் 0.1% அதிகரிக்கப்பட்டதும் தேர்தலை ஒட்டிதான்.
மற்ற நிதியாண்டுகளில் எல்லாம் மோடி அரசானது வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% குறைத்துக் கொண்டுதான் வந்துள்ளது.
இங்கே ஒரு கேள்வி? எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% குறைக்கும் மோடி அரசானது, தற்போது இந்த நிதியாண்டில் மட்டும் ஏன் வட்டி விகிதத்தை 0.4% குறைத்துள்ளது.
இதற்கான பதிலை நாம் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் இருந்துதான் புரிந்துகொள்ள முடியும். 2014 தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் முக்கியமானது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஸ்வச் பாரத் மற்றும் கருப்பு பணத்தை மீட்டெடுப்பது போன்ற மக்களின் தேவைகளை பொறுத்து வாக்குறுதிகளை அமைந்தன.
ஆனால், தற்போது நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாக உ.பி.யில் பிரச்சாரமே இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்குமான தேர்தல் என்றுதான் இருந்தது. யோகி ஆதித்தநாத் இது 80% இந்துக்களுக்கும் 20% முஸ்லீம்களுக்குமான தேர்தல் என்று கூறினார். பா.ஜ.க.வின் எல்லா தலைவர்களுடைய தற்போதைய பிரச்சாரமும் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய வாக்குறுதிகள் குறைந்து இந்து மதவெறியூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் தற்போது புதியசூழல் உருவாகி உள்ளது. காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் அதிகரித்து உள்ளது. நாள்தோறும் இந்துமுனைவாக்கம் செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மொத்த அரசுக்கட்டமைப்பும் பாசிச ஆட்சிக்கான செயற்கருவியாக படிப்படியாக மாறிக்கொண்டே வருகிறது.
காவி பாசிஸ்டுகள் இந்த பலத்திலிருந்துதான் தங்களின் கார்ப்பரேட் பாசிச சேவைகளை அமைத்துக் கொள்கிறார்கள்.
படிக்க :
தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு
இரண்டு ஆண்டுகள் சம்பளம் நிலுவை : தூய்மைப் பணியாளர் தற்கொலை !
தங்களது அடித்தளம் விரிவடைந்ததன் விளைவாகத்தான் எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% வரை குறைத்துவந்த மோடி அரசு, தற்போது இந்த நிதியாண்டில் 0.4% குறைத்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான். காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் விரிய விரிய தொழிலாளர் உரிமைகள் மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்படும்.
இந்த வட்டி விகிதம் குறைப்பை தொழிலாளர் பிரச்சினை என்று தனிப்பட்ட பிரச்சினையாக நாம் பார்க்கக் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு பகிரங்கமாக விற்பது, அதை பட்ஜெட்டிலே பகிரங்கமாக அறிவிப்பது, மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக அமல்படுத்துவது, எல்லா மானியங்களையும் மற்றும் சலுகைகளையும் வெட்டுவது, இப்படி எல்லா வர்க்கங்களின் மீதான கார்ப்பரேட் பாசிச தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்த வேண்டும் என்ற காவிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிதான் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு.
இவ்வட்டி விகித குறைப்பானது தொழிலாளர் பிரச்சினை, அவர்கள் போராடுவார்கள் என்று இல்லாமல், இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் என்ற புரிதலிலிருந்து அதை வீழ்த்த எல்லா வர்க்கங்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போதுதான் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழத்த முடியும். மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

அமீர்