பொதும்பு என்பது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஊர். தோழர் பொதும்பு வீரணன் இந்நூலின் நாயகன். இவர் மூலமே மொத்த சம்பவமும் நகர்கிறது. அவர் எழுதிக் கொடுத்த குறிப்புகள்தான் இந்நூலின் இரத்த நாளங்கள்.
தாழ்த்தப்பட்ட குறவர் சாதியைச் சேர்ந்த தோழர் பொதும்பு வீரணன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். 64 பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலில் 33 பக்கங்களே இவரது குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சாதிய இழிவுகளையும் அதிகார வர்க்கம், போலீசின் அடக்குமுறைகளையும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் உறுதியான போராட்டங்களையும் உள்ளது உள்ளபடி மிகவும் எளிய நடையில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூறுகிறார்.
அன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊர்ச் செல்வந்தர்களின் வீட்டு வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதாவது பணக்காரர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களே அனுப்பி வைப்பார்களாம். அப்படி ஒருநாள் வீரணனை அவ்வூரின் பெரும் பணக்காரரான நாகு சேர்வைக்குச் சொந்தமான கோயிலின் கட்டிட வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
படிக்க :
நூல் அறிமுகம் : நேமிசந்த்ரா எழுதிய “யாத் வஷேம்” | தமிழ் இலக்கியா
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
எப்போதெல்லாம் கூப்பிடுகிறார்களோ, அப்போதெல்லாம் பள்ளியைவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்ல வேண்டும். கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கும்பாபிசேகம் அன்று வாழை இலை சோறுபோட்டு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தனது வயதான தாயை அழைத்துக் கொண்டு எல்லோரையும்போல வீரணனும் இலையைப் பெற்றுக் கொண்டு சாப்பிடச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த நாகு சேர்வை, கொதித்தெழுந்து, “ஏண்டா உனக்கெல்லாம் இலைசோறு கேட்குதா, சட்டிமுட்டி கெடக்கலையா?” என்று சாதிவெறியைக் கக்குகிறார். பிறகு, வேறுவழிதெறியாமல் அவரது தாய் தனது முந்தானையில் சாப்பாட்டை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
சாதிவெறி நிலச்சுவான்தார்களிடம் மட்டுமா இருந்தது; விடுதலைக்காகப் போராடிய அன்றைய காங்கிரசு கட்சிக்காரர்களிடமும் இருந்ததை எள்ளி நகையாடுகிறார் தோழர் வீரணன்.
1943-க்கு முன்பு, நாடே சுதந்திர வேட்கையில் பற்றி எரிந்தபோது, இந்தியாவின் பல்வேறு கிராமங்கள் வரை அந்தத் தீ பரவிக் கொண்டிருந்தது. அதில் பொதும்புக் கிராமம் விதிவிலக்கல்ல.
அந்தக் கிராமத்தில் இருசசேர் பரமசிவம் சேர்வை என்பவர் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மறியல்களில் கலந்துகொள்வார். ஊருக்கு வந்தவுடன் வாசக சாலையில் அமர்ந்து, இன்று என்ன நடந்தது என்று ஆர்வத்துடன் பத்திரிகைச் செய்திகளைப் படித்துக் காட்டுவார். அந்த சமயம் பணம் படைத்தோரும் உயர்சாதிக்காரர்களும் வீட்டிற்குள் அமர்ந்திருக்க, தாழ்த்தப்பட்டோர் வெளியில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் தோழர் வீரணன்,
“… உள்ளே இருப்பவர்கள் (வாசக சாலைக்குள்) வெற்றிலை, பொடி போட்டு மூக்கு சிந்தினால் எங்கள் மேல் விழும். நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. யாரும் நிறுத்தச் சொல்லவும் மாட்டார்கள்.
… …. மறியலுக்கு போவோர்களுக்கு மதுரை கொன்னவாயன் சாலையில் இருந்த செட்டியார் தகர செட்டில் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து சாப்பாடு நடக்கும். ஆனால், வரிசையில் நாங்கள் மூன்று பேரும் (தாழ்த்தப்பட்டோர்) உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. தீட்டுப்பட்டுவிடும்.” என்பார்.
வீரணன் எழுத்தில் சிதறும் வெறுப்பும் கோபமும், நாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களிடம் கூட ஒடுக்கப்பட்ட மக்களை சக மனிதர்களாகப் பார்க்கும் ஜனநாயகப் பண்பற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தத்தை அறைந்து சொல்கிறது.
உள்ளூர் அளவில் நிலச்சுவான்தார்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். கூலி விவசாயிகளுக்கு மொட்டை மரக்காலில் நெல் அளந்து கொடுப்பதை கண்டித்து, நியாயமான கூலியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பெரும் பணக்காரர்களிடமிருந்து நிலத்தை பறிமுதல்செய்து நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு போராட்டத்திலும் வீரணன் போன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் நெஞ்சுறுதி அளப்பறியது.
நிலச்சுவான்தார்களுக்கு எதிராக, பண்ணையார்களுக்கு எதிராக, பெரும் முதலாளிகளுக்கு எதிராகப் போராடினால் ‘நம்ம அரசாங்கமே’ என்றாலும் சும்மா விட்டுவிடுமா என்ன?
1948 நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டுவிட்டது. நிலச்சுவான்தார்களின் கொடுமைகளுக்கு எதிராக யார்யாரெல்லாம் போராடினார்களோ அவர்களெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். குறிப்பாக கம்யூனிஸ்டுகளை தேடிக் கண்டுபிடித்து, கிராமப்புறங்களில் மக்கள் கூடும் இடங்களில் தண்டனை கொடுத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்படித்தான் தோழர் பொதும்பு வீரணனும் சில தோழர்களும் போலீசாரிடம் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் அனுபவித்த தண்டனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
படிக்க :
நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
சிறைச்சாலையில் ஒரு நாள் வீரணனையும் இன்னும் இரண்டு தோழர்களையும் அழைத்து, அவர்களுக்குத் தண்டனையாக உரலில் நெல் குத்தச் சொல்கிறான், சிறை வார்டன். அதுவும் பூண் இல்லாத உலக்கையால் இடிப்பதற்கு இன்னும் சிரமமாக இருக்கும். காலையில் ஒரு மூட்டையும் மாலையில் ஒரு மூட்டையும் குத்தி முடிக்க வேண்டும் என்பது உத்தரவு. குத்திக் குத்தி கைகளில் கொப்புளம் ஏற்பட்டு ரணமாகிவிடுகிறது. மறுநாளும் வார்டன் அழைக்கிறான். கொப்புளம் வைத்து வீங்கியிருக்கும் தங்களது கைகளைக் காட்டுகிறார்கள், அப்போதும் விடவில்லை. ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்களல்ல, இப்படியாக மூன்று நாட்கள் நடக்கிறது. கைகளால் உலக்கையை இனிமேலும் பிடிக்க முடியாது என்று புண்ணான கையைக் காண்பிக்கிறார்கள். என்னையா எதிர்த்து பேசுகிறாய்? என்று மாட்டை அடிக்கும் குச்சியைக் கொண்டு மயக்கம் வரும் வரை அடித்து நொறுக்குகிறார்கள். மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் நெல் குத்தச் சொல்கிறார்கள்.
இத்தகைய கொடும் நிகழ்வுகள் ஜுலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் எனும் புத்தகத்தை நினைவுபடுத்துகிறது. ஆளும் வர்க்கமும் போலீசும் உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளை ஒரே மாதிரியாகத்தான் கையாள்கிறார்கள். கம்யூனிஸ்டுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான், தங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பி.சி.ஜோஷி கூறியதை தோழர் வீரணன் பதிவிடுகிறார். “காங்கிரஸ்காரர்கள் ஒரு அடி கொடுத்தால் திருப்பி 10 அடி கொடுங்கள்” என்று.
இன்று நாம் இந்து மதவெறி பாசிச நச்சுச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் தனது வானரப் படைகள்மூலம் நாடு முழுவதும் சாதி, மதக் கலவரங்களை நடத்துகிறது. விவசாயம், தொழில்துறைகளை அழித்துச் சூறையாடுகிறது. தெருவுக்கு தெரு சாகா நடத்தி அடியாட்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு அடி கொடுத்தால் நாம் 100 அடி கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு கம்யூனிஸ்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதும்பு தியாகிகள் இந்நூல் மூலம் உணர்த்தும் பாடம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும் !
நூல் ஆசிரியர் : பொதும்பு வீரணன்
முறைப்படுத்தித் தருபவர் : என்.ராமகிருஷ்ணன்

விலை : ரூ. 60
வெளியீடு : மதுரை புத்தக மையம்,
3/44, பாரதியார் சாலை. தினமணி நகர், மதுரை – 625 018.
செல் : 94869 27364
நூல் அறிமுகம் : வேலன்