privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு

தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு

-

ன்பார்ந்த நண்பர்களே!

ஏழு ஆண்டுகளாக “உரிமை கோரப்படாத” தொழிலாளர் வைப்பு நிதி (PF), பொது வைப்பு நிதி (PPF), அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு மற்றும் நிலுவையில் உள்ள கணக்குகளில் உள்ள நிதி ஆகியவற்றை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றிவிடுவதாக ஒரு அறிவிப்பினை மத்திய நிதித்துறை அமைச்சகம் மார்ச் 12-ம் தேதி அன்று வெளியிட்டது. மேலும் ஒரு தொழிலாளி பணியிலிருந்து விலகினால் அவருடைய பி.எஃப் கணக்கில் உள்ள  தொகையை 58 வயது நிறைவடைந்த பிறகுதான் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தொழிலாளர்களுக்கும் சேமிப்பு வைத்துள்ளவர்களுக்கும் இ-மெயில் மூலமாக 60 நாட்களுக்குள் அறிவித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூத்த குடிமக்கள் நல நிதிக்கு திருப்பப்படும் தொழிலாளர்களின் நிதியின் மொத்தத் தொகை 27,000 கோடி ரூபாய்!

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாத்ரேயா தொழிலாளர் அனைவரும் அரசின் பிரதிநிதிகள் என்றும் தொழிலாளர் வைப்பு நிதியை வேறுபயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசுக்கு உரிமையுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைப் பார்க்கும் சாதாரண குடிமக்கள் அனைவரும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூத்த குடிமக்கள் மீதான நல்லெண்ணெத்திலிருந்து மேற்கொள்ளும் சரியான நடவடிக்கை போல தோன்றும். இது உண்மையா?

பக்காத் திருடர்கள் மோடி-தாத்ரேயா கும்பல்!

மோடி - தாத்ரேயா
மோடி – தாத்ரேயா

சாதாரண நடைமுறையில் இருந்து ஒரு கேள்வி எழுப்பினாலே, இந்த மோசடியைப் புரிந்து கொள்ள முடியும். இரு சக்கர வண்டி வாங்கிவிட்டு தவணைத் தொகை கட்டத் தவறியவர்களையும் கடன் கட்டாமல் இருக்கும் விவசாயிகளையும் எந்த வங்கியும் நிறுவனமும் ‘ஆள் ஊரில் இல்லை’ என்ற காரணத்திற்காக விட்டு விடுவதில்லை. அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்துவதுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது, அடியாட்களைக் கொண்டு கட்டச் சொல்லி மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அந்த வகையில், தொகையை பெற்றுக் கொள்ளாத தொழிலாளர்களை தொடர்பு கொண்டு அத்தொகையை ஒப்படைப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல.

உரிமை கோரபட்டாத தொகையிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,650 கோடி ரூபாயும் 2014-15 ஆண்டில் மட்டும் 6,400 கோடி ரூபாயும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க மிச்சமிருக்கும் தொகையை அந்தத் தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாமல் போய்விட்டதற்கான காரணங்கள் என்ன, அந்தத் தொழிலாளர்களைக் கண்டடைந்து ஒப்படைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன என்ற எந்த நடைமுறை பிரச்சனையையும் மத்திய அரசு முன்வைத்து தனது முடிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தொழிலாளர்களால் கோரப்படாத நிதி என்ற ஒரு பெயர் வைத்திருப்பதே அயோக்கியத்தனமானது. ஏனென்றால், ஒரு தொழிலாளி கட்டும் பி.எஃப். தொகை என்பது அவருக்கு உரிய முறையில் எந்த நிறுவனமும் தொடக்கத்தில் அறிவித்து விடுவதில்லை. பலருக்கும் இந்தத் தொகை பற்றி தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தாலும் அத்தொகையை கோரி பெறுவதற்கான வழிவகைகளும் தெரியாத தொழிலாளர்கள் தான் நமது நாட்டின் பெரும்பான்மையினர். மொத்தத்தில் அப்பாவி தொழிலாளர்கள் தங்களது இரத்தத்தை சிந்தி சேர்த்தத் தொகையை, அவர்களால் கோரப்படாத நிதி என்று சொல்வதன் நோக்கமே, அத்தொகையை திருடுவதற்கான அடித்தளமாக இருப்பதை உணரமுடியும்.

முக்கியமாக, 1995-ல் கொண்டு வரப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திலோ, தொழிலாளர் வைப்பு நிதியிலோ அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஆகையால், 7 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத தொழிலாளர் நிதியை எடுப்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

இது மட்டுமல்லாமல், கடந்த 2011-ம் ஆண்டில் இதுபோன்று தொழிலாளர் வைப்பு நிதி கணக்கீடுகளின் மீதான வட்டி வரவை வேறு வகையான பயன்பாட்டிற்கு திருப்ப மத்திய அரசு முயற்சித்த போது தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் தடுத்து நிறுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை செல்லாக்காசாக்கும் மோடி கும்பல்!

தொழிலாளர் வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தங்களது சம்பளத்திலிருந்து மாதாமாதம் செலுத்தும் ஒரு தொகையும் அவருக்கு வேலையளிப்பவர் செலுத்தும் ஒருதொகையும் சேர்ந்ததாகும். இது தொழிலாளர்களின் வாழ்நாள் முழுவதற்குமான சமூக பாதுகாப்புக்கானதாகும். இதில் கை வைக்க அரசுக்கு உரிமையில்லை.

தொழிலாளர் அனுமதியில்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. உரிமைக் கோரப்படாத நிதியை எடுப்பது என்பது வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திற்கே எதிரானது. தொழிலாளர் வைப்ப் நிதியை திருடும் மத்திய அரசின் முடிவிற்கு தொழிலாளர் நலத்துறை, வருங்கால வைப்பு நிதித்துறை அதிகாரிகளே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இத்தனையையும் மீறித்தான் இந்த திருட்டு வேலையை நடத்தி வருகிறது, மோடி-தாத்ரேயா கும்பல். குறிப்பாக, இந்த விசயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் வைப்பு நிதிக்கான அறங்காவலர் வாரியத்தில் கூட இது குறித்து  விவாதிக்கவில்லை.

தற்போது வைப்பு நிதி விவகாரத்தில், தொழிலாளர்களை அரசின் பிரிதிநிதிகள் என்றும் கூறும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாத்ரேயாவோ, தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் சட்டங்களைத் திருத்திய போது, தொழிலாளர்களின் கருத்தைக் கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று நாடுதழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் வேலைநிறுத்தத்தையும் பொருட்படுத்தவில்லை.

மல்லையா
மல்லையா – பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்தாதவர்

கார்ப்பரேட் முதலாளியான மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய தொகையில் ரூ.9000 கோடி திருப்பிக் கட்டாமல் வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றுவதும், இவனுக்கு விசா கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததும், இவனிடம் நீதித்துறை கெஞ்சிக் கொண்டிருப்பதும் உலகம் நாறிக்கொண்டிருக்கும் விசயங்கள். திருபாய் அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பத்ம விருதுகள் கொடுத்து பட்டவர்த்தனமாக தான் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் என்று காட்டிக்கொள்கிறது மோடி அரசு. இந்தப் பின்னணியில், தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை சேர்த்துப் பார்க்க வேண்டும்.

வைப்பு நிதித் திட்டத்தில் உறுப்ப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் 7,43,000. மொத்த உறுப்பினர்கள் 8,87,62,000. மொத்த முதலீட்டுத் தொகை 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய். ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 44 இலட்சம் பேர். இவர்களது ஒட்டுமொத்த வாழ்வையும் சூறையாடி ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதியையும் கொள்ளையடிக்க கார்ப்பரேட் கும்பல் படுவேகமாக செயல்பட்டுக் கொண்டுருக்கிறது. இதற்கு மோடி அரசு பக்கபலமாக செயல்பட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

பார்ப்பனமயமாக்க-மறுகாலனியாக்க நடவடிக்கைகளை முறியடிப்போம்!

வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பார்ப்பன பயங்கரவாத பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல்,  கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்கு இந்தியத் தொழிலாளர்களை பலியிடும் வேலைகளை வேகமாக செய்து வருகிறது. இந்தியாவில் மூலதனமிட ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளைக் கூவி கூவி அழைக்கும் மோடி, இளம் இந்தியா என்ற பெயரில் மலிவான கூலி பெறும் தொழிலாளர்களை உருவாக்குகிறது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மாணவர்களை 8ம் வகுப்பு முதல் கட்டாய உற்பத்தியில் ஈடுபடுத்த இருக்கிறது. இதற்காக குழந்தைத் தொழிலாளர் சட்டத்தையும் திருத்தியுள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளான 8 மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் வழங்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், சங்கம் வைக்கும் உரிமை, நிரந்தர வேலை போன்ற அனைத்து உரிமைகளையும் பறித்து வருகிறது. இதற்காக சட்டத் திருத்தங்கள் செய்து வருகிறது. தொழிலாளர்களின் பி.எப். நிதி கொள்ளையடிக்கும் தற்போதைய மாற்றங்கள் இதன் ஒருபகுதிதான்.

தொழிலாளர்களின் போராட்டம்
தொழிலாளர்களின் போராட்டம்

தனது மறுகாலனியாக்க, தொழிலாளர் விரோதப் போக்குகளை திணிக்க,மோடி தலைமையிலான அரசும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலும் நாட்டில் தொடர்ந்து மதவெறி கிளப்பி வருகிறது. மதக்கலவரங்கள், சாதிக்கலவரங்களைத் தூண்டிவிட்டு தொழிலாளர் வர்க்கத்தை பிளவுப்படுத்தும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளது. பழைய சட்டங்கள் அனைத்தையும் திருத்தி நாட்டை பார்ப்பனமயமாக்கும் வேலையை செய்து வருகிறது.

மோடி அரசின் இந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை. நமது உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே மறுகாலனியாக்கத்தில் தள்ளப்படுவதற்கு எதிராகவும் மீண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காட்டுமிராண்டி நிலைக்கு மனித சமூகமே தள்ளப்படுவதற்கு எதிராகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை.

மே நாளில் மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர்கள் இவ்வாறுதான் தங்கள் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராடி உரிமைகளை நிலை நாட்டினர். அந்தத் தியாகத்தின் பரம்பரை என்ற வர்க்க உணர்வுடன் ஒன்றிணைவோம்! போராடுவோம்!

“உரிமைக் கோரப்படாத நிதி” என்ற பெயரில் தொழிலாளர்களின் பி.எப். நிதியைத் திருடும் மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவோம்!

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து நவீனக் கொத்தடிமையாக்கும் மோடி அரசின் பயங்கரவாத்தை முறியடிப்போம்!

மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்! தொழிலாளர்கள் வர்க்க உரிமைகளை நிலைநாட்டுவோம்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

நாள்: 13-04-2016
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784