கரூர் மாவட்டம், குளித்தலை கடகூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் மோகன். துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளான இவர் வட்டாரக்கல்வி அலுவலரின் அழைப்பின்பேரில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டார்.
மோகனை பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதித்த குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பள்ளிக்கல்வி துறை. ஆனால் இதற்கு பதிலாக, கடகூர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் 2 பேர் மற்றும் அங்கு பணிபுரிந்த உதவியாளர்கள் இருவரையும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது. ஆசிரியர் மோகனையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் 2 வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் 2 உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக்கிளை சார்பாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி குளித்தலை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மோகனின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்டச் செயலாளர், பொருளாளர் உள்பட 7 பேரை மாவட்டக் கல்வி அலுவலர் மதன்குமார் பணி இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் அவர், பலரையும் பணியிடைநீக்கம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.
***
தவறுசெய்த உயர் அதிகாரிகளை தண்டிக்காமல், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உரிமைக்காகப் போராடிய ஆரம்பப்பள்ளி கூட்டணி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை நீக்கம்செய்து தனது குரூரத்தை காட்டியுள்ளது தமிழக அரசு. தனது உரிமைக்காக தனியாக போராடுபவர்களை பணி இடைநீக்கம் செய்வது இந்த அரசு அதிகார வர்க்கத்தின் அன்றாட செயல். ஆனால், தற்போது சங்கத்தை சேர்ந்த ஏழு பேரை நீக்கியது என்பது பாசிச அடக்குமுறையின் ஒரு அங்கமாகும்.
தனிநபர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என தனது அதிகார பலத்தை காட்டிய இந்த அரசு என்கிற அடக்குமுறை கருவி; தற்போது சங்கம் சேர்ந்து போராடுபவர்களையும் மிரட்ட தொடங்கி உள்ளது.
சங்கம் சேர்ந்து உரிமைக்காக போராடுவது என்பது இந்த அரசுக்கு எப்போதும் கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்த கூடிய ஒன்று. அதனால்தான் சங்கம் சேர்வதை தடுக்க பல்வேறு முனைகளில் இருந்து தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது இந்த அரசு. அது திமுக, அதிமுக, பா.ஜ.க போன்ற அனைத்து முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் போராட்டம் இருக்காது; அனைவருக்கும் அனைத்து உரிமையும் கிடைக்கும்; தமிழக மக்களுக்கும் விடியல் கிடைக்கும்; பாசிசத்தை முறியடிக்க திமுக தேவை என பலர் பேசி திரிந்தனர்.
முதலாளித்துவ கட்சிகள் என்றைக்கும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யதானே தவிர, உழைக்கும் மக்களை காக்க அல்ல. தமிழகத்தில் பாசிசத்தை எதிர்ப்பவர்கள் என தங்களை தாங்களே கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இவர்கள்; பாசிச அடக்குமுறையான சங்கம் சேர்ந்து போராடுவதை தற்போது தடுக்க தொடங்கிவிட்டனர். இவர்கள்தான் தமிழகத்தை பாசிசத்தில் இருந்து காக்க வந்தவர்களாம்.